ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டு இறந்த இரவில் என்ன நடந்தது?
மே 25ஆம் தேதி இரவு, ஃபிளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் மினியாபொலிஸ் நகரத்தில் உள்ள கடையில் கள்ள நோட்டை (20 டாலர்) பயன்படுத்தினார் என்ற சந்தேகத்தின்பேரில் அந்தக் கடைக்காரர் காவல் துறையை அழைத்துள்ளார். இதையடுத்து ஜார்ஜ் ஃபிளாய்ட் கைது செய்யப்பட்டார். முதலில் தாமஸ் லேன், ஜே.ஏ.குயெங் ஆகியோர் சம்பவ இடத்துக்குக் காரில் சென்றனர். அங்கு வயது வந்த இரண்டு பயணிகளுடன் ஓட்டுநர் இருக்கையில் ஃபிளாய்டை காரில் போலீஸார் கண்டதாகக் கூறப்படுகிறது. அதிகாரி லேன், ஃபிளாய்டுடன் பேசத் தொடங்கினார். பின்னர் தனது துப்பாக்கியை வெளியே இழுத்து அதை ஃபிளாய்டின் திறந்திருந்த கார் ஜன்னலின் வழி சுட்டிக்காட்டி, அவரது கைகளைத் தூக்கும்படி கூறியுள்ளார். ஆனால், ஃபிளாய்ட் ஸ்டீயரிங் மீது கைகளை வைத்தபோது, லேன் தனது துப்பாக்கியைப் பின்னால் வைத்துவிட்டு, அவரை காரிலிருந்து வெளியேறும்படி கட்டளையிட்டுள்ளார்.
ஃபிளாய்ட் தனக்கு கைவிலங்கு போடுவதை எதிர்த்தார் என்றும், ஆனால் ஒருமுறை அவர் ஏன் கைது செய்யப்படுகிறார் என்று காவலர்கள் சொன்னதால் அவர் ஒத்துழைத்தார் என்றும் கூறப்படுகிறது. தனக்கு ‘கிளாஸ்ட்ரோஃபோபியா’ (அடைத்திருக்கும் இடங்கள் உருவாக்கும் பீதி) எனக் கூறிய ஃபிளாய்டு காரில் ஏற்ற முயலும்போது கீழே விழுகிறார். அப்போது அங்கே இன்னொரு போலீஸ் கார் வருகிறது. அதில் டெரக் சாவின், டொவ் தொவ் ஆகிய போலீஸார் உள்ளே இருக்கின்றனர். கீழே இறங்கிய டேவிட் சாவின், ஏற்கெனவே அங்கே இருந்த போலீஸாருடன் சேர்ந்து ஃப்ளாய்டை காரில் ஏற்ற முயலும்போது ஃப்ளாய்டு மறுபடியும் கீழே விழுகிறார். இரண்டு போலீஸ்காரர்கள் ஃப்ளாய்டின் கையையும் காலையும் பிடித்திருக்க, அவரது கழுத்தின் மீது முழங்காலை வைத்து டெரக் சாவின் அழுத்துகிறார். ஏற்கனவே தனக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா இருக்கிறது எனக் கூறிய ஃபிளாய்டு, என்னால் மூச்சு விட முடியவில்லை” என்று தொடர்ந்து கெஞ்சுகிறார். எட்டு நிமிடங்களுக்கும் மேலாக ஃபிளாய்டின் கழுத்தின் மீது காலை வைத்து அழுத்திக்கொண்டிருக்கிறார் சாவின். ஆறு நிமிடங்களிலேயே ஃபிளாய்டின் உடல் அசைவற்றுப் போகிறது. ஒரு போலீஸ்காரர் ஃபிளாய்டின் நாடியைப் பரிசோதிக்கும்போது துடிப்பில்லை. சம்பவ இடத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. சிறிது நேரத்தில், ஹென்னெபின் கவுண்டி மருத்துவ மையத்தில் ஃபிளாய்ட் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
யார் இந்த ஜார்ஜ் ஃபிளாய்ட்?
மின்னிசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரத்தில் வசித்து வந்த 46 வயதான ஜார்ஜ் ஃபிளாய்ட், கொங்கா லத்தீன் பிஸ்ட்ரோ என்ற ரெஸ்டாரன்டில் பவுன்சராக கடந்து 5 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, அவர் இருந்த வேலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். ஃபிளாய்ட் குறித்து பேசும் ரெஸ்டாரன்டின் உரிமையாளர், “அவரிடம் நல்ல அணுகுமுறை இருந்தது. மக்களை சிரிக்க வைக்க அவர் மோசமாக நடனமாடுவார். எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்” எனக் கூறுகிறார். பள்ளி நாட்களில் கால்பந்து அணியில் நட்சத்திரமாக விளங்கிய ஃபிளாய்ட், 2014ஆம் ஆண்டு தான் ஹூஸ்டர் நகரத்திலிருந்து மினியாபொலிஸ் நகரத்துக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். விளையாட்டின் மீது ஆர்வமாக இருந்த ஃபிளாய்டின் வாழ்க்கை வளர வளர திசை மாறியிருக்கிறது. நீதிமன்ற ஆவணங்களின்படி, ஒரு மனு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 2009ஆம் ஆண்டில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. காலம் அலைக்கழிக்க, ஒரு புது வாழ்க்கையைக் தொடங்க நினைத்த ஃபிளாய்ட் மினியாபொலிஸ் நகரத்தை வந்தடைந்தார். மனைவி, இரண்டு மகள்களை விட்டுவிட்டு தனியாளாக வசித்து வந்த இவரது நாட்களை கொரோனா கால பணி நீக்கம் மேலும் கடுமையாக்கியுள்ளது.
“என்னால் மூச்சு விட முடியவில்லை” என அலறும் ஃபிளாய்ட் என்ற எளிய மனிதனின் குரல் வரலாறுதோறும் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சமூகத்தின் உறங்கும் (அல்லது விழிப்பதற்காக காத்திருக்கும்) மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள், ஊடகங்களால் ஒளிபரப்பப்பட்டு, சமூக ஊடக தளங்களில் வைரலாகியது.

இதனைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நான்கு போலீஸார் ஃபிளாய்ட் இறந்த மறுதினம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிவில் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசாரணையை நடத்த எஃப்.பி.ஐ வரவழைக்கப்பட்டுள்ளது. ஃபிளாய்டின் கழுத்தின் மீது கால்வைத்த டெரக் சாவின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மரணம் மினியாபோலிஸில் போராட்டமாக முதலில் வெடித்தது. இதைத் தொடர்ந்து மினசோட்டா மாகாணம் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், கலிபோர்னியா, நியூயார்க், ஓஹியோ, கொலராடோ உள்ளிட்ட அமெரிக்காவின் பிற மாகாணங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது. அமெரிக்காவின் சிறுபான்மை சமூகமாக கருதப்படும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான இந்த சம்பவம், வெள்ளை இன மக்களையும் போராட்டக்களத்தில் குதிக்க வைத்துள்ளது முக்கியமானது. இனரீதியிலான போராட்டமாகவும், போலீஸாரின் மிருகத்தனத்தை வெளிக்காட்டும் சமீபத்திய குரூர சாட்சியாகவும் விளங்கிய ஃபிளாய்டின் கடைசி வார்த்தைகள், நவீன நூற்றாண்டின் வஞ்சிக்கப்பட்டவர்களின் அடையாளச் சொல்லாக மாறியதில் ஆச்சரியமில்லை. அந்த வார்த்தைகள் அமெரிக்க மண்ணில் ஃபிளாய்ட் என்ற மனிதனின் கடைசி வார்த்தைகள் மட்டும் தானா?

இனரீதியிலான போலீஸ் வன்முறை அமெரிக்காவில் புதிதில்லை. (கடந்த சில வருடங்களை எடுத்துக்கொண்டாலும்) 2014ஆம் ஆண்டில், எரிக் கார்னர் என்ற மனிதனும் இதே வார்த்தைகளைத் தனது மரணத்துக்கு முன்பும் உச்சரித்திருக்கிறார். நிராயுதபாணியான ஆப்பிரிக்க அமெரிக்க மனிதரான கார்னர், இறப்பதற்கு முன் அவரது கழுத்தைப் பிடித்து நெரித்த நியூயார்க் நகரின் ஒரு போலீஸ் அதிகாரியிடம், ‘என்னால் மூச்சு விடமுடியவில்லை’ என 11 முறை உச்சரித்திருந்தார். 2016ஆம் ஆண்டு லூசியானாவில் உள்ள ஒரு கடைக்கு முன் சிடி விற்றுக்கொண்டிருந்த 37 வயதான ஆல்டன் ஸ்டெர்லிங்கை போலீஸார் சுட்டுக்கொன்றது சிறு கலவரமானது.
வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட தரவுகளின்படி, வெள்ளை இன மக்களைவிட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஒரு போலீஸ் அதிகாரியால் கொல்லப்படுவதற்கு 2.5 மடங்கு சாத்தியங்கள் அதிகம் என்று சுட்டிக்காட்டி இருக்கிறது. காவல்துறையினரால் மட்டுமின்றி அமெரிக்க மக்களாலும் வன்முறைக்கும் தாக்குதலுக்கும் ஆளாகி வந்த கறுப்பின மக்களை, ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம், “இனியும் எங்களால் அநீதியை பொறுத்துக்கொள்ள முடியாது” என எழுச்சி அடையவைத்துள்ளது.
மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே, “அமெரிக்காவில் கறுப்பராக இருப்பது மரண தண்டனைக்கு ஒப்பானதாக இருக்கக் கூடாது. ஐந்து நிமிடங்களுக்கு, ஒரு வெள்ளை அதிகாரி தனது முழங்காலை ஒரு கறுப்பு மனிதனின் கழுத்தில் அழுத்துவதைப் பார்த்தோம்… யாராவது உதவிக்கு அழைப்பதை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் உதவ வேண்டும். இந்த அதிகாரி மிகவும் அடிப்படை, மனித அர்த்தத்தில் தோல்வியடைந்தார்” என ஃபிளாய்டின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரேயை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், “அநேகமாக ஒரு நல்ல மனிதர், ஆனால் அவர் ஒரு தீவிரமான, இடதுசாரி மேயர்”.
போராட்டக்காரர்களின் கோபத்தைத் தூண்டிய ட்ரம்ப்
கொரோனாவின் தீவிரத்தைப் போலவே இந்த போராட்டத்தின் வலிமையையும் குறைவாகவே மதிப்பிட்டார் அதிபர் டொனால்டு ட்ரம்ப். தொடர்ந்து போராட்டக்காரர்களை ‘குண்டர்கள்’ என்றும் ‘கும்பல் வன்முறையை நிறுத்துங்கள்’ என்றுமே கூறி அவர்கள் குரல்களைக் கேட்க மறுத்துவிட்டார். ஒவ்வொரு மாகாணமாகப் போராட்டம் பரவிக்கொண்டிருக்க, ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மீது அவரின் கவனம் இருந்தது. ஆனால், அவர் எதிர்பார்க்காத ஒன்று, ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் வாஷிங்டன் டி.சிக்கும் நெருங்கி வந்துவிட்டது என்பதை.

இந்த அணிவகுப்பு வாஷிங்டன் நினைவுச்சின்னத்துக்கும் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சார தேசிய அருங்காட்சியகத்துக்கும் இடையில் இடைநிறுத்தப்பட்டது. மினியாபொலிஸ் போலீஸ் அதிகாரி ஃபிளாய்டின் கழுத்தில் மண்டியிட்டதாகக் கூறப்படும் எட்டு நிமிடங்களை நினைவுபடுத்தும் வகையில் போராட்டக்காரர்கள் தெருவில் அமர்ந்தனர். அப்போதும் ட்ரம்ப் ட்விட்டரில் தனது கூற்றை ஆதரிப்பதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்காமல், “தொழில்ரீதியாக அவர்கள் நிர்வகிக்கப்படுகிறார்கள்” எனக் கூறினார். மேலும், டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையில் ட்ரம்ப் தனது இருப்பைக் காட்டுவதற்காகவே பின்வரும் ட்வீட்டை பதிவிட்டார் என்கிறது. அந்த ட்வீட், “இன்றிரவு, எனக்குப் புரிகிறது, வெள்ளை வீட்டில் MAGA (Make America Great Again) இரவு ???”.
அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கையின்படி, பல எதிர்ப்பாளர்கள் ஓவல் அலுவலகத்தின் முன் வரிசையாக நின்று கல் வீசத் தொடங்கினர். இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை வெள்ளை மாளிகைக்குள் பாதுகாப்பான பதுங்கு குழிக்கு மாற்ற ரகசிய ஏஜென்ட்களை தூண்டியது. ஓவல் அலுவலகத்தில் உள்ள பதுங்கு குழி அமெரிக்க அதிபர்களை பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற உடனடி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிபர் ட்ரம்ப் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் பதுங்கு குழியில் கழித்தார் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உலக வர்த்தக மையத்தின் மீது 9/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், வெள்ளை மாளிகைக்கு நெருக்கடியை ஏற்படுத்திய சம்பவம் இதுதான் என்றும், பாதுகாப்பு எச்சரிக்கையின் முதல் நிலையை 9/11க்குப் பின் அமல்படுத்தப்பட்டது இப்போது தான் என்றும் கூறப்படுகிறது. பதுங்கு குழியில் தனது பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள ட்ரம்ப், அதிகாரிகளைப் பாராட்டி இருக்கிறார் எனச் செய்திகள் வெளியானது.
வாஷிங்டனில் ஆறு எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும், பல அதிகாரிகள் காயமடைந்ததாகவும் ரகசிய சேவை சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. காயங்களின் குற்றச்சாட்டுகள் அல்லது தன்மை குறித்த விவரங்கள் எதுவும் இல்லாமல் இது வெளியானது குறிப்பிடத்தக்கது.
போராட்டக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள்?

புவியியல், வயது, நிறம், அனுபவம் என அனைத்தையும் கடந்து இந்தப் போராட்டம் பலரையும் இணைத்துள்ளது. கொரோனா தாக்குதல், வேலையின்மை, சமத்துவமின்மை, இனரீதியிலான பாகுபாடு என ஒவ்வொருவருக்குள் உள்ள கோபத்தையும் அடக்கப்பட்ட குரலையும் இந்த போராட்டம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. தனிப்பட்ட சமூகமாகக் கருதப்படும் [அமிஷ்](https://en.wikipedia.org/wiki/Amish) இன மக்கள், பைபிளில் கூறாத எதையும் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றுவதில்லை என நவீனத்தைப் புறக்கணித்த Closed Community. தற்போதுதான் இந்த இன மக்களின் பெண்கள் படிப்பதற்காக வெளியே வருகிறார்கள். இவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருவது பண்பாட்டு ரீதியாகவும் இதை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளது.
டான் ஹப்பார்ட், “காவல்துறையினரால், குறிப்பாக கறுப்பின மக்கள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதில் மக்கள் சோர்வாக உள்ளனர். அராஜகம்.”
கிம் பார்கர், “இது போன்ற ஒரு நல்ல நாளில் நான் இன்று இங்கு வருகிறேன். ஏனென்றால் நான் இங்கு வெளியே வரவில்லை என்றால் நாங்கள் அனைவரும் இந்த எதிர்ப்பை காண்பிக்கவில்லை என்றால், பிறகு நாங்கள் என்ன செய்கிறோம்?. நாங்கள் அந்த மனிதனை வீணாக இறக்க அனுமதித்துவிட்டோம்.”
பியாட்ரிஸ் லோபஸ், கல்லூரி மாணவி, “ஒவ்வோர் ஆண்டும் கறுப்பின மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களுக்காக ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க யூனியன் நடக்கும். போலீஸ் மிருகத்தனத்தைப் பற்றிய கவிதைகளை அவர்கள் வாசிப்பார்கள். ஒவ்வோர் ஆண்டும் போலீஸ் மிருகத்தனத்திலிருந்து காலமானவர்களை நினைவுகூரும் ஸ்லைடு காட்சிகளை அவர்கள் செய்வார்கள். அது எனக்குள் எதிரொலித்தது.”
சாட் பென்னட், “ஒருபுறம், இது மிகவும் பயமாக இருக்கிறது. ஏனென்றால் நிறைய குழப்பமான விஷயங்கள் நடப்பதை நான் அறிவேன். மக்கள் காயப்படுகிறார்கள், பொது சொத்துகள் அழிக்கப்படுகின்றன. ஆனால், அதே நேரத்தில், வேறு ஏதோ ஒன்று இதில் உள்ளது.”
பிரான்சிஸ் ரோபில்ஸ், “அந்த வீடியோக்கள் நெருப்பைத் தூண்டின. அதனால்தான் இந்த நேரத்தில் நாடு நெருப்பில் உள்ளது. குற்றவியல் நீதி அமைப்பு, வெள்ளை மேலாதிக்கம் மற்றும் அது மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதில் மக்கள் ஏற்கனவே சந்தேகம் கொண்டுள்ளனர்.”
எரிகா ழான், “இதுபோன்ற இன்னொருவரால் நான் ஒருபோதும் பாதிக்கப்படவில்லை. ஒரு மனிதன் இறப்பதை நான் பார்த்தேன், அதனால்தான். ஆம், ஒரு மனிதன் இறப்பதை நான் பார்த்தேன்.”
ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்துக்கு மன்னிப்பு கோரி மியாமி போலீஸார் போராட்டக்காரர்கள் முன் திங்களன்று மண்டியிட்ட செய்தி ஆறுதல் அளித்தாலும் இதை பொறுத்துக்கொள்ள முடியாத அதிபர் டொலான்டு ட்ரம்ப், “இந்தப் போராட்டங்கள் அமைதிப் போராட்டம் அல்ல. இவை உள்நாட்டு பயங்கரவாதம், அப்பாவி உயிர்களைப் பலி வாங்குவது, அப்பாவிகளின் ரத்தம் சிந்துவது நியாயமற்றது, இது மனிதகுல விரோதம், கடவுளுக்கு எதிரான குற்றம்” எனச் சொற்களை வீசுகிறார். மேலும், “அப்பாவி மக்களின் சொத்துகளை சூறையாடுவோர் கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்” எனவும் எச்சரிக்கை விடுக்கிறார். காவல்துறையினருக்கும் மாநில ஆளுநர்களுக்கும் அழுத்தத்துக்கு மேல் அழுத்தம் கொடுக்கும் ட்ரம்ப், “அமைதியைக் கொண்டுவராவிட்டால், அமெரிக்க நகரங்களில் ஆயிரக்கணக்கில் ராணுவத்தை இறக்கிவிடுவேன்” என மிரட்டல் விடுக்கிறார். ரிபெக்கா சோல்னிட் என்ற கட்டுரையாளர் கார்டியன் பத்திரிகையில் எழுதும்போது, “அசையும் விரல்களில் பெரும்பாலானவை பொதுச் சொத்து அழிவதைப் பற்றித்தான். சிலர் பொது இடத்தில் நடந்த கொலையைக் காட்டிலும் உடைந்த கண்ணாடியைப் பற்றி வருத்தப்படுவது திகைக்க வைக்கிறது” என்கிறார்.
கடந்த சனிக்கிழமை (மே 30)இரவு போராட்டத்தின்போது நடந்த அதிர்ச்சியூட்டும் விஷயங்களில் ஒன்று, பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடந்த நேரடியான திட்டமிட்ட வன்முறை. நிருபர்கள் பணிபுரியும்போது கைது செய்யப்பட்டுள்ளனர், தரையில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். மிளகு ஸ்பிரே அடிக்கப்பட்டும் ரப்பர் தோட்டாக்களால் தாக்கப்பட்டும் ஒளிபரப்பும்போது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. புகைப்பட ஜர்னலிஸ்ட் லிண்டா டிராடோ என்பவர் போலீஸாரால் சுடப்பட்டு பார்வை இழந்துள்ளார். இதைத் தொடர்ந்து, பன்னாட்டுப் பத்திரிகையாளர் நடுவம், “ஒரு பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தினால் கூட அது உலகில் உள்ள எல்லாப் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்துவதற்குச் சமம்” எனத் தெரிவித்துள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை மக்களின் குரலும் இதுதான், “குடிமக்களான எங்களில் ஒருவரை காவல்துறை கொல்வது, ஒட்டுமொத்தமாக எங்களைக் கொல்வதற்குச் சமம்”.
முகேஷ் சுப்ரமணியம்