ஜோதிமணி மீது நடவடிக்கையா?: செல்வப்பெருந்தகை பேட்டி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை குற்றம்சாட்டி ஜோதிமணி பதிவு போட்டிருக்கும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார்.

“ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழக காங்கிரஸ் அழிவின் பாதைக்கு செல்கிறது. ராகுல் காந்தியின் அரசியலுக்கு நேர் எதிராக தமிழக காங்கிரஸ் செல்கிறது” என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், “மரியாதைக்குரிய சகோதரி… அன்பிற்குரிய சகோதரி… அவ்வளவுதான் தெரியும் எனக்கு.

ADVERTISEMENT

அவர்தான் வேலை பார்க்க வேண்டும். பிஎல்ஏ 2 எல்லா இடத்திலும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவருடைய மாவட்டத்திலேயும், அவருடைய தொகுதியில் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் வருகிறதோ, அங்கு பிஎல்ஏ-2 வை நியமிக்கும் முழு அதிகாரமும் ஜோதிமணிக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இப்போது ஒரு படிவம் விட்டுபோய்விட்டது என்று சொன்னார். அதையும் அனுப்பியிருக்கிறோம்.

ADVERTISEMENT

அவர், கட்சியின் ஒரு முக்கிய தூண். சில நேரங்களில் கோபத்திலோ அல்லது சங்கடத்திலோ இது போன்ற கருத்துகளைப் பதிவிட நேரிடலாம்.

ஜோதிமணி எதற்காக இது போன்ற ஒரு ட்வீட்டை பொதுவெளியில் பதிவிட்டார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. குறைகள் இருந்தால் என்னிடம் அல்லது கட்சி மேலிடப் பொறுப்பாளரிடம் நேரடியாகப் பேசியிருக்கலாம்.

எல்லோரையும் அரவணைத்துதான் செய்துகொண்டிருக்கிறேன். குறைகள் சொல்வார், அதை சரி செய்து கொடுப்பேன்.

அவருடைய மாவட்டத்தில் உட்கட்சி பிரச்சினை இருக்கிறது. ஒரு மாவட்டத் தலைவர் தவறாக பேசினார். இந்த பிரச்சினைக்கு தீர்வும் கண்டிருக்கிறேன். என் மனசாட்சிக்கு உட்பட்டு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறேன். தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

இந்த ட்வீட் ஏன் போட்டார் என்று தெரியவில்லை. என்னிடம் சொல்லியிருக்கலாமே.24 மணி நேரமும் செயல்பட்டு கொண்டிருக்கிறேன்.

அழிவின் பாதையில் காங்கிரஸ் இருக்கிறது என எப்படி சொல்கிறார் என்று எனக்கு தெரியவில்லை” என்றார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, “கட்சியில் அவர் ஒரு முக்கியமான தூண். முதன்மையான தலைவர். அவருடைய பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அவரிடம் பேசி குறைகளைச் சரிசெய்யத் தயாராக இருக்கிறேன். ஜோதிமணியிடம் பேசிவிட்டு என்ன பிரச்சினை என்று சொல்கிறேன்.

கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மற்றும் கிராம கமிட்டி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது’ என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share