1967 -1977 அரசியல் மாற்றம் 2026-ல் சாத்தியமா?

Published On:

| By Minnambalam Desk

Anna MGR Vijay

ஜாசன்

தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் என்ற விஜய் சமீப காலமாக 1967 மற்றும் 1977 தேர்தல வெற்றியை 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த மண்ணில் மீண்டும் காணப்போகிறோம் என்கிறார். 1967 சட்டமன்றத் தேர்தல் 1977 சட்டமன்றத் தேர்தல் ஆகிய இரண்டுமே மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது உண்மைதான்.

ADVERTISEMENT

1967 தேர்தல் தேசியக் கட்சியான காங்கிரஸ் சகாப்தத்தை தமிழ்நாட்டில் முடித்து வைத்தது. அதன் பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை.

1967 தேர்தலின் கதாநாயகன் பேரறிஞர் அண்ணா. 1977-ல் கட்சி தொடங்கிய சில ஆண்டுகளில் எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார். இவை இரண்டும் அரசியல் வரலாறு.

ADVERTISEMENT

1967 தேர்தலில் என்ன நடந்தது என்று பார்ப்போம். அன்றைய காங்கிரஸ் அரசின் அடக்குமுறை உள்ளிட்டவைகளை சமாளித்து திமுக ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்று சாதித்தார் பேரறிஞர் அண்ணா. அந்த தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் அனைவருமே சாமானியர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள். ஆனால் படித்தவர்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் பஸ் முதலாளிகள், மிராசுதாரர்கள், பணக்காரர்கள் அவர்களை சமாளித்து 1967-இல் திமுக ஆட்சியைப் பிடித்தது.

இந்திய அரசியலில் முதல்முறையாக ஆளுங்கட்சிக்கு எதிராக மிகப்பெரிய பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கினார் அண்ணா. எதிரும் புதிருமாக இருந்த அரசியல் கட்சிகளை, ஒரே கூட்டணியில் சேர்ப்பதில் வெற்றி பெற்றார் அண்ணா. அது ஒரு வெற்றி கூட்டணி.
1967 தேர்தல் என்பது ஒரு அரசியல் சுனாமி என்று கூட சொல்லலாம். மத்திய காங்கிரஸ் அமைச்சர்கள் ஏழு பேர் மாநில அமைச்சர்கள் எட்டு பேர் என்று போட்டியிட்ட 15 பேரில் 14 பேர் தோல்வியடைந்தனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் சொந்த ஊரான விருதுநகரில் தோற்கடிக்கப்பட்டார். இதற்கு காரணம் அண்ணா மற்றும் கலைஞர் உள்ளிட்ட அவரது படையினரின் அரசியல் வியூகம்.

ADVERTISEMENT

திராவிட முன்னேற்ற கழகம் கடவுள் எதிர்ப்பு கட்சி நாத்திகம் பேசும் என்ற விமர்சனம் இருந்த காலத்தில் மூதறிஞர் ராஜாஜி அந்த தேர்தலில் பிராமணர்களை பூணூலை கையில் பிடித்துக் கொண்டு திமுகவுக்கு ஓட்டு அணியுங்கள் என்று பிரச்சாரம் செய்தார்.

அந்த தேர்தலின் போது எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது.
அப்போது அண்ணா “நீ பணம் எதுவும் தர வேண்டாம் முகத்தைக் காட்டினால் போதும்” என்றார்.குண்டடி பட்டு மருத்துவமனையில் எம்ஜிஆர் இருக்கும் போஸ்டர்கள் மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டன. இவையெல்லாம் சேர்ந்து ஏற்படுத்திய அரசியல் சுனாமியில் தான் காங்கிரஸ் தமிழ்நாட்டில் காணாமல் போனது.

காமராஜர் கல்லூரி மாணவர் பெ.சீனிவாசனிடம் தோற்றுப் போனார். மத்திய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதனிடம் தோற்றுப் போனார். மத்திய அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பதவியை ராஜினாமா செய்து வேட்பாளராக நிறுத்தப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரத்திடம் தோற்றுப் போனார். இப்படி காங்கிரஸ் பெருந்தலைவர்கள் சாதாரண திமுக தொண்டர்களிடம் தோற்றுப் போனார்கள். இன்னும் 50 ஆண்டுகளுக்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வரக்கூடாது என்று சொல்லி அண்ணாவும் அவரது தம்பிமார்களும் தேர்தல் வியூகம் வகுத்து அதில் வெற்றியும் பெற்றனர்.

1977 ல் அதிமுக பெற்ற வெற்றிக்கும் முன்பு திண்டுக்கல் இடைத்தேர்தல் வரலாறு தெரிந்து கொள்வது அவசியம். அண்ணா திமுக என்ற புதிய கட்சிக்கு வைக்கப்பட்ட சோதனை தான் திண்டுக்கல் இடைத்தேர்தல். இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ், பழைய காங்கிரஸ் இவைகளுடன் புதிதாக தொடங்கப்பட்ட அதிமுகவும் களத்தில்.

திமுக சார்பில் பொன் முத்துராமலிங்கம் போட்டி போட்டார். அதிமுக சார்பில் மாய தேவர். இருவரும் வழக்கறிஞர்கள். பரஸ்பரம் பரிச்சயம் ஆனவர்கள். ஆனாலும் எதிரெதிர் வேட்பாளர்கள். அதிமுகவுக்கு ஓட்டு கேட்டவர்கள் சிறுவர்கள் இளைஞர்கள், அவர்களுடன் சிவப்பு துண்டு போட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள். அந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார். திண்டுக்கல் தேர்தல் எம்ஜிஆர்-க்கு மக்கள் தந்த அங்கீகாரம். அதிமுகவுக்கு தமிழக மக்கள் தந்த அங்கீகாரம்.

1977-ஆம் ஆண்டு தேர்தல் என்பது ஒரு வரலாறு. எம்ஜிஆர் தனி கட்சி தொடங்கிய பின் நடந்த தேர்தல் அது. எதிர்க்கட்சிகள் எம்ஜிஆரை எதிர்த்து பிரச்சாரம் செய்த போது சொன்ன மிக முக்கியமான செய்தி எம்ஜிஆருக்கு பொருளாதாரம் தெரியுமா ? பொருளாதாரம் தெரியாதவர் எப்படி ஆட்சி நடத்த முடியும் ? நடிகரால் நாடாள முடியுமா ? அரசியலில் வேஷம் போட முடியாது. சினிமா நடிப்பு, அரசியல் உண்மை, ஆட்சி செய்வது என்பது அவ்வளவு எளிதான பணி அல்ல என்றெல்லாம் எம்ஜிஆரை எதிர்த்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஆனாலும் எம்ஜிஆரின் கூட்டங்களுக்கு மக்கள் பெருந்திரளாக கூடினார்கள். அந்தக் கூட்டங்களில் “எனக்கு பொருளாதாரம் தெரியுமா என்று பலர் கேட்கிறார்கள். அவர்கள் கேட்பது சரிதான். அதை நான் தவறு என்று சொல்ல மாட்டேன். அவர்கள் எல்லோரும் என்னைவிட படித்தவர்கள். அரசியல் அனுபவசாலிகள். ஆட்சி அனுபவம் கொண்டவர்கள். அவர்களுக்கு பொருளாதாரம் தெரிந்திருக்கும் அதை நான் மறுக்கவில்லை.

நல்லாட்சி என்பது ஆட்சி செய்பவர்களின் பொருளாதாரக் கொள்கை தொடர்புடையது என்பது எனக்கு தெரியும். மக்கள் மகிழ்ச்சி என்பது நமது பொருளாதாரக் கொள்கை சம்பந்தப்பட்டது என்ற அடிப்படையும் எனக்கு தெரியும். பொருளாதாரக் கொள்கையை ஆட்சி திட்டமிட்டாலும் அதை செயல்படுத்துவதில் பொதுமக்களுக்கு பெரும் பங்கு உண்டு. பொருளாதாரம் மேம்பட என்ன செய்ய வேண்டும் ? உழைக்க வேண்டும். உழைப்பினால் கிடைக்கும் உயர்வு என்பது தனி மனிதன் உயர்வு மட்டும் அல்ல மக்கள் உயர்வு என்பதுதான் பொருளாதார உயர்வு. அந்த நாட்டின் உயர்வு. உழைப்பில் கிடைக்கும் வருமானத்தில் நமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்த பின் கொஞ்சம் சேமிக்க வேண்டும். அவர்களின் சேமிப்பு வாழ்க்கை வளத்தை உயர்த்தும்.

அந்த சேமிப்பு முதலீடாக வளரும். அது அந்த நாட்டிற்கு நல்லது தானே. என் ஆட்சி ஏழை மக்களுக்கு அரணாகவும், மேல் தட்டு மக்களுக்கு நண்பனாகவும் இருக்கும் .நீங்கள் எனக்கு ஆட்சி செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள் “என்று பொறுமையாக விளக்கம் சொன்னார்.

எம்ஜிஆர் அரசியலில் வெற்றி பெற்றதற்கு அவர் ஒரு சினிமா நடிகர் என்பது மட்டும் காரணம் அல்ல. அவரது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு. விமர்சனங்களையும் தாண்டி அரசியலில் உழைத்தவர் அவர். சினிமா நடிகர் அரசியலில் வெற்றி பெற்றார் என்பது மட்டும் உண்மை அல்ல.அப்படி இருந்தால் எல்லா நடிகர்களும் அரசியலில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் வரலாறு அப்படி அல்ல.

இதை ஜோசப் விஜய் என்கின்ற விஜய்க்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது. அண்ணாவும் எம்ஜிஆரும் அரசியல் மாற்றங்களின் நாயகர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு :- jasonja993@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share