சென்னையில் செயின் பறிப்பு சம்பவம் என்பது தொடர்கதையாகி வருகிறது. இதில் கடந்த 25ஆம் தேதி சென்னையில் சினிமாவை மிஞ்சும் வகையில் ஒரு மணி நேரத்தில் 6 இடத்தில் இரானிய கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். irani theives chain snatching
அன்றைய தினம் காலை 6 மணியளவில் சைதாப்பேட்டையைச் சேர்ந்த இந்திராவிடம்(54) பைக்கில் வந்த இரானிய கொள்ளையர்கள், அவர் போட்டிருந்த ஒன்றரை பவுன் செயினை நொடியில் பறித்துக்கொண்டு அங்கிருந்து பறந்தனர்.
அடுத்தடுத்து கொள்ளை… irani theives chain snatching

அடுத்ததாக 6.30 மணியளவில் சாஸ்திரி நகர் காமாட்சி மருத்துவமனை அருகே அம்புஜம்மாள்(66) என்பவரின் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
அடுத்த 15 நிமிடத்தில், அதாவது 6.45 மணிக்கு திருவான்மியூர் இந்திரா நகரில் நடந்து சென்று கொண்டிருந்த லட்சுமியிடம்(54) 8 பவுன் செயினை பறித்துக்கொண்டு எஸ்கேப் ஆனார்கள்.
7 மணிக்கு கிண்டி எம்.ஆர்.சி.நகரில் நிர்மலா(60) என்பவரிடம் 10 சவரன் நகையை பறித்துக்கொண்டு பைக்கில் வேகமாக சென்றுவிட்டனர். நிர்மலா கத்திக்கொண்டே பின்னால் ஓடியும் எந்த பலனும் இல்லை.
அடுத்த 10 நிமிடத்தில் அதாவது 7.10 மணிக்கு, வேளச்சேரி டான்சி நகரில் விஜயா(72) என்ற மூதாட்டியிடம் செயினை பறித்த கொள்ளையர்கள்,
வேளச்சேரி விஜயநகர் பகுதியில் முருகம்மாள்(55) எனபவரிடம் 3 சவரன் நகையை பறித்துக்கொண்டு எஸ்கேப் ஆனார்கள்.
மொத்தமாக சுமார் ஒரு மணி நேரத்தில் 6 பெண்களிடம் 26 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு விமானம் மூலம் சென்னையில் இருந்து தப்ப முயன்றனர்.
இவர்கள் குறிவைத்த பெண்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள்.

சென்னையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்த போது,
“இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சல்மான் உசேன் இரானி, ஜாபர் குலாம் உசேன் இரானி, மிசாம் மஜாதுஷ்மேசம் இரானி ஆகிய மூன்று கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
முதலில், கர்நாடகாவைச் சேர்ந்த சல்மான் உசேன் இரானி என்ற கொள்ளையன் பைக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் வந்து காத்திருக்கின்றான்.
ஜாபர் குலாம் உசேன் இரானி, மிசாம் மஜாதுஷ்மேசம் இரானி இருவரும் மும்பையில் இருந்து சென்னைக்கு தனி தனி விமானம் மூலம் வந்தனர். இவர்கள் விமான நிலையத்திலேயே தங்களது உடையை மாற்றிக்கொண்டனர்
ஏற்கனவே விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்த சல்மான் உசேன் இரானியிடம், இருவரும் தாங்கள் வைத்திருந்த பையை கொடுத்துவிட்டு, அவனிடம் இருந்த பைக்கை வாங்கிக்கொண்டு குறிப்பிட்ட ஒரு இடத்தை சொல்லி அங்கு காத்திரு என்று அனுப்பி வைத்துவிட்டனர்.
தொடர்ந்து அங்கிருந்து இருவரும் பைக்கில் கிளம்பினர். ஜாபர் குலாம் பைக்கை ஓட்ட, மிஜாம் பின்னாடி அமர்ந்துகொண்டான்.
அனைத்து இடத்திலும் செக் irani theives chain snatching

ஏர்போர்ட்டில் இருந்து சைதாப்பேட்டைக்கு வந்து அங்கு ஒரு பெண்ணிடம் கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்து சாஸ்திரி நகர், திருவான்மியூர், வேளச்சேரி என அடுத்த ஏரியாவுக்கு சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டனர்.
பொதுவாக சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது, எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் குற்றச் சம்பவங்கள் குறித்து குரல் எழுப்புவார்கள் என்பதால் தமிழக போலீசார் மாநிலம் முழுவதும் இரவு பகலாக அலர்ட்டாக இருப்பார்கள்.
அப்படிதான் அன்றைய தினம் முதல் சம்பவம் நடந்து சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் வந்ததும், உடனடியாக துணை ஆணையர் பொன் கார்த்திக், கூடுதல் ஆணையர் கண்ணன் ஆகியோர் அலர்ட் செய்தனர்.
தொடர்ந்து இணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி, கூடுதல் ஆணையர் கண்ணன் ஆகியோர் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை, சிசிடிவி கேரமராக்களை ஆய்வு செய்தனர்.
இந்தசூழலில் சென்னை காவல் ஆணையர் அருணுக்கு தகவல் தெரிந்ததும் சென்னை சிட்டி முழுவதுமாக அலர்ட் செய்தார். அனைத்து சிக்னல்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர்.
இன்னொருபக்கம் சைபர் கிரைம் போலீசார் செல்போன் நெட்வொர்க்குகளை ஆராய்ந்தனர். மற்றொரு டீம் விமான நிலையத்தில் இருந்து முதலில் கொள்ளை சம்பவம் நடந்த இடமான சைதாப்பேட்டை வரை இருக்கும் சிசிடிவி கேமராக்களை கண்ட்ரோல் ரூமில் இருந்து ஆராய்ந்தது.
அப்போது கொள்ளையர்கள் பைக்கில் செல்லும் வீடியோவையும், புகைப்படத்தையும் எடுத்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பினர்.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், ஆந்திரா பார்டர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட போலீசாரை அலர்ட் செய்தார்.
இதுதவிர, சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களும் அலர்ட் செய்யப்பட்டது.
போலீசாரின் தொடர் விசாரணையில் கொள்ளையர்கள் ஜாபரும், மிஜாமும் பைக்கிலேயே ஏர்போர்ட் சென்றது தெரியவந்தது. அதற்கு முன்னதாக இவர்கள் சொன்ன இடத்தில் காத்திருந்த சல்மானிடம் பைக்கை கொடுத்துவிட்டு, உடைகளை மாற்றிக்கொண்டு விமான நிலையத்துக்குள் தனி தனியாக சென்றனர்.
இந்தசூழலில் விமான நிலையத்தில், கடைசி நேரத்தில் அவசரமாக டிக்கெட் எடுத்த பயணிகளின் விவரங்களை போலீசார் ஏர்போர்ட் அதிகாரிகளிடம் கேட்டு பெற்றனர். அப்போது இரண்டு பேர் கடைசி நேரத்தில் வாங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதில் ஒருவர் ஹைதராபாத் செல்லும் விமானத்தில் பயணிக்கவும், இன்னொருவர் மும்பை செல்லும் விமானத்தில் பயணிக்கவும் டிக்கெட் எடுத்திருந்தனர்.
இதையடுத்து ஹைதராபாத் புறப்படவிருந்த விமானத்தில் ஏறி அமர்ந்திருந்த ஜாபர் குலாமை, சென்னை மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி சென்று பிடித்தார்.
அதுபோன்று மும்பை செல்வதற்காக டிக்கெட் எடுத்திருந்த மிஜாமை, செக்கிங் செய்யும் இடத்திலேயே போலீசார் பிடித்தனர்.
ஜாபர் சொன்ன வார்த்தை irani theives chain snatching
இருவரையும் பிடித்து வந்து, செயின் பறிப்பின் போது பயன்படுத்தப்பட்ட பைக் எங்கே? உங்களுடன் வேறு யாரேனும் வந்தார்களா? என விசாரித்தனர்.
அதற்கு அவர்கள், “எங்களுடன் சல்மான் உசேன் வந்தான். அவன் சென்ட்ரலில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் ரயிலில் செல்கிறான்” என்று தெரிவித்திருக்கின்றனர்.
இந்த தகவலை ரயிலில் செல்லும் போலீசாரிடமும், ஆந்திரா போலீசாரிடமும் கூறி அலர்ட் செய்தனர்.
இந்தசூழலில் ஆந்திர மாநிலம் ஓங்கோல் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது, சல்மான் உசேனை ரயில்வே போலீசார் பிடித்தனர். அவனை இங்கிருந்து சென்ற போலீசார் சென்னை அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கொள்ளையடித்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் இரண்டு சவரன் நகை ஜாபர் குலாமிடமும், மீதமுள்ள 24 சவரன் நகை ரயிலில் சென்ற சல்மானிடமும் இருந்தது.
கொள்ளையர்களை ஜீப்பில் ஏற்றியபோது, அங்கிருந்த போலீசாரிடம் ஜாபர், ‘தமிழ்நாடு போலீஸ் வெரிகுட் போலீஸ்… வொர்க் வெரி குட் ஸ்பீடு’ என அவனுக்கு தெரிந்த ஆங்கிலத்திலும், இந்தியிலும் பயமே இல்லாமல் சொன்னான்.
இதையடுத்து ஜாபரிடம் துணை ஆணையர் பொன் கார்த்திக் ஆலோசனைப்படி, திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி விசாரணை நடத்தினார்.
தற்போது இந்தியாவில் எல்லா காவல்நிலைய நெட்வொர்க்கும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெயரை போட்டாலே ஒரு குற்றவாளி மீது எந்த மாநிலத்தில் எந்த காவல்நிலையத்தில் வழக்கு இருக்கிறது என தெரியவந்துவிடும்.
எனவே, ஜாபர் விமான நிலையத்தில் டிக்கெட் வாங்குவதற்காக பயன்படுத்திய ஐடி ப்ரூஃபில் இருந்த பெயரை வைத்து செக் செய்த போது, 4 மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்தந்த காவல் நிலையத்துக்கும் தொடர்புகொண்டு ஜாபர் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது வேறு மாநில போலீசார், ‘இவன் பெரிய குற்றவாளி… பிடிக்கவே முடியாது’ என்று தெரிவித்தனர்.

இதையடுத்து ஜாபர் மீது மட்டும் தனி கவனம் செலுத்தி விசாரித்தனர் சென்னை போலீசார். இதற்கு முன் சென்னை வந்திருக்கிறாயா என ஜாபரிடம் விசாரித்தபோது, 2017ல் வந்திருப்பதாக சொன்னான்.
அதன்பிறகு குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக் எங்கிருக்கிறது என்று விசாரித்து போது, தரமணி ரயில்நிலைய பாலத்துக்கு கீழே நிறுத்தியிருப்பதாக கூறினான்.
அங்கு அழைத்து சென்று விசாரித்த போதுதான் ஏற்கனவே அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டான். பாதுகாப்புக்காக போலீசாரும் திரும்பி சுட்டனர்” என்றார்கள் காவல்துறை வட்டாரங்களில்.
இந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த ஜாபரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மற்ற இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டியிடம் 4 பவுன் செயின் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் பிதர் மாவட்டத்தில் தங்கியிருந்த முகமது ஆசிப் அலி, ஷபிஷேக் ஆகிய இரானி கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.