கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்காவின் Al Udeid விமானப் படை தளத்தை தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. Iran U.S. Airbase Qatar
இஸ்ரேல்- ஈரான் இடையேயான யுத்தத்தில் அமெரிக்காவும் இணைந்தது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து அமெரிக்காவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆனால், அமெரிக்காவின் தாக்குதலால் தங்களது அணுசக்தி நிலையங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரான் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்காவின் Al Udeid விமான படை தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணைகள் சிலவற்றை அமெரிக்கா இடைமறித்து தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அமெரிக்காவின் விமான படை தளத்தை ஈரானின் சில ஏவுகணைகள் தாக்கியதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஈரான் மீது அமெரிக்காவின் போர் விமானங்கள் மீண்டும் தாக்குதல் நடத்தக் கூடும் என தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து கத்தார் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகள் தங்களது வான்பரப்பை மூடுவதாக அறிவித்தன. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே கத்தாரில் அமெரிக்காவின் விமான படை தளம் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.