இஸ்ரேலுடன் யுத்த நிறுத்தம் தொடர்பாக எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.Iran Denies Ceasefire Deal with Israel
ஈரான் அணுசக்தி நிலையங்களை தாக்கி அழிக்கும் வகையில் கடந்த ஜூன் 13-ந் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் ஈரான் மீதான இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். ஈரானின் புரட்சி காவல் படை தளபதிகள், அணு விஞ்ஞானிகள் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை இலக்கு வைத்து ஈரான் சரமாரியாக ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. ஈரானின் உக்கிரமான தாக்குதலில் இஸ்ரேல் உருக்குலைந்தது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதனால் இஸ்ரேல்- ஈரான் இடையேயான யுத்தம் உச்சகட்டத்தை எட்டியது.
அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில், கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்காவின் விமான படை தளத்தை ஏவுகணைகளால் தாக்கி அழித்தது ஈரான். இது அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்தது. இதேபோல ஈராக்கில் உள்ள அமெரிக்கா ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய அடுத்த சில மணிநேரங்களிலேயே, இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டது என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சயீத் அப்பாஸ் அராக்சி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இஸ்ரேல்தான் ஈரான் மீது யுத்தத்தை தொடங்கியது. இஸ்ரேலுடன் எந்த ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தமும் இதுவரை கையெழுத்திடப்படவில்லை. ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தினால் அதற்கு பதில் தரும் வகையில் எங்களது நடவடிக்கைகள் இருக்கும். ஈரானின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தாலும், இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் வரை தங்களது பதிலடியும் நீடிக்கும் என்பது ஈரானின் நிலைப்பாடு. இதனால் போர் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.