முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் டாக்டர் நாகசாமி இன்று (ஜனவரி 23) காலமானார்.
இந்திய வரலாறு, தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞரான ஆர்.நாகசாமி 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.
இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழியில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தார். பின்னர் டெக்கான் கல்லூரியில் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் துறையில் பயிற்சி எடுத்த இவர் 1959 ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக பணியிலிருந்தார்.
1963 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய இவர், 1966 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநராக பணியாற்றியவர்.
இவரது பணிகளைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 2018ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது. சேக்கிழாரின் பெரியபுராண வரலாற்றுப் பாதை குறித்து ஆய்வுப் பணிக்காகத் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் நாகசாமி பெற்றார்.
இது மட்டுமின்றி இசை, நாட்டியம், தமிழ் வரலாறு ஆகியவை குறித்து ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நூல்களையும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது இல்லத்தில் நாகசாமி இன்று காலமானார். அவருக்கு வயது 91.
அவரது மறைவுக்கு தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
**-பிரியா**
