ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பதற்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சத்யபிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை சென்னை சேப்பாக்கம் மைத்தனத்தில் நடைபெறும் போட்டிக்கு ஆன்லைன் மூலமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது.
ஆனால், விற்பனை செய்த சிறிது நேரத்திலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. சில சமூக விரோதிகள் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கிக்கொண்டு அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கின்றனர்.
சமீபத்தில் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 5 பேரை போலீஸ் கைது செய்தது. எனவே இந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விதிகளை மீறி செயல்பட கூடிய மைதான அதிகாரி மற்றும் கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ”விளையாட்டு போட்டி முடியும் நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்பே நீதிமன்றத்தை மனுதாரர் நாடியிருக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும்(பிசிசிஐ), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
நிர்மலா தேவி தலைமறைவு? : வழக்கு ஒத்திவைப்பு!
’லோகேஷ், அட்லீ தான் என் வாத்தியார்கள்’ : ஹரியின் பதிலால் ரசிகர்கள் ஆச்சரியம்!