அபுதாபியில் இன்று (டிசம்பர் 16) 19வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் 19ஆவது சீசனை முன்னிட்டு 1390 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், பிசிசிஐயால் இறுதி செய்யப்பட்ட 350 பேர் கொண்ட பட்டியலுடன், கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்ட 19 வீரர்களையும் சேர்த்து தற்போது மொத்தம் 369 வீரர்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றனர். இவர்களில் 246 பேர் இந்தியர்கள், 113 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
அபுதாபியில் உள்ள எதிஹாட் அரினாவில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கி ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த மினி ஏலத்திற்கான அணிகளின் மொத்த ஏலத்தொகை 237.55 கோடி.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அதிகபட்சமாக 64.30 கோடி ரூபாயுடன் ஏலத்தில் பங்கேற்கிறது. தமிழ்நாட்டின் ஆதர்ச அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43.40 கோடி ரூபாயுடன் இரண்டாவது அதிகபட்ச தொகையுடன் உள்ளது
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.25.50 கோடி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.22.95 கோடி, டெல்லி கேபிடல்ஸ் ரூ.21.80 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.16.40 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.16.05 கோடி, குஜராத் டைட்டன்ஸ் ரூ.12.90 கோடி, பஞ்சாப் கிங்ஸ் ரூ.11.50 கோடி, மும்பை இந்தியன்ஸ் ரூ. 2.75 கோடியுடன் உள்ளன.
இந்நிலையில் ஏலம் தொடங்கியதும், ஆஸ்திரலிய அணியின் இளம் வீரரான ஜேக் ஃப்ரேஸர் மெக்கரிக் ஏலம் விடப்பட்டார். அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஏலம் விட்டபோதும் அவரை எந்த அணியும் வாங்காததால் அன்சோல்டு ஆனார்.
தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லரை அடிப்படை ஏலம் விலையான ரூ.2 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது. இவர் கடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியிருந்தார்.
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை ரூ. 25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி வாங்கியுள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு வெளிநாட்டு வீரர் ஏலத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச தொகையாகும்.
கேமரூன் கிரீனை ஏலத்தில் எடுப்பதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 14 கோடியில் இருந்து 22 கோடி வரை போட்டியிட்டது சிஎஸ்கே. ஆனால் இறுதியில் கொல்கத்தா கேமரூனை எடுத்துவிட்டது.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவை 2 கோடிக்கு லக்னோ வாங்கியது.
வெங்கடேஷ் ஐயர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட பிறகு, இந்த மினி ஏலத்தில் அவர் ரூ.7 கோடிக்கு ஆர்சிபி அணிக்குச் சென்றுள்ளார். இது அவரது முந்தைய ஏலத் தொகையான ரூ.23.75 கோடியை விட மிகவும் குறைவு.
விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கார்த்திக் சர்மாவை ரூ. 14.20 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய அன்கேப்ட் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஆல்ரவுண்டர் பிரஷாந்த் வீரை ஏலத்தில் எடுக்க டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் ஏல தொகை 6 கோடியிலிருந்து 10 கோடியை தாண்டியது. இறுதியில் ரூ.14.20 கோடிக்கு சிஎஸ்கே ஏலத்தில எடுத்துள்ளது. இடதுக்கை வீரரான பிரஷாந்த் வீர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்படுவார். ஜடேஜாவிற்கு மாற்றாக இவரை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது. இவரும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய அன்கேப்ட் வீரர் ஆவார்.
அதன்படி இதுவரை விளையாடாத பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மாவை ரூ.28.40 கோடிக்கு ஏலம் எடுத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிஎஸ்கே
டெல்லி கேபிடல்ஸ் அணி, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஆகிப் நபி தாரை ரூ.8.40 கோடிக்கு வாங்கியுள்ளது.
பர்தீவ் ஷா மற்றும் கான்வே ஆகியோரும் விலை போகவில்லை. நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்தராவையும் எந்த அணியும் எடுக்கவில்லை. விக்கெட் கீப்பர் பரத்தையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.
