IPL 2024: அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2024ஆம் ஆண்டுக்கான 17வது ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 22 அன்று துவங்கவுள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக்கொள்ள உள்ளன.
ஐபிஎல் தொடர் வந்தாலே நெருங்கிய நட்பு வட்டத்தில் கூட, சிஎஸ்கே பெருசா? எம்ஐ பெருசா? ஆர்சிபி பெருசா? அல்லது கேப்டன்ஷிப்பில் பெஸ்ட் தோனியா? ரோகித்தா? கோலியா? என ரசிகர்கள் சண்டை ஆரம்பித்துவிடும்.
இந்த ரசிக சண்டைகளுக்கு எல்லாம் பதில் சொல்லும் விதமாக இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு புள்ளி விவரங்களுடன் கூடிய விளக்கம் இதோ!
தோனி :
இதுவரை நடத்த 16 ஐபிஎல் தொடர்களில், 226 போட்டிகளில் கேப்டனாக களமிறங்கியுள்ளார், தோனி. ஐபிஎல் வரலாற்றில் 200 போட்டிகளுக்கு மேல் கேப்டன்சி செய்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த 226 போட்டிகளில், 133 முறை அணியை வெற்றிக்கு தோனி அழைத்து சென்றுள்ளார். இதன்மூலம், அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன்கள் பட்டியலில், அவர் முதலிடத்தில் உள்ளார். 50 போட்டிகளுக்கு மேல் கேப்டன்சி செய்த கேப்டன்கள் மத்தியில், வெற்றி சதவிகிதத்தில் தோனியே முதலிடத்தில் உள்ளார். தோனியின் வெற்றி சதவிகிதம் 59.37% ஆக உள்ளது.
இதனுடன், ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக 100 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையையும் தோனி வசம் தான் உள்ளார்.
ரோகித் சர்மா :
தோனிக்கு அடுத்து இப்பட்டியலில் ரோகித் சர்மா உள்ளார். அவர் இதுவரை 158 போட்டிகளில் கேப்டனாக அணியை வழிநடத்தி, 87 முறை வெற்றியை பெற்று தந்துள்ளார். ரோகித் சர்மாவின் வெற்றி சதவிகிதம் 56.32% ஆக உள்ளது.
கோலிக்கு 4வது இடம்!
இவர்களுக்கு அடுத்து, நாம் யாரும் எதிர்பார்க்காத கவுதம் கம்பீர் இப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். அவர் இதுவரை 129 போட்டிகளில் அணியை வழிநடத்தி, 71 போட்டிகளில் வெற்றியை பெற்றுத்தந்துள்ளார்.
விராட் கோலி இப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். இதுவரை, அவர் 143 போட்டிகளில் அணியை வழிநடத்தி, 66 முறை வெற்றிக்கனியை சுவைக்க வைத்துள்ளார்.
கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற வீரர்கள் பட்டியல் இதோ!
கேப்டன் பெயர் – வெற்றிகள் (விளையாடிய போட்டிகள்) – வெற்றி சதவிகிதம்
1) எம்.எஸ் தோனி – 133 (226) – 59.37%
2) ரோகித் சர்மா – 87 (158) – 56.32%
3) கவுதம் கம்பீர் – 71 (129) – 55.42%
4) விராட் கோலி – 66 (143) – 48.56%
5) டேவிட் வார்னர் – 40 (83) – 49.39%
6) ஆடம் கில்கிறிஸ்ட் – 35 (74) – 47.29%
7) சச்சின் டெண்டுல்கர் – 30 (51) – 58.82%
8) ஷேன் வார்னே – 30 (55) – 55.45%
9) விரேந்தர் சேவாக் – 28 (53) – 53.77%
10) ஷ்ரேயஸ் அய்யர் – 27 (55) – 50.90%
சாம்பியன்கள் வரிசையில்…
சாம்பியன் பட்டம் அடிப்படையில், மகேந்திர சிங் தோனி மற்றும் ரோகித் சர்மா என இருவருமே தலா 5 முறை கேப்டனாக கோப்பையை முத்தமிட்டுள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக, கவுதம் கம்பீர் இந்த பெருமைமிக்க கோப்பையை 2 முறை கைப்பற்றியுள்ளார்.
அவரை தொடர்ந்து, ஷேன் வார்னே, ஆடம் கில்கிறிஸ்ட், டேவிட் வார்னர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய 4 பேர், இந்த கோப்பையை தலா ஒரு முறை வென்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: பளிச்சென மின்னவைக்கும் ஃபேஸ் பேக்!
ஹெல்த் டிப்ஸ்: தேமல்… சுயமருத்துவம் வேண்டாமே!
உதயசூரியன் நாடு: தலைக்கு மேலே கடல்.. காலுக்கு கீழே வானம்!