சீனாவின் வுகானில் துவங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இன்றைய நிலவரப்படி (மார்ச் 9) இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 29ஆம் தேதி முதல் தொடங்க இருக்கின்றன. மும்பையில் நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல்லின் முதல் போட்டியில் கடந்த வருட இறுதிப்போட்டியில் மோதிக்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறும்போது, “கொரோனா பாதிப்பால் ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.
“கூட்டம் கூடும் இடங்களில் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற போட்டிகளை எப்போது வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம். எனவே ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” என்றும் அமைச்சர் விளக்கியுள்ளார். எனினும், மகாராஷ்டிராவில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியா டுடே ஊடகத்திடம் பேசியுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, “திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். போட்டிகளுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட்டு வீரர்களுக்கு, ரசிகர்களுடன் கைக்குலுக்கி கொள்ளவோ அல்லது மற்றவர்களின் செல்போன்களை உபயோகப்படுத்தி புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
**பவித்ரா குமரேசன்**
�,