ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தத் தொடரின் சந்தை மதிப்பு குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக D & P Advisory அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ.92,500 கோடியாக இருந்த ஐ.பி.எல். தொடரின் மதிப்பு 2024 ஆம் ஆண்டு ரூ. 82, 700 கோடி ரூபாயாக சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு, தோனி ஓய்வு பெறும் நிலையில் இருப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
அதே வேளையில், பெண்கள் ஐ.பி.எல் தொடரின் மதிப்பு ரூ. 1,250 கோடியில் இருந்து ரூ.1350 கோடியாக உயர்ந்துள்ளது.
அதுசரி… ஐபிஎல் தொடரின் மதிப்பு குறைந்ததற்கு தோனி காரணமா?
ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய லாபம் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையாகும்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஐ.பி.எல் உரிமம் சுமார் 48 ஆயிரத்து 930 கோடி ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டிருக்கிறது. ஸ்டார் மற்றும் வியாக்காம் 18 நிறுவனங்கள் உரிமத்தை வைத்துள்ளன. தற்போது, இந்த இரண்டு நிறுவனங்களும் ஒரே நிறுவனமாக மாறப் போகிறது. அதே வேளையில், இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக கருதப்படும் சோனி மற்றும் ஸீ தொலைக்காட்சி இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், ஸ்டார் மற்றும் வியாக்காம் 18 கூட்டணிக்கு போட்டியாளர்கள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
இதன் விளைவாக அடுத்த ஐபிஎல் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமங்களை விற்கும் போது, ஏலத்தில் போட்டியாளர்கள் இல்லாத சூழல் ஏற்படும். இதன் காரணமாக தான் ஐபிஎல் தொடரின் சந்தை மதிப்பு குறைந்து வருகிறது என D & P Advisory அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அணிகளை பொறுத்த வரை ஐ.பி.எல் ஆண்கள் மற்றும் பெண்கள் தொடரில் கோப்பையை வென்ற மும்பை அணி தொடர்ந்து அதிக மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டாவது இடத்திலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நான்காவது இடத்திலும் உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தி கோட்: ராஜபாட்டை காட்டிய ‘டபுள் ஆக்ஷன்’ தமிழ் படங்கள்! இரட்டை வேடத்தில் அசத்தும் விஜய்
சிகாகோவில் புதிய முதலீடுகளை ஈர்த்த முதல்வர்: எந்த நிறுவனம்? எவ்வளவு கோடி?