2022 ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி!

By admin

|

Published on 13 Apr 2022, 12:00 AM

2022 ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணியை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை அணி.
இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் உத்தப்பா, ஷிவம் துபே இருவரும் நிலைத்து நின்று ஆடினர். ஒருபுறம் உத்தப்பா, மறுபுறம் ஷிவம் துபே பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர் .
அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்த இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். அரை சதம் கடந்த பிறகு உத்தப்பா, ஷிவம் துபே இருவரும், பெங்களூரு அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்
இதனால் இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. உத்தப்பா 50 பந்துகளில் 4 பவுண்டரி, 9 சிக்ஸர்) என 88 ரன்களும், ஷிவம் துபே 46 பந்துகளில் ( 5 பவுண்டரி, 8 சிக்ஸர் ) என 95 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 50 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது .
பின்னர் வந்த ஷாபாஸ் அகமது, சுயாஷ் பிரபு தேசாய் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். இதைத் தொடர்ந்து ஷாபாஸ் அகமது 41 ரன்களிலும், சுயாஷ் பிரபு தேசாய் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு பெங்களூரு அணி 193 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் மகேஷ் தீக்சனா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் இந்தப் போட்டி சென்னை அணி விளையாடிய 200ஆவது போட்டியாகும். இந்த சீசனில் முதல் வெற்றியையும், 200ஆவது போட்டியில் வெற்றியும் பெற்றதால் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இன்று (ஏப்ரல் 13) இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 23ஆவது லீக் ஆட்டத்தில் இதுவரை நான்கு ஆட்டங்களில் விளையாடி நான்கிலும் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் நான்கு ஆட்டங்களில் விளையாடி இரண்டில் வெற்றி, இரண்டில் தோல்வியையும் சந்தித்துள்ள பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

**-ராஜ்-**

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

admin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel