ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 22 தொடங்கி மே 26 வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட 5 வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் ஆடுவது சந்தேகம் தான் என, புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஹர்திக் பாண்டியா
மும்பை அணியின் புதிய கேப்டனுக்கு ஆரம்பமே படுமோசமாக அமைந்துள்ளது. கடைசியாக 2௦23 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் ஆடியிருந்தார். காலில் ஏற்பட்ட அடி காரணமாக தொடரின் பாதியிலே ஹர்திக் வெளியேறினார்.
3 மாதங்கள் கடந்தும் கூட உடல்நிலை காரணமாக இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்க முடியாமல், ஹர்திக் திணறி வருகிறார். தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு இந்த ஐபிஎல் தொடரில் விளையாட பிரம்ம பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் வெளியான புகைப்படங்களும் கூட அதை நிரூபித்தன. ஆனாலும் அவர் முழு உடற்தகுதியை எட்டிட இன்னும் நாள் ஆகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஒருவேளை ஹர்திக் இந்த தொடரில் ஆட முடியாமல் போனால், கேப்டன் தொடங்கி பல்வேறு விஷயங்களில் மும்பை அணிக்கு அது மிகுந்த பின்னடைவாக அமையும்.
சூர்யகுமார் யாதவ்
மும்பை அணியின் மற்றொரு அதிரடி வீரர், மிஸ்டர் 360 என அழைக்கப்படும் அளவிற்கு எல்லா திசைகளிலும் சுழன்று ஆடக்கூடியவர். தற்போது ஹெர்னியா அறுவைச்சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த வருடத்திற்கான சிறந்த டி2௦ வீரர் என ஐசிசி சமீபத்தில் இவருக்கு விருது அளித்தது.
அதோடு 2023-ம் ஆண்டு மும்பை பிளே ஆப் செல்ல இவர் தான் முதன்மை காரணம் என்பதால் இந்த சீசனும் சூர்யகுமார் ஆட வேண்டும் என அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. என்றாலும் முழு உடற்தகுதியை சூர்யா எட்டிட நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.
குறிப்பாக ஜூன் மாதம் போல தான் சூர்யா மீண்டும் கிரிக்கெட் ஆட முடியுமாம். ஹர்திக் வழியில் இவரும் ஆப்செண்ட் ஆனால், மும்பை அணிக்கான முடிவுரை அங்கேயே எழுதப்பட்டு விடும்.
முஹமது ஷமி
கடந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா இறுதி வரை முன்னேறிட இவர் தான் முக்கிய காரணம். ஆனால் சமீபகாலமாக உடற்தகுதி இல்லாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் தான் முக்கியமான தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் கூட ஷமி இடம்பெறவில்லை.
கில் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஷமி ஒருவேளை ஆட முடியாமல் போனால் குஜராத்தின் நிலையும் மிகுந்த கஷ்டமாகி விடும். இதனால் ஷமிக்கு மாற்று வீரரைத் தேடும் முயற்சியில் குஜராத் இறங்கினாலும் ஆச்சரியமில்லை.
ரிஷப் பண்ட்
கடந்த ஆண்டு நடைபெற்ற கார் விபத்தில் இருந்து தற்போது தான் தேறி வருகிறார். என்றாலும் அவர் இன்னும் முழு உடற்தகுதியினை எட்டவில்லை. டெல்லி அணிக்கு மட்டுமின்றி இந்திய அணிக்கும் தேவைப்படும் வீரராக ரிஷப் பண்ட் மாறியுள்ளார்.
ஏனெனில் ஐபிஎல் முடிந்த உடனேயே டி2௦ உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இதற்கு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டினை நியமித்திட ராகுல் டிராவிட் ஆர்வம் காட்டி வருகிறார். என்றாலும் ரிஷப் முழங்காலில் இன்னும் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கின்றனவாம்.
எனவே ரிஷப் டெல்லி அணிக்காக ஆடுவதும் சந்தேகம் தான் என கூறப்படுகிறது. ஒருவேளை ஐபிஎல் தொடரில் தன்னை அவர் நிரூபிக்காவிடில் உலகக்கோப்பை வாய்ப்பும் அவருக்கு கனவாகவே மாறிவிடும்.
பிரித்வி ஷா
கடந்த 2021-க்கு பிறகு இந்திய அணியில் பிரித்வி ஷா இடம்பெறவில்லை. தொடர் சர்ச்சைகள் காரணமாக தனக்கு வந்த பொன்னான வாய்ப்புகள் அனைத்தையும் வீணாக்கிக்கொண்டு, இன்று அணியில் இடம்பிடிக்கவே சிரமப்படும் அளவிற்கு பிரித்வி நிலை உள்ளது.
அதோடு கடந்த 2023 ஐபிஎல் தொடரிலும் டெல்லி அணிக்காக அவர் பெரிதும் ரன் குவிக்கவில்லை என்பதால், இந்த ஐபிஎல் தொடரில் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். என்றாலும் அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமாகவே உள்ளது.
மேலே சொன்ன 5 வீரர்களில் பிரித்வி தவிர மற்ற அனைவருமே அணியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் தங்களின் பங்களிப்பை அளிப்பவர்கள். ஒருவேளை அவர்கள் இடம்பெறாது போனால், இந்த ஐபிஎல் தொடர் எந்தளவு சுவாரசியமாக இருக்கக்கூடும்? என்பது தெரியவில்லை.
குறிப்பாக மும்பை அணிக்குத் தான் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணிகள் வெளியிடும் வரையில் நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ராமரை ஏமாற்றினால் தண்டிக்கப்படுவார்கள்” : பாஜக மீது கே.பி.முனுசாமி தாக்கு!
காங்கிரசை ‘காலி’ செய்த திமுக அமைச்சர் கண்ணப்பன்: சிவகங்கை சீற்றமா?