RCB vs RR – IPL 2024: 2024 ஐபிஎல் தொடரில், மே 22 அன்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
பிளே-ஆஃப்க்கு செல்ல 1% கூட வாய்ப்பு இல்லை என்ற நிலையில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்று இன்றைய எலிமினேட்டர் ஆட்டத்தில் களம் கண்டது.
மறுமுனையில், முதல் பாதியில் மிகுந்த ஆதிக்கம் செலுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லீக் சுற்றில் கடைசியாக விளையாடி 5 போட்டிகளில் 4 தோல்வி, 1 ட்ரா என மோசமான நிலையில் இன்றைய போட்டியில் களமிறங்கியது.
இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, விராட் கோலி (33) & டு பிளசிஸ் (17) ஒரு நல்ல துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த கேமரூன் கிரீன் (27) & ரஜத் படிதார் (34) ஜோடி சேர்ந்து சீராக அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
ஆனால், 13வது ஓவரில் கிரீன் மற்றும் அடுத்து வந்த மேக்ஸ்வெல் என 2 பேரின் விக்கெட்டையும் கைப்பற்றி, ஆட்டத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார், அஸ்வின். பின் வந்த அனைவரும் சொற்ப ரன்களுக்கு தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர்.
மஹிபால் லோம்ரோர் மட்டும் அதிரடியாக 32 ரன்கள் சேர்க்க, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது. அவேஷ் கான் 3 விக்கெட்களையும், அஸ்வின் 2 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தனர்.
பின் 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, யசஸ்வி ஜெய்ஸ்வால் (45) மற்றும் டாம் கொஹ்லர்-காட்மோர் (20) ஆகியோரும் ஒரு சிறப்பான துவக்கத்தையே வழங்கினர்.
ஆனால், ஜெய்ஸ்வால் விக்கெட்டை தொடர்ந்து அடுத்து வந்த சாம்சன் (17), துருவ் ஜூரேல் (8) என அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், ராஜஸ்தான் அணி சிறிய தடுமாற்றத்தை சந்தித்தது.
பின் 5 ஓவர்களில் 47 ரன்கள் தேவை என்றபோது, 16வது ஓவரில் ரியான் பராக் – ஷிம்ரன் ஹெட்மேயர் இணைந்து 17 ரன்கள் குவிக்க ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் திரும்பியது. ஆனால், 18வது ஓவரில் ரியான் பராக் (36), ஷிம்ரன் ஹெட்மேயர் (26) என 2 பேரின் விக்கெட்களையும் கைப்பற்றி ஆட்டத்தில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார், முகமது சிராஜ்.
12 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், ரோவ்மேன் பாவெல் 2 பவுண்டரி, 1 சிக்ஸ் என 19வது ஓவரிலேயே ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
இம்முறையாவது ஆர்சிபி கோப்பையை வென்றுவிடுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் 2024 ஐபிஎல் தொடரில் இருந்து அந்த அணி வெளியேறியது.
தற்போது, எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மே 24 அன்று நடைபெறவுள்ள 2வது குவாலிஃபையர் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் ஒரு தங்கம் வென்ற ‘தங்க மகன்’ மாரியப்பன் தங்கவேலு
கடவுளின் தூதரா மோடி? ஆ.ராசா பளிச் பதில்!
பூரி ஜெகன்நாதர் கோயிலில் உள்ள மர்மம் என்ன? யார் அந்த தமிழர் வி.கே.பாண்டியன்?