2024 ஐபிஎல் தொடரில், தர்மசாலாவில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது.
இந்த போட்டியில், இறுதியில் சென்னைக்கு சாதகமான முடிவு கிடைத்தாலும், துவக்கம் அப்படியாக அமையவில்லை. துவக்கத்திலேயே ரஹானே 9 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாத் (32 ரன்கள்) மற்றும் டெரில் மிட்சல் (30 ரன்கள்) இணைந்து சீராக ரன்களை சேர்த்தனர்.
ஆனால், இவர்கள் ஆட்டமிழந்த பிறகு, தொடர்ந்து ஷிவம் துபே, மொயீன் அலி, மிட்சல் சான்ட்னர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், சென்னை அணி இக்கட்டான சூழ்நிலைக்கு சென்றது.
இப்படியான நிலையில், தோனி முன்னதாகவே களமிறங்காமல் ஷரதுல் தாகூருக்கு பிறகு, 9வது வீரராகவே களமிறங்கினார்.
ஹர்ஷல் பட்டேல் வீசிய 19வது ஓவரில் களமிறங்கிய தோனி, தனது முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
இந்நிலையில், இப்போட்டியில் தோனி தாமதமாக களமிறங்கியது குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்,
“தோனி 9வது இடத்தில் களமிறங்கியது சிஎஸ்கே-வுக்கு உதவவில்லை, அது அணியின் நோக்கத்திற்கு வலு சேர்க்கவில்லை. அவருக்கு 42 வயது ஆகிவிட்டது என எனக்கு தெரியும், ஆனால் அவர் உறுதியான ஃபார்மில் உள்ளார்.
இப்படியான சூழலில், அவர் பேட்டிங்கில் பொறுப்பேற்று இன்னும் முன்னதாகவே களமிறங்க வேண்டும். அவர் குறைந்தபட்சம் 4,5 ஓவர்களாவது விளையாட வேண்டும்.
அவர் கடைசி 2 ஓவர்களில் மட்டும் களமிறங்கி விளையாடுவது சென்னை அணிக்கு உதவவில்லை”, என தெரிவித்துள்ளார்.
மேலும், “இங்கிருந்து சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், கிட்டத்தட்ட மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற வேண்டும். அப்படியான நிலையில், முழு ஃபார்மில் உள்ள ஒரு அனுபவமிக்க வீரரான தோனி, பேட்டிங்கில் இன்னும் மேலே களமிறங்கி விளையாட வேண்டும்”, என தெரிவித்துள்ளார்.
இதுவரை, இந்த ஐபிஎல் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ள தோனி, 224.48 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 110 ரன்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முஸ்லீம்களை எதிரியாக்காமல் இந்து அடையாளத்தை உருவாக்க முடியுமா?
ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி ஜூஸ் குடிப்பவரா நீங்கள்? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க!