SRH vs KKR: இப்டித்தான் எங்களுக்கும் இருந்துச்சு… கம்மின்சை ‘சைலண்ட்’ ஆக்கிய ஷாரூக் டீம்!

Published On:

| By Manjula

ipl 2024 kkr srh

கோலாகலமாக துவங்கிய 2024 ஐபிஎல் தொடரின் முதல் 2 போட்டிகளில், சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் வெற்றியை சுவைத்தன.

இந்நிலையில், இந்த தொடரின் 3-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று (மார்ச் 23)நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து, டாஸை போலவே துவக்கமும் அவருக்கு சாதகமாகவே அமைந்தது. கொல்கத்தா அணிக்கு துவக்க ஆட்டக்காரராக இறங்கிய பில் சால்ட் பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டார்.

ஆனால், மறுமுனையில் நடராஜனின் மிரட்டலான பந்துவீச்சால், கொல்கத்தா அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

பவர்-பிளேவிலேயே, சுனில் நரைன், வெங்கடேஷ் அய்யர் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் என கொல்கத்தாவின் மும்மூர்த்திகள் மூவரும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின் நிதிஷ் ராணாவும் 9 ரன்களுக்கு அவுட் ஆக, அடுத்து வந்த ரமன்தீப் சீங், அணியை விக்கெட் வீழ்ச்சியில் இருந்து மீட்டு, ஆட்டத்தின் போக்கையும் மாற்றினார். அவர் 17 பந்துகளில் 35 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

ipl 2024 kkr srh

அதை தொடர்ந்து, ரிங்கு சிங்குடன் இணைந்த ஆண்ட்ரூ ரஸல், கொல்கத்தாவின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார்.

இவர்களின் அதிரடியால், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 208 ரன்கள் குவித்தது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 2௦௦ ரன்கள் குவித்த முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது.

ரஸல் 25 பந்துகளில் 64 ரன்களை விளாசினார். ஹைதராபாத் அணிக்காக நடராஜன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

209 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அதற்கு தேவையான அதிரடியுடனேயே ஆட்டத்தை துவங்கியது.

ipl 2024 kkr srh

மயங்க் அகர்வால் மற்றும் அபிஷேக் சர்மா பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட, ஐதராபாத் பவர்-பிளே முடிவில் 65 ரன்கள் சேர்த்தது.

ஆனால், இவர்கள் இருவருமே தலா 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணியின் ரன்-ரேட்டும் மெல்ல, மெல்ல குறைய ஆரம்பித்தது.

இதன் காரணமாக, 15 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கடைசி 5 ஓவர்களில் 81 ரன்கள் தேவை என்ற நிலைக்கு சென்றது.

அப்போது, ஹென்ரிச் கிளாசன் தனது வாண வேடிக்கையை காட்டத் துவங்கினார். இதன் காரணமாக, கடைசி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலைக்கு ஹைதராபாத் சென்றது.

ஆனால், கடைசி ஓவரை வீசிய ஹர்சித் ராணா தன்னுடைய அபாயகரமான பந்துவீச்சால், கிளாசன் மற்றும் சபாஷ் அகமது என அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த 2 பேரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

ipl 2024 kkr srh

இதன்மூலம், கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு த்ரில் வெற்றியுடன், தனது 2024 ஐபிஎல் பயணத்தை தொடங்கியுள்ளது.

மொத்தத்தில் உலகக்கோப்பை தொடரில் இந்தியர்களை சைலண்ட் ஆக்கிய பேட் கம்மின்சை, ஷாரூக்கானின் கொல்கத்தா அணி தற்போது சைலண்ட் ஆக்கியுள்ளது.

மகிழ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேடந்தாங்கல் பறவை கூட்டணி: அப்டேட் குமாரு

கரூரில் ஜோதிமணி… திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

டிஜிட்டல் திண்ணை: தேர்தல் பட்ஜெட்… ED குறி வைக்கும் திமுகவின் மும்மூர்த்திகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share