ஏ.ஆர். ரகுமான் பாட… டைகர் ஷெராஃப் ஆட… : தொடங்குகிறது ஐபிஎல் 2024 திருவிழா!

Published On:

| By christopher

IPL ar rahman concert

இந்தியாவில் எந்தவித ஜாதி, மத மோதலுமின்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா என்றால் அது ஐபிஎல் தொடர் தான். அதன்படி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 17வது சீசன் சென்னை சேப்பாக்கத்தில் இன்று முதல் தொடங்குகிறது.

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியும் மோதுகின்றன.

ரகுமான் குரலில் ‘நீ சிங்கம் தான்’ பாடல்! 

அதற்கு முன்னதாக திரையுலக பிரபலங்களின் கண்கவர் இசை மற்றும் கலைநிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

இதில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் அக்‌ஷய் குமார், சோனு நிகம், அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது.

அப்போது தோனிக்கு பாடலை டெடிகேட் செய்யும் விதமாக பத்து தல படத்தில் இடம்பெற்ற ‘நீ சிங்கம் தான்’ பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசைக்குழு பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் போட்டியில் வெல்லப்போவது யார்? 

தோனிக்கு கடைசி தொடராக இந்த சீசன் இருக்கும் என்று கூறப்படும் நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே தோனி சக வீரராக களமிறங்க, தனக்கு வழங்கப்பட்ட கேப்டன் பொறுப்பை ருதுராஜ் எப்படி பயன்படுத்துவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தனது கடைசி தொடரில் விளையாடும் தோனியை, இந்தாண்டு கோப்பையுடன் வழியனுப்ப காத்திருக்கும் என்பதால் சென்னை அணி இந்த தொடர் முழுவதும் நிச்சயம் போராடும் என்பதை உறுதியாக நம்பலாம்.

அதேபோன்று மகளிர் ப்ரீமியர் லீக்கில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி சமீபத்தில் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், கடந்த 16 ஆண்டாக கோப்பையை கைப்பற்ற போராடி வரும் ஆடவர் பெங்களூர் அணியும் இந்தாண்டு கோப்பையை மட்டுமே குறிவைத்து களமிறங்கும். மேலும் கடந்த 16 வருடங்களாக கை நழுவி கோப்பையை முத்தமிட பெங்களூர் அணி போட்டியின் கடைசி பந்து வரை போராடும் என்பதில் சந்தேகமே இல்லை.

சென்னை அணி ஆதிக்கம்!

சென்னை – பெங்களூரு இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 போட்டிகளில் வெற்றியுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 போட்டிகளில் வென்றுள்ள நிலையில் ஒரு போட்டி மழையின் காரணமாக முடிவு இல்லாமல் போனது.

இன்றைய போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்திலும் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. சேப்பாக்கத்தில் சென்னை அணி 7 முறையும், பெங்களூரு அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

நேரலையை எதில் பார்க்கலாம்!

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை நேரலையாக தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஆன்லைனில் ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பிற்பகல் 3.30 மணிக்கு ’அமைச்சர்’ ஆக பதவி ஏற்கிறார் பொன்முடி

மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000… ’நீட்’டுக்கு மாற்றுத் தேர்வு : அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share