2024-ம் ஆண்டுக்கான 17-வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. rohit sharma lead csk in 2025 ipl
இந்த தொடரின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதிக்கொள்ள உள்ளன.
ஐபிஎல் தொடர் நெருங்குகிறது என்றாலே, “தல தோனி இந்த ஆண்டு ஓய்வு பெறுகிறாரா?”, “சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார்?”, என்ற 2 கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் தானாக தொற்றிக்கொள்ளும்.
ஆனால், இதற்கெல்லாம் ‘Definitely Not!’ என்று பதில் அளிக்கும் விதமாக, ‘தல’ தோனி, 17-வது ஆண்டிலும் 6வது ஐபிஎல் கோப்பையை நோக்கி தனது சிங்கப்படையுடன் களமிறங்கவுள்ளார்.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆரம்ப காலத்தில் வைத்திருந்த ஹேர் ஸ்டைலுடன் அவர் மீண்டும் காட்சியளிப்பதால், அவரை களத்தில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனாக ரோஹித் வந்தால் நன்றாக இருக்கும் என, தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர்,”ரோகித் சர்மா இன்னும் 5-6 ஆண்டுகள் நிச்சயம் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவார். அவர் மீண்டும் கேப்டனாக விரும்பினால், மொத்த உலகமும் அவருக்காக கதவுகளை திறந்து வைத்துள்ளது.
அவர் எந்த அணியில் வேண்டுமானாலும் எளிதாக கேப்டனாகி விடலாம். ஆனால், 2025 ஐ.பி.எல் தொடரில் ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
அதன்பின், தோனி ஒய்வு பெற்ற பின் அந்த அணியை அவரே வழிநடத்தலாம்”, என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமித்தபோதே, ரோகித் சென்னை அணிக்கு வரவுள்ளதாக வதந்திகள் பரவின.
இந்நிலையில், ராயுடுவின் இந்த கருத்து, ரசிகர்கள் மத்தியில் அதற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
–மகிழ் rohit sharma lead csk in 2025 ipl
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…