உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வரும் மார்ச் 31 ஆம் தேதி மிக பிரமாண்டமாக தொடங்க உள்ளது ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர்.
இந்த ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி உட்பட 10 அணிகள் மோத உள்ளன.
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடந்த ஆண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பிடித்ததால் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் டி 20 போட்டியில் கம்பேக் கொடுக்கும் முயற்சியுடன் களமிறங்குகின்றன.
அதே போல் டெல்லி கேபிட்டல்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகள் தங்களுடைய முதல் கோப்பையை வெல்வதற்கு போராட உள்ள நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் நீண்ட சீசன்களாக சந்தித்து வரும் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் பட்டம் வெல்ல போராட உள்ளன.
இதனிடையே, இத்தொடர் துவங்குவதற்கு முன்பாகவே சில வீரர்கள் காயத்தால் வெளியேறியுள்ளது அந்தந்த அணிகளுக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி காயத்தால் வெளியேறியுள்ள வீரர்களை இந்த தொகுப்பில் காணலாம்:
ஜஸ்பிரித் பும்ரா
120 போட்டிகளில் 145 விக்கெட்டுகளை எடுத்து 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் 3 கோப்பைகளை மும்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய இவர் இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இருப்பினும் கடந்த ஜூலை மாதம் காயத்தை சந்தித்த அவர் அதன் பின் 2 முறை காயமடைந்து மீண்டும் வெளியேறியது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பைக்கு இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அந்த நிலையில் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள பும்ரா 2023 உலகக் கோப்பையில் விளையாடுவார் என்பதால் இந்த ஐபிஎல் தொடரில் வெளியேறியுள்ளது மும்பைக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
ரிஷப் பண்ட்
இவர் 2021 முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
அதை விட இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் காபா போன்ற வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் கடந்த டிசம்பர் மாதம் சந்தித்த கார் விபத்தால் இந்த 2023 ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், 2023 உலகக்கோப்பை ஆகிய முக்கிய தொடர்களில் விளையாட மாட்டார் என்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கேப்டனாக இருக்கும் டெல்லி அணிக்கு ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது.
கெய்ல் ஜெமிசன்
நியூசிலாந்தின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் சுமாராக விளையாடியிருந்தாலும் இம்முறை சென்னை அணிக்காக 1 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தார்.
ஆனால் சமீபத்தில் முதுகு பகுதியில் சந்தித்த காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள இவர் குணமடைய 3 – 4 மாதங்கள் தேவைப்படும் என்பதால் ஐபிஎல் தொடரில் விலகியுள்ளார்.

கடந்த சீசனில் தீபக் சஹர் இல்லாதது சென்னைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் இம்முறை உயரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவர் விலகியுள்ளது ஓய்வு பெற்ற ட்வயன் ப்ராவோ இடத்தை பூர்த்தி செய்வதற்கு ஏற்பட்ட வாய்ப்பை உடைத்துள்ளது.
ஜே ரிச்சர்ட்சன்
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான இவர் 1.5 கோடிக்கு மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஆனால் சமீபத்திய உள்ளூர் தொடரில் காயத்தை சந்தித்த இவர் 2023 ஐபிஎல் தொடரில் விலகியுள்ளது ஏற்கனவே பும்ரா இல்லாத மும்பைக்கு மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசித் கிருஷ்ணா
2022 ஐபிஎல் தொடரில் 10 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் 2008க்குப்பின் ராஜஸ்தான் ஃபைனலுக்கு செல்ல பந்து வீச்சு துறையில் முக்கிய பங்காற்றினார். அதனால் இந்திய அணிக்காகவும் தேர்வாகி கணிசமான போட்டிகளில் விளையாடிய அவர் சமீபத்திய உள்ளூர் தொடரில் காயத்தை சந்தித்தார்.

அதன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் இவர் 2023 ஐபிஎல் தொடரில் விலகியது மட்டுமல்லாமல் 2023 உலகக் கோப்பை பவுலர்கள் பட்டியலில் இடம்பெறுவாரா இல்லையா என்பது கேள்விக்குறியே.
வில் ஜேக்ஸ்
இங்கிலாந்தின் அதிரடி ஆல் ரவுண்டரான இவரை பெங்களூரு அணி 3.2 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது.

ஆனால் சமீபத்திய வங்கதேச டி20 தொடரில் தொடைப்பகுதியில் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் தனது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்குவதற்கு முன்பாகவே விலகியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சொதப்பல் SKY சூப்பர் SKY ஆக தினேஷ் சொல்லும், ‘ஜெர்சி’ சீக்ரெட்!