ராஜன் குறை
இந்த வாரம் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது; நிதிநிலை அறிக்கை மற்றும் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக விவசாயத்துக்கென்று தனியாக ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் புரட்சிகர திட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒரு பெண் உட்பட பலர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்விதமாக மக்களாட்சி அரசியலை முன்னெடுக்கும் செயல்பாடுகள் பல நிகழ்ந்திருந்தாலும் உலக அளவில் எதிர்காலத்தில் அக்கறை கொண்டவர்கள் கவலைகொள்ளும் ஒரு முக்கிய நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. அது என்னவென்றால், பல நாட்டு அரசுகள் இணைந்து உருவாக்கியுள்ள Intergovernmental Panel on Climate Change என்ற IPCC என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பு, தன்னுடைய ஆறாவது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. தொகுக்கப்பட்ட முழு அறிக்கை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றாலும் அடிப்படையான அறிக்கை ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. ஐந்து அல்லது ஏழாண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வறிக்கைகள் தயாரித்து அளிக்க முடிவு செய்துள்ளது இந்த நிறுவனம்.
முற்றிலும் புதிய செய்திகளை இந்த அறிக்கைகள் கூறவில்லையென்றாலும், உலகின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதையும், அது மனிதர்களின் செயல்பாடுகளால்தான் அதிகரிக்கிறது என்பதையும் திட்டவட்டமாக, ஐயத்துக்கு இடமின்றி சொல்கிறது. விரைவில், இன்னம் பத்தாண்டுகளில் கூட 1900 ஆண்டுக்கு முன்னிருந்த வெப்பநிலையைவிட 1.5° செல்ஷியஸ் அதிகரிக்கும் என்று கூறுகிறது. இது ஒரு ஆபத்தான கட்டம் என்று மதிப்பிடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் இதை சிவப்பு விளக்கு எச்சரிக்கை என்று கூறியுள்ளார்.
இந்த அறிக்கையைத் தயாரிப்பது யார்?
இந்த அறிக்கையை IPCC தானாகவே தயாரிப்பதில்லை. பல்வேறு நாடுகளிலும் உள்ள அறிவியலாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த அறிக்கையை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 234 பேர் இணைந்து எழுதியுள்ளார்கள். இதிலுள்ள தகவல்களைப் பல ஆய்வாளர்களும், அரசு பிரதிநிதிகளும் சரிபார்த்துள்ளார்கள். அனைவரையும் கலந்தாலோசித்து வெளிப்படையான ஒரு நடைமுறையில்தான் இது தயாரிக்கப்படுகிறது. அதேபோல இது உள்ள நிலையை எடுத்துக்கூறுகிறதே தவிர, அரசாங்கங்கள் எத்தகைய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கருத்துரைப்பதில்லை. புவி வெப்பம் அதிகரித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிப்பது மட்டுமே இந்த அறிக்கையின் நோக்கம்.
இது குறித்து நாம் அக்கறை கொள்ள வேண்டுமா?
இரண்டு காரணங்களால் நாம் இந்த அறிக்கை குறித்து அக்கறை கொள்ள வேண்டும். அதன் உள்ளடக்கம் குறித்து கவலை கொள்ள வேண்டும். அவை என்னவென்றால்
1) நிகழ்காலத்தில் அதிகரித்துவரும் சூழலியல் இடர்பாடுகள்;
2) எதிர்காலத்தில் மானுடம் தொடர்ந்து புவியின் பரப்பில் வாழ முடியுமா என்ற கேள்வி.
இந்த காரணங்களை அணுகுவதில் சில பிரச்சினைகள் உள்ளன.
நிகழ்காலத்தில் அதிகரிக்கும் மழை, வெள்ளம் போன்றவை இந்தச் சூழலியல் சீர்கேட்டால்தான் நிகழ்கின்றனவா என்ற கேள்வி. ஏனெனில் எல்லா காலங்களிலும் புயலும், மழையும், வெப்பமும், குளிரும் அதிகமாக பாதிப்பது என்பது நிகழ்ந்து வந்துள்ளது. அதனால் திட்டவட்டமாக இப்போது நிகழும் சில திடீர் புயல்கள், மழை வெள்ளம் போன்றவற்றை சூழலியல் சீர்கேட்டின் அங்கம் எனப் பார்ப்பதில் பலருக்கும் தயக்கம் இருக்கிறது. இதெல்லாம் தானாக சரியாகப் போகும் என்ற நம்பிக்கை பலரிடமும் இருக்கிறது.
எதிர்காலம் என்பது குறிப்பது யோசிப்பதில் நமக்குச் சிக்கல் இருக்கிறது. நம் வாழ்நாள் காலம் குறித்து யோசிக்கிறோம். அதைக்கடந்து 2100ஆம் ஆண்டு கடல் மட்டம் அதிகரித்து ஏராளமான நிலம் நீருக்கடியில் சென்றுவிடும் என்றால் நாம் அதைக் குறித்து யோசிப்பது கடினம், ஏனெனில் இன்று பிறந்த குழந்தை கூட அப்போது கிட்டத்தட்ட வாழ்ந்து முடிந்திருக்கும். பொதுவாக மானுட எதிர்காலம் குறித்து கவலைப்பட முடியாதபோது, பிற உயிரினங்கள், பல்லுயிர் சூழல் குறித்தெல்லாம் அதிகம் கவலைப்பட முடியாது.
ஆனால், இந்த இரண்டுக்கும் நடுவே ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. உதாரணமாகப் பெருகும் வெள்ளம். வறட்சி போன்றவற்றால் கடும் பொருளாதார சிக்கல்கள் தோன்றலாம். பல்லுயிர்ச்சூழல் சிதைவால் கொரோனா போல புதிய நுண்கிருமிகள் உருவாகி மானுட வாழ்வை பாதிக்கலாம். அதாவது ஒட்டுமொத்தமாக மானுடம் அழியாவிட்டாலும் இப்போதுள்ள வாழ்க்கை வசதிகள் பலவற்றை இழக்க நேரலாம். இதையெல்லாம் அறிவியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகளால் சரி செய்ய முடியுமா, எப்படி முடியும் என்பதெல்லாம் கேள்விகள்.
புவி வெப்பம் ஏன் அதிகரிக்கிறது?
புவி வெப்பம் அதிகரிக்க முக்கிய காரணம், காற்றில் கார்பன் எனப்படும் கரியமில வாயுவின் பங்கு அதிகரிப்பதுதான். அது அதிகரிக்க காரணம் நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் பயன்பாடுதான். பல்லாயிரம் ஆண்டுகளாக பூமிக்கடியில் சேகரமான கார்பன் வடிவங்களான அவற்றைத் தோண்டியெடுத்து சுத்திகரித்து பயன்படுத்துவது காற்றில் கார்பன் அளவை அதிகரிக்கிறது. கார்பன் அதிகமானால் புவியின் மேற்பரப்பில் உருவாகும் வெப்பம் வளிமண்டலத்தை கடந்து செல்ல முடியாமல் சிறைபிடிக்கப்படுகிறது. அதனால் புவியின் சராசரி வெப்பநிலை கூடுகிறது.
அது ஓர் அளவுக்குமேல் அதிகரித்தால் இப்போதுள்ள உயிரிகள் பலவற்றால் வாழ முடியாது போய்விடும். ஆனால், அந்த நிலைக்குச் செல்வதற்கு முன்னமே அதிகரிக்கும் வெப்பம் ஏராளமான சூழலியல் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும். பெருகும் மழை, வெள்ளம், துருவப் பிரதேசங்களில் பனி உருகுவதன் காரணமாக அதிகரிக்கும் கடல் நீர் மட்டம், அதனால் மூழ்கக் கூடிய கடலோர நகரங்கள், பிரதேசங்கள், தீவுகள் எனப் பல்வேறு ஆபத்துகள் தோன்றலாம். அதேபோல பல்லுயிர் சூழலில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக, புதிய நுண்கிருமிகள் உருவாகலாம்.
சுற்றுச்சூழல் என்பது ஒன்றொடொன்று பிணைந்த பல்வேறு நுண்ணிழைகளால் ஆனது என்பதால் எந்தவிதமான மாற்றங்கள் எதையெல்லாம் பாதிக்கும் என்பதை முன்கூட்டியே யூகிப்பதும் கடினம்தான். உலகின் பல பகுதிகளில், குறிப்பாக பிரேசிலில் தொன்மையான மழைக்காடுகள் வளர்ச்சியின் பெயரால் நேரடியாகவும், ரகசியமாகவும் அழிக்கப்படுகின்றன. வளிமண்டலத்திலுள்ள கரியமில வாயுவை உட்செறிப்பதில் இந்த மழைக்காடுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இதெல்லாம் துல்லியமாகத் தெரிந்தாலும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
மக்களாட்சியும், வளர்ச்சியும்
மக்களாட்சி நடைமுறையைப் பின்பற்றும் நாடுகளில் மக்கள் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு அடைந்தால் அவர்களால் அரசாங்கத்தை தக்க நடவடிக்கை எடுக்கச் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அதில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால் மக்களே பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் ஆடம்பர வாழ்க்கை முறையை, நுகர்வுக் கலாச்சாரத்தை விரும்புகிறார்கள். சைக்கிள் வைத்திருப்பவர், மோட்டார் சைக்கிள், பைக் என்று இருசக்கர வாகனங்கள் வாங்குவதும், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர் மகிழுந்தும், மகிழுந்து வைத்திருப்பவர் மேலும் பெரிய சொகுசான மகிழுந்து வாங்குவதும் வளர்ச்சி என்று புரிந்துகொள்ளப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் அங்காடிகளில் நாட்டின், ஏன், உலகின் பல பகுதிகளிலிருந்தும் பொருட்கள் நம் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். காஷ்மீரிலிருந்து மட்டுமல்ல, ஃபிஜியிலிருந்தும், நியூசிலாந்திலிருந்தும் ஆப்பிள்கள் நம் தெருமுனை அங்காடியில் கிடைப்பதை விரும்புகிறோம். இதெல்லாம் மிகப்பெரிய போக்குவரத்து சாதனங்களைக் கோருகின்றன. அவையெல்லாம் கார்பனை உமிழும் நிலத்தடி எரிபொருள்களையே பயன்படுத்துகின்றன.
இந்தியாவிலேயே நகர்ப்புறங்களில் நுகர்வுக் கலாச்சாரம் இப்படியென்றால், மேற்கத்திய நாடுகளைக் கேட்கவே வேண்டாம். அங்கே நுகர்வே வாழ்க்கை என்னுமளவு நுகர்வு வெறி முற்றியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் அசுர வளர்ச்சியைக் கவனித்தால் போதும். நுகர்வு என்றால் என்னவென்று புரிந்துகொள்ளலாம்.
திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் நல்வாழ்வுக்கே முன்னுரிமை தருவதால் சுற்றுச்சூழல் அணியினை அமைத்துள்ளது. பல்வேறு சூழலியல் அக்கறை கொண்ட திட்டங்களை அறிவித்துள்ளது. உதாரணமாக அடுத்த பத்தாண்டுகளில் மாநிலத்தின் நிலப்பரப்பில் 33% மரங்களால் நிரப்ப திட்டமிட்டுள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதில் ஒன்றிய அரசிடமே அதிகாரம் குவிந்துள்ளது. ஒன்றிய அரசை ஆளும் பாரதீய ஜனதா கட்சி கார்ப்பரேட் நலன்களுக்கே, அதன் பெருமுதலீட்டிய வளர்ச்சிக்கே முக்கியத்துவம் தருகிறது.
உதாரணமாக பாரதீய ஜனதா கட்சி ஆதரிக்கும் அதானி குழுமம் பாரத ஸ்டேட் பேங்கில் கடன் வாங்கி ஆஸ்திரேலியாவில் ஒரு நிலக்கரி சுரங்கம் தோண்ட ஒப்பந்தம் செய்துள்ளது. அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். சமீபத்தில் இந்திய அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடந்தபோது அவர்கள் அதானிக்கும், இந்திய அரசுக்கும் எதிரான பதாகைகளைத் தாங்கி போராடினார்கள்.
அஇஅதிமுக-வை எடுத்துக்கொண்டால் மாநிலமே கடன் சுமையில் மூழ்கும்போதுகூட போக்குவரத்துக்காக மேம்பாலங்கள் கட்டுவதற்கு முன்னுரிமை கொடுத்ததும், தேவையேயில்லாத சேலம் எட்டுவழிச் சாலையைப் போட்டே தீருவேன் என்று முனைந்ததும் கவனத்திற்குரியது. ஏன் வருவாய் பற்றாக்குறையில் வாங்கும் கடனில் கணிசமாக மேம்பாலங்கள் கட்ட செலவழித்தார்கள், ஆட்சியின் கடைசி நாட்கள் வரை ஒப்பந்தங்கள் போட்டார்கள் என்று யோசித்தால் வேலியே பயிரை மேய்ந்ததைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இதையெல்லாம் வளர்ச்சி என்ற பெயரில் நியாயப்படுத்திவிட முடியும் என்பதுதான் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினை.
நமது நம்பிக்கை
மக்கள் விழிப்புணர்ச்சி கொள்வதும், சூழலியல் பேராபத்து குறித்துச் சிந்திக்கத் துவங்குவதும் நடக்காமல் மானுடம் தப்பிப் பிழைப்பது கடினம். உடனடியாக இதற்கு என்ன தீர்வு என்று மலைப்பாக இருக்கலாம். அது எத்தகைய கடினமான தீர்வாக இருந்தாலும் அது மக்களிடமிருந்துதான் உருவாக வேண்டும். அதனால் அனைத்து ஊடகங்களுக்கும், மக்கள் நலனில் நாட்டம் கொண்டோருக்கும் IPCC அறிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு இருக்கிறது. நமது செல்பேசியிலேயே நாம் இந்த அறிக்கையின் முழு விவரங்களை அறியலாம். https://www.ipcc.ch/ என்ற வலைதளத்துக்குச் சென்றால் போதும்.
இந்த ஆய்வறிக்கை குறித்த தகவலைப் பரவலாக்கும் நோக்கிலேயே இந்த சிறிய கட்டுரையும் எழுதப்பட்டுள்ளது. சூழலியல் பிரச்சினை நமக்குத் தொடர்பில்லாதது என்றோ, நமது சமூக நீதி அரசியலுக்கோ, சமத்துவப் பார்வைக்கோ தொடர்பில்லாதது என்றோ நினைக்க முடியாது. சூழலியல் சீர்கேட்டால் முதலில் பாதிக்கப்படப்போவது எளிய மக்களே. செல்வந்தர்களால் மழை, வெள்ளத்தையும், கடும் வெப்பத்தையும், கடும் குளிரையும் சமாளிக்க முடியும். ஆனால் எளிய வசிப்பிடங்களில் உள்ளவர்களே இவற்றால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். சூழலியல் பாதிப்புகளால் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்குமே தவிர, குறையாது. அத்துடன் சமூக வன்முறையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
வருமுன் காப்பது அறிவு. “அறிவுடையார் ஆவது அறிவார்; அறிவிலார் அஃதறி கல்லாதவர்” என்பது வள்ளுவர் வாக்கு.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”பொய் பிரச்சாரத்தை பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்” : மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்!
உச்சத்தை தொட்ட தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?
Share Market : அதானியின் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் பங்குகள் உயர்வு!
10 ஆண்டுகளுக்கு பிறகு ஃபைனலில் இந்தியா… சாதிப்பாரா கோலி? : ரோகித் சர்மா பதில்!
வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!
டெல்லி துயரம்: திடீரென இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரை.. மூன்று பேர் பலி!