ஈஷா யோகா மையத்தில் காவல்துறை விசாரணைக்கு ஆணையிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 3) தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் 42 மற்றும் 39 வயதுடைய தனது “நன்கு படித்த இரண்டு மகள்கள்” மூளைச்சலவை செய்யப்பட்டதாகவும், அங்கு இருக்கும் தனது இரு மகள்களையும் மீட்டுத் தர வேண்டும் என்று ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், ‘ஈஷா தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து கிரிமினல் வழக்குகளின் விவரங்களையும் போலீஸார் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கோவை எஸ்.பி. கார்த்திகேயன் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, குழந்தைகள் நல அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஈஷா மையத்துக்குள் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து நாளை (அக்டோபர் 4) சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஈஷா யோகா மையம் தரப்பில் இன்று காலை மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
’இந்த மனு இன்று பட்டியலிடப்படவில்லை என்றாலும், இன்றே அவசர விசாரணை நடத்த வேண்டும்’ என்று ஈஷா தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கோரினார்.
அதனை ஏற்று, இந்த மனு அவசர வழக்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
ஆட்கொணர்வு மனுவின் நோக்கம் அப்போதே முடிந்துவிட்டது!
அப்போது ஈஷா தரப்பில் வாதிட்ட ரோஹத்கி, ”இவை மத சுதந்திரம் தொடர்பான பிரச்சனைகள். இது மிகவும் அவசரமான மற்றும் தீவிரமான வழக்கு. இது ஈஷா அறக்கட்டளையைப் பற்றியது. மிகவும் மதிக்கப்படும் மற்றும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்டவராக சத்குரு இருக்கிறார். வாய்மொழி வாதங்கள் மீது உயர்நீதிமன்றம் இதுபோன்ற விசாரணைகளைத் தொடங்க முடியாது.
மனுதாரரின் மகள்கள் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ஆசிரமத்தில் தங்கியிருப்பதாக கூறியிருந்தாலும், ஈஷா அறக்கட்டளை மீதான கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதைக் குறிப்பிட்டு அதன் குற்ற வழக்குகளின் விவரங்களை உயர் நீதிமன்றம் கேட்டது.
மேலும், அந்த நிறுவனத்தில் உள்ள மருத்துவர் மீது போக்ஸோ வழக்குப் பதிவு மற்றும் பெண்களை காவலில் வைத்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறும் கோவை காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் துறவிகள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ஆசிரமத்தில் தங்கியிருப்பதாக உயர்நீதிமன்றத்தில் கூறியபோதே, ஆட்கொணர்வு மனுவின் நோக்கம் முடிந்துவிட்டது. அதன்பின்னர் மேற்கொண்டு உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கக் கூடாது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இரண்டு பெண்களின் தாயார் இதேபோன்ற ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அப்போது பெண்கள் விருப்பத்தின் பேரில் அங்கு தங்கியிருப்பதாகக் கூறியதை தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது” என தனது வாதத்தை ரோஹத்கி முன்வைத்தார்.
மேலும் அவர், ”உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, 150 பேர் கொண்ட போலீஸ் குழு, 5000க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ள ஆசிரமத்துக்குச் சென்றனர்” என கூறினார்.
அப்போது, “ஈஷா மையம் போன்ற ஒரு நிறுவனத்திற்குள் நீங்கள் இராணுவத்தையோ அல்லது காவல்துறையையோ அனுமதிக்க முடியாது” என்று தலைமை நீதிபதி கூறினார்.
இரு பெண்களிடம் தனியறையில் விசாரணை!
அதனைத்தொடர்ந்து மனுதாராரின் இரண்டு பெண்களும் காணொலியில் ஆஜராக இருப்பதாக ரோஹத்கி தெரிவித்தார். அதனை ஏற்று உச்சநீதிமன்ற அமர்வு, அவர்களிடம் தனியறையில் விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பின்னர் நீதிமன்றம் கூடியபோது, இரண்டு பெண்களும் தாங்களாகவே முன்வந்து ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவித்ததாகவும், ஆசிரமத்தில் தாங்கள் எந்த வற்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை என்றும், அவர்கள் எங்கும் பயணம் செய்ய சுதந்திரம் உள்ளவர்கள் என்றும், இருவரில் ஒருவர் சமீபத்தில் ஒரு மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்றதாக கூறியதாகவும் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
ஈஷா குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு மறுப்பு!
அப்போது, தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா தனது வாதத்தில், ஆசிரமத்துக்குச் சென்ற போலீஸ் குழுவில், சுகாதார அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் இருந்ததாகவும், ஆசிரம உறுப்பினர்களிடம் கையால் எழுதப்பட்ட புகார்களைக் கொடுக்க போலீஸார் வற்புறுத்தியதாக மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கு ஈஷா அறக்கட்டளையின் மனுவை ஆதரித்து வாதிட்ட மத்திய அரசின் சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ’இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
தடை விதித்து உத்தரவு!
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ஈஷா யோகா மையத்தில் காவல்துறை விசாரணை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதித்தது.
ஈஷா யோகா மையத்தின் மீது உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் 4-வது பத்தியில் உள்ள வழிகாட்டுதல்களின்படி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அதிகார வரம்பைக் கொண்ட கோவை காவல் துறையினர் விசாரணை நடத்தி, உச்ச நீதிமன்றத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ஈஷா மையத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றியதுடன், அடுத்தகட்ட வழக்கு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக்கூடாது” : ஜோ பைடன்
சமந்தா விவாகரத்து குறித்து பேச்சு: மன்னிப்பு கேட்ட தெலங்கானா அமைச்சர்!