என் மகன் செய்தது சரினு சொல்லல… டாக்டர் இப்படி பண்ணலாமா?: விக்னேஷின் தாயார் பேட்டி!

Published On:

| By Kavi

டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாயார் பிரேமா பேட்டி அளித்துள்ளார்.

சென்னை கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியது தமிழகம் முழுவதும் மருத்துவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விக்னேஷ் மீது கிண்டி மருத்துவமனை மருத்துவர் சேதுராஜ் உள்ளிட்டோர் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விக்னேஷின் தாயார் பிரேமா  புதிய பெருங்களத்தூரில் உள்ள தனது வீட்டில் இருந்தவாறு செய்தியாளர்களிடம் கூறுகையில், ”போன வருஷம் நவம்பர் மாசம் எனக்கு காய்ச்சல் வந்துச்சு. எஸ்.ஆர்.எம்-ல 11 நாள் அட்மிட் ஆகியிருந்தேன். அப்பதான் எனக்கு கேன்சர் இருந்தது தெரியவந்துச்சு.

அங்க 3 லட்சம் ஆகும்னு சொன்னதால வீட்டுக்கு வந்துட்டோம். அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்ல ப்ரீனு சொன்னாங்க. ஆனா அங்க 95 ஆயிரம் செலவு பண்ணன். டிசம்பர் 30ஆம் தேதி ஊசி போட்டாங்க. அடுத்த ஊசி போட்டுக்கமாட்டேனு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

நந்தினினு தெரிந்த நர்ஸ் சொன்னதால கிண்டி மருத்துவமனைக்கு போனோம். அங்கதான் பாலாஜி டாக்டர் இங்கேயே எல்லா ஊசியும் போட்டுகுறியாம்மானு கேட்டாரு.

முதல்ல எனக்கு இரண்டாவது ஸ்டேஜ்னு சொன்னாரு… இப்போ 5ஆவது ஸ்டேஜுனு சொல்றாங்க..

14ஆம் தேதி மருத்துவமனையில அட்மிட் ஆனேன் 14, 15, 16, 17, ஆகிய தேதிகளில் ஊசி போட்டு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அப்போதுல இருந்து அங்கதான் கீமோ போட்டு வரேன்.

கீமோ போடும் போது, உடம்பு பிரச்னை குறித்து சொன்னால், அசிங்கம் அசிங்கமா டாக்டர் பாலாஜி திட்டுவார். காலை 10 மணில இருந்து  5.30 மணி வரை உட்கார வச்சு அனுப்புவாங்க. அங்கிருந்த ஹெட் டாக்டர் சொன்னதால எனக்கு சிகிச்சை கொடுத்தாங்க..

18 நாள் அட்மிட் ஆகியிருந்தேன். பிறகு வீட்டுக்கு வந்துட்டேன்.

அதன்பின், என் மூத்தார் பொண்டாட்டி சொன்னதால விருகம்பாக்கத்துல இருக்க மருத்துவமனைக்கு போனோம். 2 மாதம் அங்கு சிகிச்சை பெற்றேன்.

அங்க சவிதா மருத்துவமனைக்கு போக சொன்னாங்க. அங்க 3 கீமோ போட்டேன்.  என்ன காப்பாத்த முடியாதுனு சொல்லிட்டு ஐசியுல வச்சு காச புடுங்குனாங்க… என்கிட்ட பணம் கிடையாது. நான் வீட்டுக்கு போறேனும் எழுதி கொடுத்துட்டு வந்துட்டேன்.

பாலாஜி டாக்டர் சரியான முறையில் சிகிச்சை அளிக்கலனு நான் சொல்லல. ஆனால் என்னுடைய உடம்பில் என்ன பிரச்னைனு டாக்டர் கண்டுபிடித்து இருக்க வேண்டாமா? 5 கீமோ வரை நல்லாயிருந்த என் நுரையீரலை எக்ஸ்ட்ரா ஊசி போட்டு பழுதாக்குனது சரியா?

இன்னிக்கு சிடி ஸ்கேன் எடுக்க வட பழனியில இருக்க ஆர்த்தி ஸ்கேன் செண்ட்டருக்கு போயிட்டு வந்தேன். வரும்போதுதான் செல்ல பாருனு சொன்னாங்க. அப்பதான் என் மகன் இப்படி பண்ணது தெரியும்.

என் மகனுக்கு என் மேல அதிக பாசம், யாராவது சண்ட போட்டா கூட வீட்டுக்கு வந்துருவான். அவனும் ஹார்ட் பேசண்ட். ஃபிக்ஸ் இருக்கு…

கடந்த 10 நாள்ல நரக வேதனைய என் மகன் பாத்துட்டான். அந்த டாக்டராலதாம்மா உனக்கு இப்படி ஆயிடுச்சுனு சொன்னான்.

அந்த டாக்டர் 25 வருசம் சர்வீஸ்னு சொன்னாரு. அப்படினா என் நுரையீரலை இப்படி பண்ணலாமா. பக்கத்து பெட்டுல பாப்பாரு. என்ன ஒரு வார்த்தை அந்த டாக்டரு கேக்கல தெரியுமா. சுரேஷ் டாக்டர், செந்தில் டாக்டரெல்லாம் வந்து கேப்பாங்க.. 50 வயசுல நான் இப்படி அவஸ்த படணுமா..” என்று கூறினார்.

பிரேமாவுக்கு அருகிலிருந்த விக்னேஷ் சகோதரர் கூறுகையில், “எங்க அம்மா செத்து போய்டுவாங்கனு சபித்தா ஹாஸ்பிட்டல சொன்னாங்க. 5500 ரூவாக்கு ஒரு மாஸ்க் வச்சிருந்தாங்க. அத எடுத்தா செத்து போயிருவாங்கனு சொன்னாங்க..

எங்கம்மாவ வெளில போய் காப்பாத்திக்கிறோம்னு சொல்லி, அங்கிருந்து கூட்டிட்டு வந்துட்ட்டோம்”என்றார்.

மீண்டும் பேசிய தாயார் பிரேமா, “உங்க செல் ரிப்பேர் ஆனா நீங்க பாப்பீங்களா இல்லையா… எனக்கு ஸ்கேன் எடுக்க எழுதீ தர்றீங்க… பின்னர் நான் ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்துட்டு வந்தா பாக்கணுமா… இல்லையா… படிச்ச ஈகோவா உங்களுக்கு…

நானா எழுதிக்கொடுத்தேன் என கேட்கிறார் டாக்டர் பாலாஜி. அப்படி மைண்டு மாறுகிறவர் ஏன் டியூட்டிக்கு வரணும். ஃபைல பாக்காமலயே கீமோ போட எழுதி தரேனு சொல்றாரு. மீறி எதாவது பேசுனா ப்ளட் டெஸ்ட் எடுனு சொல்லிடுவாரு…

பாலாஜி டாக்டர் வரலனு சுரேஷ் டாக்டர்கிட்ட போனா, அவரு கோச்சிக்காதம்மா பாலாஜி வருவார்னு சொல்லுவார். ஏன் இந்த டாக்டர் பயப்படணும். தினேஷ் டாக்டரும் இப்படிதான்  சொல்லுவாரு.

ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் பார்க்க எவ்வளவு நேரம் ஆகும். அதுதான அவரோட வேல. ஒரு நாள் கூட தண்ணீ குடி, சாப்டுனு எதுவுமே சொல்லமாட்டாரு.

நம்ம எதாவது பேசிவிட்டா நான் டாக்டரா, நீ டாக்டரா… இந்தா எல்லாத்தையும் எடுத்துட்டு போனு சொல்லிடுவாரு..

அரசாங்க மருத்துவமனைக்கு போய் என்ன இப்படி ஆக்கிட்டாங்க. கடன் வாங்கி செலவு பன்னிட்டு இருக்கேன். நான் யாரையும் ஏமாத்தமாட்டேன்.

என் மகன் இப்படி பன்னதும் எங்க வீட்டுக்கு வந்த 3 பேரு வீட்டை சோதனை பண்ணி, என்னுடைய ஃபைல் எல்லாம் எடுத்துட்டு போய்ட்டாங்க. 6ஆவது மாதம் எடுத்த நுரையீரல் ஸ்கேன் எல்லாம் அதுல தான் இருக்கு.

இப்ப அதனை எடுத்துட்டு போய்ட்டாங்க. நான் கிண்டி மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றேன். தற்போது, அந்த பைல்ல அது எல்லாம் இல்லைனா  சும்மா விடமாட்டேன். என் மகன் செய்தது சரினு நான் சொல்லல” என கண்ணீர் மல்க மூச்சு வாங்க வாங்க பேட்டி அளித்தார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எம்.எல்.ஏ-வை மிரட்டிய 17 வழக்குகளில் தேடப்படும் ரவுடி கைது!

பூனைக்கு முடி வெட்ட போய்… மண்டை காய்ந்து போன வாசிம் அக்ரம்

திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு; போலீசார் சொல்லும் புது தகவல்!

டாக்டரை ஏன் கத்தியால் குத்தினேன்? இன்ஜினியரிங் பட்டதாரி இளைஞர் விக்னேஷ் வாக்குமூலம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share