உள் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பும், தலித் அரசியலும், பொது சமூகமும்

Published On:

| By Minnambalam

ராஜன் குறை Internal Reservation for SC

இந்த வருட ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் வெகுகாலம் விசாரணையிலிருந்த ஒரு முக்கியமான சட்டப் பிரச்சினையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆந்திர மாநிலம், தெலங்கானா, பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பட்டியலின ஜாதிகளுக்கான மொத்த இட ஒதுக்கீட்டில் அவற்றுள் அதிகம் பின்தங்கிய ஜாதிகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது அரசியல் சட்டத்திற்கு முரணானதா என்ற கேள்விக்கு முரணானது அல்ல, போதிய காரணங்களும் தரவுகளும் இருந்தால் அப்படிச் செய்யலாம் என அழுத்தம் திருத்தமாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு குரல்கள் நாடு முழுவதும் எழுந்த வண்ணம் உள்ளன.

தமிழ்நாட்டில் பட்டியலின சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 18% இட ஒதுக்கீட்டில் அதிகம் அதனால் பயனடையாமல் இருந்த அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் தனிப்பிரிவாக வகைப்படுத்தப்படவில்லை. இவ்வாறு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது அநேகமாக அனைத்து கட்சிகளும் அதனை ஏற்றுக்கொண்டன. புதிய தமிழகம் கட்சி நிறுவனரான கிருஷ்ணசாமி மட்டும் இதற்கு எதிராக வழக்கு போட்டார். இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள் ஒதுக்கீடு செல்லும் என்று கூறிய பிறகு அவருடன் சேர்ந்து பல்வேறு தலித் அமைப்புகளின் தலைவர்களும் சிந்தனையாளர்களும் உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான மாநாடு ஒன்றை போடுவதாக அறிவித்துள்ளனர். இதற்கு மாறாக சி.பி.ஐ.(எம்) கட்சி உள் ஒதுக்கீட்டினை ஆதரித்து தீர்ப்பினை வரவேற்று ஒரு சிறப்பு மாநாடு நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்திய அளவில் பல்வேறு தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தத் தீர்ப்பினை எதிர்த்து ஆகஸ்ட் 21-ம் தேதி பாரத் பந்த் ஒன்றினை அறிவித்தன. பீஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இதன் தாக்கம் இருந்தது. ஆனால் உள் ஒதுக்கீட்டை அறிவித்த பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பந்த் தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. தலித் சமூகங்கள் இந்தப் பிரச்சினையில் பிளவுப்பட்டிருப்பதால் பெரும்பாலான அரசியல் கட்சிகள் திட்டவட்டமாக நிலைபாடு எதுவும் எடுக்கவில்லை. இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் பரிந்துரைத்த கிரீமி லேயர் என்ற பொருளாதார நிலையையும் கணக்கில் கொள்ளலாம் என்பதை மட்டும் அனைவரும் கண்டித்தனர்.

எதிர்ப்பவர்கள் கூறும் முக்கிய காரணங்களுள் ஒன்று, இது தலித் சமூகத்தினரை பிளவுப்படுத்துகிறது, அரசியல் சக்தியாக ஒன்றிணைய விடாமல் தடுக்கிறது என்பதாகும். இதற்கு பதிலாக அருந்ததியர் தலைவர் அதியமான் ஏற்கனவே பிரிந்துதானே இருக்கிறோம் என்று கூறிவது கருதத்தக்கது. அதாவது, அதிகம் பின்தங்கியுள்ள தலித் சமூகத்தினர் உள் ஒதுக்கீடு வேண்டும் என்று போராடித்தான் அதனைப் பெற்றார்கள். அவர்கள் சமூக அளவில் தனித்த பிரிவாக இருப்பதால்தான் அவர்களது அதிகம் பின்தங்கிய நிலையென்பது அளவிடக்கூடியதாக இருக்கிறது. அப்படித் தனிப் பிரிவாக அவர்கள் ஏற்கனவே இருக்கும்போது உள் ஒதுக்கீடுதான் அவர்களைப் பிரிப்பதாகக் கூறுவது பொருத்தமாக இருக்க முடியாது.

உண்மையில் உள் ஒதுக்கீட்டினை எதிர்ப்பதுதான் பிளவை அதிகரிக்குமோ என்று எண்ண வேண்டியுள்ளது. உதாரணமாக, கர்நாடகாவில் நீதிபதி சதாசிவம் குழுவினர் பரிந்துரைத்த உள் ஒதுக்கீட்டினைக் கோரும் தலித் பிரிவினர், பகுஜன் சமாஜ் கட்சி உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பதால் அதிலிருந்து விலகியுள்ளதாகக் காண முடிகிறது. கர்நாடகாவில் உள்ள மாதிகா பிரிவினரும், அவர்களையொத்த பிறரும் உள் ஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அவர்கள் தலித் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் அல்ல என்பது பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றியதிலிருந்து காணலாம். ஆனால், அவர்களது கோரிக்கை நிறைவேறும் சூழ்நிலை உருவாகியுள்ளபோது கட்சி தலைமை அதனை எதிர்ப்பதால் அவர்கள் வெளியேறுகிறார்கள் என்பதனையும் காண முடிகிறது.
உள் ஒதுக்கீடு வழங்கப்பட்ட மாநிலங்கள்.

முதலில் எந்தெந்த மாநிலங்களில் உள் ஒதுக்கீடு எப்போது வழங்கப்பட்டது என்பதை தொகுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்டனவா என்பதையும் காண வேண்டும். கீழே ஒரு பட்டியலாக அதனைக் காண்போம்.

Internal Reservation for SC

ஆந்திர மாநிலத்தில் செய்யப்பட்ட உள் வகைப்பாட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புதான் ஹரியானா, பஞ்சாப் மாநில சட்டங்களையும் செல்லாது என அந்த மாநிலங்களின் உயர் நீதிமன்றம் கூறக் காரணமாகும். இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு, தமிழ்நாட்டு சட்டத்திற்கு எதிரான வழக்கு ஆகிய அனைத்தையும் ஒரு சேர தொகுத்துதான் உச்ச நீதிமன்றம் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வாக 2020-ம் ஆண்டு ஆந்திர வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டது. அந்த அரசமைப்பு சட்ட அமர்வில்தான் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் மீது மேல் விசாரணை கோர முடியாது. ஆனால், சீராய்வு மனு செய்யலாம். அதன் பொருள் என்னவென்றால் தீர்ப்பின் அம்சங்களை தெளிவு செய்யும்படி கோரலாம். மற்றொரு சாத்தியம் நாடாளுமன்றம் தகுந்த ஒரு சட்டத்தை இயற்றுவதன் மூலம் இந்தத் தீர்ப்பினை பயனற்றதாக்கலாம். அதாவது, பட்டியலினத்துவருக்குள் உள் ஒதுக்கீடு செய்ய முடியாது என்று ஓர் அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றினால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பயனற்றதாகிவிடும். ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தில் பெருவாரியான உறுப்பினர்கள், கட்சிகள் ஆதரவு இருக்க வேண்டும். இது சாத்தியமா என்பது ஐயமே. ஏனென்றால், உள் ஒதுக்கீடு கோரும் தலித் தொகுதிகளை அந்நியப்படுத்திக்கொள்ள அரசியல் கட்சிகள் விரும்பாது.

மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான ஓர் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நியாயப்படுத்துவது கடினம். ஏனெனில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகச் சுட்டிக்காட்டுவதுபோல பட்டியலின சமூகங்கள் ஒருபடித்தானவை அல்ல. தீண்டாமை போன்ற அம்சங்கள் பொதுவாக இருந்தாலும், அவை வெவ்வேறு ஜாதிச் சமூகங்களாக பெயர்களைக் கொண்டிருப்பதுடன் தொழில் சார்ந்தும், சமூக ரீதியாகவும் வேறுபட்ட நிலைகளில் உள்ளவை. அவை எந்த அளவு அரசுப் பணிகளில் பங்கேற்றுள்ளன என்பதிலும் வேறுபாட்டை காட்ட முடியுமென்றால் அவற்றையெல்லாம் இட ஒதுக்கீட்டிற்கான அளவீட்டில் ஒரே சமூகமாகக் காண வேண்டும் என்று புதிய அரசியலமைப்பு சட்ட விதியை உருவாக்குவதும், அதனை நியாயப்படுத்துவதும் கடினம்.

அரசியல் கட்சிகளும், தலித் அரசியலும்

வெகுஜன அரசியல் கட்சிகள் எல்லா ஜாதிகளையும் ஒருங்கிணைக்கும் தன்மை கொண்டவை. ஒரு குறிப்பிட்ட ஜாதிச் சமூகத்திலிருந்து ஒரு கட்சி உருவானாலும் அது வளர்ச்சியடையும்போது அது அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்குவதாகவே மாறும். காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்க முயல்பவை. பாஜக முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை நிறுத்தினாலும், கூடியவரை அனைவரது வாக்குகளையும் பெற முயற்சிக்கவே செய்யும்.

இதற்கு முக்கியக் காரணம் அதிக வாக்குகள் பெறுபவரே வெற்றி பெற்றவர் என்னும் “ஃபர்ஸ்ட் பாஸ்ட் த போஸ்ட்” தேர்தல் முறை. அதனால் பொதுத் தேர்தலில் ஒரு தொகுதியில் எதிரெதிராக களம் காண்பவர்கள் தொகுதியிலுள்ள அனைவரது வாக்குகளையும் கவரவே முயற்சி செய்வார்கள். அபூர்வமாகத்தான் ஒரு தரப்பினரை மொத்தமாக விலக்கி பிறரது வாக்குகளைப் பெற நினைப்பார்கள். அப்படிச் செய்வது வெகுஜன அரசியலில் உதவாது. பாசிச நோக்கில் பெரும்பான்மைவாதத்தை தேர்தல் அரசியலில் தொடர்ந்து செயல்படுத்த முடியாது. ஏனெனில் அவ்வாறு கட்டப்படும் பெரும்பான்மைக்குள் செயல்படும் முரண்கள், அதிகாரப் போட்டிகளைத் தவிர்க்க முடியாது. அந்தப் போட்டிகள் அனைவர் ஆதரவையும் நாடும் நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.

இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தலித் சமூகத்தினர் பங்கேற்பை நாடுவதைக் காண முடியும். காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவி வகிக்கிறார். இந்தியாவின் முதல் தலித் மாநில முதலமைச்சர் காங்கிரஸ் கட்சிக்காரர்தான். ஆந்திர முதல்வராக 1960 முதல் 1962-ம் ஆண்டு வரை பதவி வகித்த தாமோதரம் சஞ்சீவய்யாதான் அவர். அதன்பின் அவர் காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார். பஞ்சாப் மாநிலத்திலும் சமீபத்தில் முதல் தலித் முதலமைச்சரைத் தேர்வு செய்தது காங்கிரஸ் கட்சிதான். கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் துணை முதலமைச்சராக மாதிகா சமூகத்தைச் சேர்ந்தவர் சிறிது காலம் பதவி வகித்தார்.

ஒரு தலித் அரசியல் கட்சியாக அணி திரட்டி ஆட்சிக்கு வந்தவர் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த மாயாவதி அவர்கள்தான். ஆனால், அவரும் கட்சியினை அனைத்து சமூகத்தினருக்குமானது என விரிவுபடுத்தினார். “சர்வஜைனிக்” என்ற கோட்பாட்டினை முன் வைத்து தலித் தலைமையில் அனைவரையும் ஒருங்கிணைக்க முனைந்தார். இந்த முயற்சிகள் அவர் அரசியலை பலவீனப்படுத்தியதாக கருதுபவர்கள் உள்ளார்கள். வெகுஜன அரசியலில் இது தவிர்க்க முடியாதது என்பவர்களும் உள்ளார்கள்.

 

தலித் அரசியலின் தேவை

தேர்தல் அரசியலின் அழுத்தங்களுக்கு அப்பால் தலித் அரசியல் அணிகளின் தேவையை முற்போக்காளர்கள் யாருமே மறுக்க முடியாது. ஏனெனில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தும் நெருக்கடிகளில் ஜாதீய ஒடுக்குமுறை பல புதிய வடிவங்கள் எடுப்பதைக் காண முடியும். நாங்குனேரி பள்ளி சிறுவன் மேல் நிகழ்ந்த தாக்குதல் நல்லதோர் உதாரணம். இதைத் தொடர்ந்து பள்ளிகளில் ஜாதீயத்தை பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என ஆராய நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு குழுவினை அமைத்தது தமிழ்நாடு அரசு. அந்தக் குழுவின் அறிக்கை பரவலாக விவாதிக்கப்பட்டு பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவது அவசியம்.

அந்த விதத்தில் பல்வேறு விதமான பழைய, புதிய ஜாதீய ஒடுக்குமுறைகளை அனைத்து பட்டியலின சமூகங்களும் சந்திப்பதால் அவற்றுக்கிடையேயான ஒருங்கிணைப்பிற்கான தேவை முன்னெப்போதையும்விட அதிகமாக உள்ளது எனலாம். பழைய, புதிய தீண்டாமை வடிவங்களை எதிர்கொள்ள தலித் அரசியல் ஒருங்கிணைப்பு என்பது மிகவும் அவசியமானது மட்டுமல்ல, சாத்தியமானதும் கூட.

அத்தகைய ஒருங்கிணைப்பை உள் ஒதுக்கீட்டின் காரணமாக இழப்பது பொருத்தமானதல்ல. இட ஒதுக்கீட்டினால் பலனடைபவர்கள் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையைக் கருதும்போது கணிசமானதல்ல. அரசுத்துறை என்பது குறைந்து தனியார் துறை அதிகரிக்கும் சூழலில் இட ஒதுக்கீட்டினை தனியார் துறைக்கும் நீடிக்காவிட்டால் அதிக பலன் இருக்காது. இந்த நிலையில் உள் ஒதுக்கீடு தவிர்க்க முடியாததாக உணரப்படும் சூழல்களில் அதனை அங்கீகரித்து, ஏற்றுக்கொள்வது ஒருங்கிணைப்புக்கு உதவக் கூடியதாக அமையும்.

ஆந்திராவில் மாதிகா சமூகத்தினரின் இயக்கம் ஒரு முன்னுதாரணம். அவர்களுக்கு முற்போக்கு சக்திகளின், பொது மன்ற சமூக நீதி சிந்தனையாளர்களின் ஆதரவு இருந்தது. காரணம், அவர்களுக்கும் மாலா பிரிவினருக்கும் இருந்த இடைவெளி எளிதில் உணரக்கூடியதாக இருந்ததுதான் எனலாம். தொண்ணூறுகளில் மாதிகா தண்டோரா இயக்கம் என்பது உள் ஒதுக்கீடு கேட்ட வீரியமிக்க போராட்டங்களை முன்னெடுத்தது பொது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

பொதுவாகவே ஒரு குறிப்பிட்ட அரசியல் தொகுதியை ஒருங்கிணைக்க முயல்பவர்கள் அந்த தொகுதியினுள் உள்ளவர்களே அதற்குள் உள்ள வேறுபாடுகளைப் பேசும்போது ஏற்கத் தயங்குவார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் தொகுதிகள் தங்கள் பிரச்சினைகளை முன்வைப்பதை இந்திய தேசியவாதிகள் விரும்பவில்லை. காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை அது சிதைத்துவிடும் என்று கருதினார்கள். நீதிக்கட்சியையும் சரி, அம்பேத்கரையும் சரி அவர்கள் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக சித்தரித்தார்கள்.

இட துசாரிகளும் கூட ஜாதீய ஒடுக்குமுறையை பேசுவது தொழிலாளர் வர்க்கம் என்ற ஒருங்கிணைப்பை சிதைத்துவிடும் என்று கருதியது உண்டு. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் ஏற்கப்பட்டபோது கூட, இடதுசாரி நண்பர் ஒருவர் இந்திய உழைக்கும் வர்க்கத்தைப் பிளக்க ஆதிக்க சக்திகள் செய்யும் சூழ்ச்சிதான் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் என்றார். தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல லட்சியவாதி அவர். ஆனால் அவரது கோட்பாட்டுச் சிந்தனை அப்படியான ஒரு பார்வையை உருவாக்கி விட்டது.

நானறிந்த வரை தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற உட்பிரிவை உருவாக்கியபோது அதிகம் எதிர்ப்பு எழவில்லை. அதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அத்தகைய பிரிவு அரசியல் அணி சேர்க்கைகளை பாதிக்கவும் இல்லை. தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் பங்கேற்பையும், வாக்குகளையும் பிரித்துக்கொள்வதாகவே இருக்கின்றன.

அந்த வகையில் உள் ஒதுக்கீடு என்பதையும் கடந்து ஒடுக்குமுறைக்கு எதிராக தலித் அரசியல் அமைப்புகளும், முற்போக்கு சக்திகளும் ஒன்றுபடுவது என்பதே காலத்தின் கட்டாயம் எனலாம். இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு ஆகியவற்றினை விவாதிப்பதும், அவற்றை மேம்படுத்துவதும் முற்றிலும் அவசியமானதே. அதே சமயம் அந்த விவாதம் நீண்ட கால லட்சியங்களான சமூக நீதி, ஜாதி ஒழிப்பு ஆகியவற்றின் மீதான கவனக்குவிப்பையும் சிதறவிடக் கூடாது என்பதும் நாம் அறிந்ததே.

கட்டுரையாளர் குறிப்பு:

Internal Reservation for SC : Supreme Court Judgment and Dalit Politics and general society by Rajan Kurai Article in Tamil

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெற்றிக் கழகமா? வெற்றுக் கழகமா? அரசியல் கட்சி என்றால்தான் என்ன?

சமத்துவம், சமூக நீதி, கூட்டாட்சி: அதிகாரத்தைப் பரவலாக்குவது எப்படி?

சமூக நீதிக்கு எதிரான “கிரீமி லேயர் விலக்கம்” என்ற கருத்தாக்கம்!

ராகுல் காந்தி, கமலா ஹாரிஸ்: பிற்போக்கு தேசியம் கேட்கும் ஒற்றை அடையாளம்

ஹேமா கமிட்டி… கொஞ்சமாவது அறிவு இருக்கா? செய்தியாளரிடம் ஜீவா வாக்குவாதம்!

ஆந்திரா, தெலங்கானாவை புரட்டி போட்ட வெள்ளம்… தவிக்கும் மக்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share