தொல்லியல் ஆய்வுகளின் சுவாரஸ்யம் : உதயச்சந்திரன் சொன்ன முக்கிய தகவல்!

Published On:

| By Kavi

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு நேற்று முதல் வரும் ஜனவரி 7ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெற்று வருகிறது.

இதை நேற்று காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொல்லியல் துறை ஆணையரும், நிதித்துறை செயலாளருமான உதயச்சந்திரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், “இது மிக முக்கியமான மேடை. இதே அரங்கில்… இதே மேடையில் 5 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ‘பண்பாடு மற்றும் அருங்காட்சியகங்கள்’ குறித்தான நிகழ்ச்சியில், கீழடி ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

மிகுந்த தயக்கத்துடன் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை தடைகளை தாண்டி உலக வரைபட எல்லைகளை எல்லாம் மீறி தமிழர்களை சென்றடைந்தது.

கீழடி என்னும் ஒற்றை சொல், உலக தமிழர்களை ஒன்றிணைத்தது. அதைதொடர்ந்து முதல்வர் திறந்து வைத்த கீழடி அருங்காட்சியகத்துக்கு உலகெங்கிலும் இருந்து 6 லட்சம் பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர்.

அந்த வரிசையில் இந்த பண்பாட்டு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கருத்தரங்கில், சிந்துவெளி குறியீடு பற்றி விவாதிக்கப்படும். சிந்துவெளி குறியீடுகளுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்பாண்டங்களில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகளுக்கும் இடையேயான அபூர்வமான ஒற்றுமைகள் ஆய்வு கட்டுரைகள் வாசிக்கப்படும்.

நூற்றாண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கக்கூடிய சிந்துவெளி எழுத்துமுறையை பதிப்பதற்கான சிக்கல்கள், சவால்கள், வழிமுறைகள் என்ன என்பது குறித்து ஆழமான மூன்று கட்டுரைகள் வாசிக்கப்படவுள்ளன.

கொற்கை, வஞ்சி, தொண்டி என தமிழ் பெயர்கள் ஏன் சிந்து சமவெளி பகுதிகளில் நிலவி வருகின்றன என்று கேள்வி முன்வைத்து, இடப்பெயரியல் ஆய்வு குறித்தும் இந்த அரங்கில் விவாதிக்கப்படும்.

தமிழ்நாடு தொல்லியல் துறை , மதுரை காமராஜ் பல்கலையின் உயிரி தொழில்நுட்பத் துறையுடன் சேர்ந்து, அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலையில் உள்ள டேவிட் வீக் லெபாரட்டரியுடன் இணைந்து மரபணுவியல் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடக்க முடிவுகள் மிகவும் உற்சாகம் அளிக்கும் வகையில் உள்ளன. இதுகுறித்து விரிவாக அலசி ஆராயப்படும்.

சிந்துவெளி நாகரிகத்தின் எச்சங்கள் மற்றும் சுவடுகள் பாறை ஓவியங்களில் இடம் பெற்றிருக்கின்றனவா என்றும் விவாதிக்கப்படும்.

பல தொல்லியல் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை செய்து வருகிறது. இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலபரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று முதல்வர் சட்டமன்றத்தில் உரைத்து கூறியதுதான் எங்களை இந்த அளவுக்கு வழி நடத்துகிறது.

தமிழ் மொழியின் தொன்மை குறித்த தொல்லியல் துறையின் முதற்கட்ட ஆய்வுகள் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளன. அது அவசரப்படாமல் முழுமையாக ஆய்வு செய்த பிறகே வெளியிடப்படும்.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை உலகின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி, தலைசிறந்த தொல்லியல் நிபுணர்களின் கருத்துகளை பெற்று, தமிழ் மொழியின் தொன்மையை அறிவியல் பூர்வமாக நிரூபிப்போம்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பேரவையில் ஆளுநர் கருத்து சொல்லலாமா? விதி என்ன சொல்கிறது?

சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர் : டெலிட் செய்து மீண்டும் போடப்பட்ட ட்விட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share