தவெக-வில் இருந்து விலகிய இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவில் இன்று (மே 22) இணைந்தார். insta fame vaishnavi joined dmk after tvk
கோவையை சேர்ந்த சமூகவலைதள பிரபலமான வைஷ்ணவி கடந்த ஒருவருடமாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பணியாற்றி வந்தார்.
சமீபத்தில் கட்சியில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து விலகுவதாக வைஷ்ணவி அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அதில், “இந்தச் சமூகத்தில் மாற்றம் ஒன்று மலராதா என்றே எனது அரசியல் பயணத்தைத் தவெக-வில் தொடங்கினேன். ஆனால், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்து,
கடந்த மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என் வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்து கட்சியின் வளர்ச்சியை தடுக்கச் சிலர் செயல்படுகிறார்கள். தொடர்ந்து நிராகரிக்கப்பட்டேன்.
கட்சியில் இருக்கும் சில நாசக்காரர்களின் சதியாலும் உயர்மட்ட நிர்வாகிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததாலும் எனது வார்டில் இருக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொடுக்கக்கூட எனக்கு அனுமதி கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டேன்.
மாநில அளவில் கட்சிக்காக உழைக்கும் எனக்கு ”சமூக வலைதளங்களில் நீங்கள் பேசக்கூடாது போஸ்ட் போடக் கூடாது, உங்களுக்கு லைக் அதிகமாக வருகிறது எங்களுக்கு அது எரிச்சலைத் தருகிறது, மாவட்ட நிர்வாகிகளைத் தாண்டி நீங்கள் வேகமா வளர்கிறீர்கள், அது எங்களுக்கு உறுத்தலாக இருக்கிறது” என வெளிப்படையாகவே மிரட்டியது என தொடர்ந்து பல இடங்களுக்கு, கூட்டத்திற்கு நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தேன். எனவே நான் என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன்” என்று அதில் கூறியிருந்தார்.
இதனையடுத்து தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவியை தங்கள் கட்சியில் இணையுமாறு பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், மதிமுகவின் இணையதள ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ் ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர்.

அதற்கு ’நிச்சயமாக எனது மக்கள் பணி தொடரும்’ என்று மட்டும் குறிப்பிட்டிருந்த வைஷ்ணவி, செந்தில் பாலாஜி தலைமையில் இன்று திமுகவில் இணைந்தார். அவருடன் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் – இளம் பெண்களும் திமுகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவி, “தவெகவில் ஒரு வருடமாக பயணித்தேன். தவெக இளைஞர்களை வைத்து அரசியல் செய்வார்கள் என்று தான் என்னைப்போன்ற பல இளைஞர்கள், பெண்கள் இணைந்தோம். ஆனால் அதிருப்திதான் மிச்சம். இளைஞர்களுக்கான அரசியலை அவர்கள் சுத்தமாக முன்னெடுக்கவில்லை. இன்றைய தினம் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளேன். என்னை பொறுத்தவரை தவெக பாஜகவின் இன்னொரு பிரிவுதான். எனவே என்னுடைய மக்கள் பணி இன்று திமுக வழியாக தொடரும்” என அவர் தெரிவித்தார்.
வைஷ்ணவியின் தாய் ஏற்கெனவே கவுண்டம்பாளையம் திமுக பகுதி மகளிர் அணி அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.