லஞ்சப் புகார் வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர், தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
2010 ஆம் ஆண்டு, மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றியவர் பெருமாள் பாண்டியன். மதுரை அரசு மருத்துவரான அசோக்குமார், அனுமதி இல்லாமல் வீடு வாங்கிய புகாரில், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் ரூ.7 லட்சம் வரை லஞ்சம் கேட்டிருக்கிறார்.
இதையடுத்து அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துணைக் கண்காணிப்பாளர் இராம.அம்பிகாபதி, லஞ்சம் பெறும் போது பெருமாள் பாண்டியனை கையும் களவுமாகக் கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தார். இவ்வழக்கு மதுரையில் உள்ள ஊழல் வழக்குகளுக்கான தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் தீர்ப்பாயம் சென்று உத்தரவு பெற்று மீண்டும் பணியை தொடர்ந்தார்.
இந்நிலையில், ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மதுரை தனி நீதிமன்றம் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தீர்ப்பளித்தது. ஊழல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் ஒருவர் ஊழல் தடுப்புப் பிரிவினராலேயே கைது செய்யப் பட்டு சிறைத்தண்டனை பெற்றது தமிழ்நாட்டில் இதுவே முதல் முறையாகும்.
தண்டனை கொடுத்த அன்று தேனி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளராக இருந்த பெருமாள் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுத்தனர்.
தண்டனை பெற்ற நாளன்றே அதே நீதிமன்றத்தில் இடைக்கால பிணை மனு தாக்கல் செய்து வெளியில் வந்தார் பெருமாள் பாண்டியன்.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 17) மதியம் 1.00 மணியளவில் கீழ் வைத்தியநாதபுரம் நேரு வீதியில் உள்ள இல்லத்தில் மனைவி உமா மீனாட்சியைச் சுத்தியால் அடித்து கொலை செய்துவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் பெருமாள் பாண்டியனும் தற்கொலை செய்து கொண்டார்.
கணவரால் கொலை செய்யப்பட்ட உமா மீனாட்சி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் ஒருவர் கல்லூரியில் படிக்கிறார், இன்னொருவர் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பெருமாள் பாண்டியன் பூர்விகம் கவிஞர் வைரமுத்து ஊரான வடுகபட்டி ஆகும். ஒரே நேரத்தில் இரண்டு பேரும் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
**வணங்காமுடி**
