கோவை, மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இன்று (டிசம்பர் 23) ஆய்வு நடத்தினர்.
கோவை வனப்பகுதியில் உள்ள யானைகள் வழித் தடமான மருதமலை பகுதியில் 110 கோடி ரூபாய் செலவில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது சிலை அமைக்கப்பட உள்ள இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 137 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் யானை வழித்தடங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உயர் நீதிமன்றம் சிலையின் இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யும்படியும், சிலை அமைய உள்ள சரியான இடம், பார்க்கிங் போன்ற அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து முழு விவரங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத் சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆகியோர் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதில் கோவில் அடிவாரத்தில் உள்ள 4.96 ஏக்கர் பரப்பளவில் 23 சென்ட் நிலத்தில் மட்டும் 184 அடி உயரமுருகன் சிலை நிறுவ கோவில் நிர்வாக முடிவு செய்து உள்ளது. மீதமுள்ள 4.73 ஏக்கர் நிலம் அப்படியே விடப்படும் அந்த இடத்தில் 15,000 பக்தர்கள் வரை தங்க முடியும்.
மேலும் கோவை பாரதியார் பல்கலைக் கழகம் அருகில் உள்ள 7.98 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை குத்தகைக்கு எடுக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. சிலை அமையும் இடத்திலிருந்து 600 மீட்டர் தொலைவில், பேருந்து நிலையம், வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேசமயம் சிலை அமைய உள்ள முருகன் சிலையில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யானை வழித்தடத்தை எந்த வகையிலும் பாதிக்காது பக்தர்களால் வனவிலங்குகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு கோபுரத்தை அமைத்து வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்றும் அதில் கூறினர்.
இதை அடுத்து நீதிபதிகள் மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலையை நிறுவ முடிவு செய்து உள்ள இடத்தை வனத் துறையினர் தொடர்பான வழக்குகளில் மூத்த வழக்கறிஞர் மோகன், வழக்கறிஞர் சந்தான ராமன் மற்றும் அறநிலையத்துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, அது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இதையடுத்து இன்று காலை முதல் வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் 184 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைய உள்ள இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சோமையம்பாளையம் பகுதியில் அமைய உள்ள ஐடி பார்க் இடம், கணுவாய் அடுத்துள்ள அனுவாவி சுப்ரமணியர் கோயிலில் வனப்பகுதியில் அமைய உள்ள விஞ்ச் ஆகியவற்றையும் பார்வையிட உள்ளனர்.
யானை வலைசைப்பாதையான ஆனைகட்டி பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அப்பகுதிகளையும் இந்த குழுவினர் பார்வையிட உள்ளனர். மேலும் தமிழ்நாடு, கேரளாவை இணைக்கும் ஆனைகட்டி மலைப்பாதையில் மனித, வாகன, வனவிலங்கு மோதலை தடுக்கும் வகையில், இரவு வேளைகளில் போக்குவரத்து கட்டுப்படுத்துவது குறித்தும் இந்த குழு ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
