ராஜன் குறை
சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு விசித்திர, விபரீத சூழல் ஏற்பட்டுள்ளது. முற்றிலும் அநீதியான, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான, இட ஒதுக்கீடு என்ற இந்திய மக்களாட்சி பாதையின் மகத்தான தத்துவத்தையே குழி தோண்டிப் புதைக்கும் ஒரு சட்டத்துக்கு, பொருளாதார நலிவுற்ற பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு என்ற அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தினை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அது மட்டுமல்ல, தமிழகத்துக்கு வெளியே இந்தியாவின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் அதை வெளிப்படையாகவோ, மெளனமாகவோ ஆதரிப்பதும், முற்போக்காளர்கள், நாட்டு நலனில் அக்கறையுள்ளோர் என்று கருதத்தக்கவர்கள் கூட இந்த விஷயத்தில் தெளிவின்றி பேசுவதையும் காண முடிகிறது.
நூறாண்டுக்கால சமூக நீதி சிந்தனை தழைத்தோங்கிய தமிழ் நாட்டில் மட்டுமே எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலிக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடு இந்தச் சட்டத்தை ஏற்காது என்று அறிவித்துள்ளார். தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டுமே உச்ச நீதிமன்றத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்காடியுள்ளன.
பிற மாநிலங்களில் எதிர்ப்புக்குரல் எழுப்பாத காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள்கூட தமிழகத்தில் எதிர்க்க முன்வந்துள்ளன. பாஜக அணியில் இருக்கும் பாமக கட்சியும் எதிர்க்கிறது. பாரதீய ஜனதா கட்சியும், அதன் அடிவருடியான அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளே தமிழகத்தில் பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கின்றன.
இந்தச் சட்டத்தை எதிர்ப்பது, ஆதரிப்பது ஆகியவற்றையெல்லாம் வெறும் தேர்தல் அரசியல் கணக்குகளுக்குள் சுருக்க முடியாது, கூடாது. அரசியல் தத்துவத்தின் அடிப்படைகள் குறித்தது இந்தச் சட்டம். அது என்னவென எளிமையாகவும், தெளிவாகவும் எண்ணிப் பார்ப்போம்.

இட ஒதுக்கீடு என்ற தத்துவம்
ஒரு மக்களாட்சி குடியரசில் எல்லா குடிமக்களும் சமமானவர்கள். ஜாதி, மதம், பாலினம் உள்ளிட்ட எந்த அடிப்படையிலும் அவர்களை வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது என்பது இந்த அரசியல் தத்துவத்தின் உயிர் மூச்சு. ஆனால், இதற்கு முக்கியமான ஒரு விலக்கு அளிக்கப்படுகிறது. அதன் பெயர் நேர்மறை வேறுபடுத்தல் அல்லது இழப்பீடு வேறுபடுத்தல் (Positive discrimination or Compensatory discrimination) என்று அதைக் கூறுவார்கள்.
அது என்னவென்றால் வெகுகாலமாக சமூகத்தின் ஒரு பிரிவினர், அதாவது ஒரு ஜாதியினர், சமூக விலக்கத்துக்கு ஆட்படுத்தப்பட்டிருந்தால், அதன் காரணமாக அவர்கள் கல்வியிலோ, வேலைவாய்ப்புகள் பெறுவதிலோ பின் தங்கியிருந்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட சதவிகித இடங்களை கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வழங்க வேண்டும் என்பதுதான் அது.
அதாவது அனைவருக்கும் சம வாய்ப்பு இருக்க வேண்டுமானால், அந்த சமூக பிரிவினரின் பிற்படுத்தப்பட்ட நிலையைக் கருத்தில்கொண்டு அவர்களுக்குத் தனிப்பட்ட இது ஒதுக்கீடு வழங்கினால்தான் அவர்களும் பிறர் போல கல்வியும், வேலைவாய்ப்புகளும் பெறும் சமதளம் உருவாகும் என்பதே இந்த சமூக நீதி தத்துவம்.
இப்படி ஒரு சமூக பிரிவினரை இனம் கண்டு இட ஒதுக்கீடு வழங்க, அவர்கள் பின் தங்கிய நிலைக்கு பொதுவான சமூக அமைப்பு சார்ந்த காரணம் இருக்க வேண்டும். அந்தப் பொதுத்தன்மை நீண்ட நாள் வரலாற்றில் விளைந்த பொதுத்தன்மையாக இருக்க வேண்டும். அது இன்றும் அவர்கள் சமூக நிலையால், சமூகத்தின் பல்வேறு உயர் மட்ட பதவிகளில் அவர்கள் வீற்றிருக்கிறார்களா போன்ற கணக்கெடுப்பால் நிறுவப்பட வேண்டும்.
பொருளாதார நலிவுற்றோர் ஒரு சமூகப் பிரிவினரா?
ஒன்றிய அரசின் சட்டம் ஆங்கிலத்தில் EWS என்று ஒரு சமூகப் பிரிவாக இவர்களைக் கூறுகிறது. அப்படி Section அல்லது பிரிவாக இவர்கள் இருந்தால் இவர்களது பொதுத்தன்மை என்ன? அது வரலாற்று கதியில் உருவானதா என்று கேள்வி எழுப்ப வேண்டும்.
இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் எப்படி வரையறை செய்கிறது என்றால் இவர்கள் வேறு இட ஒதுக்கீட்டினை அனுபவிக்காத பிரிவினராக இருக்க வேண்டும் என்கிறது. அப்படியானால் இவர்கள் சமூக நிலையில் முன்னேறிய வகுப்பினர் என்பது வெளிப்படையானது. அப்படியானால் அவர்கள் பொருளாதார நலிவு என்பது பொதுவான காரணங்களால் உருவானது அல்ல. அது அவரவர் தனிப்பட்ட வாழ்வியல் சூழலால் உருவானது.
இந்த இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படையே அன்றைய நிலையில் ஒருவரது தந்தைக்கான வருமானம் என்ன என்ற கேள்விதான். இது எந்த பொது வரலாற்றுக் காரணிகளாலும் அமைந்தது அல்ல. அந்த மனிதர் தனது ஊக்கமின்மையால் தக்க வருமானத்தை ஈட்டாதவராக இருக்கலாம். தீய பழக்கங்களால் வாழ்க்கையைச் சீரழித்துக்கொண்டவராக இருக்கலாம். பேராசையால் பொருளை இழந்தவராக இருக்கலாம். வணிகத்திலோ, தொழிலிலோ கவனமின்மையால் பொருளை இழந்து வறுமையில் வாடுபவராக இருக்கலாம்.
எத்தனையோ குடும்பங்களில் உடன்பிறந்தோரில் ஒரு சிலர் தங்கள் முயற்சியால் திறன்களைப் பெற்று வசதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள். சிலர் பல்வேறு கவனச் சிதறல்களால், எண்ணப் போக்குகளால் , தவறான முடிவுகளால் குறைந்த வருமானத்தில் வாழ்வார்கள். இதில் ஒவ்வொருவர் காரணங்களும், பின்புலங்களும் தனித்துவமிக்கதாக இருக்கும்.
உதாரணமாக, பள்ளியில் நன்கு படித்த மாணவர், கல்லூரியில் காதல் பிரச்சினையில் கவனம் சிதறி படிக்க இயலாமல் போகலாம். ஒருவருக்கு போதைப் பழக்கத்தால் கல்வி சீர்கெட்டுப் போகலாம். இவர்களெல்லாம் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்த நேரலாம். இவர்களையெல்லாம் எந்த அடிப்படையில் ஒன்றாகச் சேர்த்து பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் என்று ஒரே வகைப்பாடாக சொல்வது?

பொருளாதார நலிவுற்றோர் ஒரு வகுப்பா, வகைமையா?
சில மேதாவிகள் அரசியல் அமைப்பு சட்டத்தில் Socially and Educationally Backward Classes என்றுதான் இருக்கிறது. Caste என்று அதாவது ஜாதி என்று கூறவில்லை என்பார்கள். ஆங்கிலத்தில் கிளாஸ் என்பது ஒரு வகைமை; வகைப்படுத்தப்பட்டதால் வகுப்பு.
ஒரு சிறுமியிடம் நீ எந்த கிளாஸ் படிக்கிறாய், அல்லது எந்த வகுப்பு படிக்கிறாய் என்று கேட்டால் ஐந்தாம் வகுப்பு அல்லது ஐந்தாம் கிளாஸ் என்று சொல்வாள். இங்கே அது தேர்ச்சி நிலையினை ஒட்டி வகைப்படுத்தப்பட்டதை குறிக்கிறது. ரயிலில் நான் இரண்டாம் வகுப்பில், Second Class-இல் பயணம் செய்தேன் என்றால் அது வசதிகளின் அடிப்படையில் ரயில் பெட்டிகள் வகைப்படுத்தப்பட்டதை குறிக்கிறது.
மேலும் சொன்னால் Classification என்ற வகைப்படுத்தலின் சுருக்கமே Class. அந்த வகையில் ஒரு ஜாதியை சேர்ந்தவர்கள் ஒரு சமூக வகைப்பாடு என்ற அளவில் Social Class என்றுதான் கூற வேண்டும்.
இதில் என்ன பெரிய கேள்வியென்றால் தந்தையின் வருமானம் ஒரு மாணவனின் கல்வியை பாதிக்கும் என்பதற்கு ஆதாரம் உண்டா என்பதுதான். எழுபதுகளில் விவேகானந்தா டுட்டோரியல் காலேஜ் என்னும் நிறுவனம் பல பத்திரிகைகளில் விளம்பரங்கள் தரும். அதன் விளம்பர வாசகம் சுவாரஸ்யமானது: “தெரு விளக்கில் படித்தும் மேதையானோர் உளர்” என்பதுதான் அது.
மருத்துவராக விரும்பிய அனிதா, நீட் தேர்வால் உயிரிழந்தவர், எத்தகைய வறிய சூழ்நிலையிலிருந்து படித்து பள்ளி இறுதி தேர்வில் எத்தகு மதிப்பெண்களைப் பெற்றார் என்பதை சிந்தித்தால், பொருளாதார நலிவுக்கும் கல்வித் தேர்ச்சிக்கும் எப்படியான தொடர்பை சிந்திக்கிறார்கள் என்று வியப்பாக இருக்கும்.
இதற்கு மாறாக, தந்தையின் வருமானம் மிகவும் குறைவாக இருக்கும் ஒரு நகர்ப்புற முன்னேறிய ஜாதி மாணவன், தனது மாமாவிடமிருந்து நிறைய உதவிகளைப் பெறலாம். இருந்தும்கூட படிப்பில் கவனம் செலுத்தாமல் ஊதாரியாக திரியலாம். அவனுக்கும் அரிய வகை ஏழை என்று அரசு இட ஒதுக்கீடு கொடுக்குமென்றால் அது சமூகத்தைச் சீரழித்து விடாதா?
இறுதியாக பொருளாதார நலிவு என்பது நிலையானது அல்ல. என்னுடைய பள்ளி வயதில் நான் மிகவும் வசதியாகவும் வாழ்ந்திருக்கிறேன். கடுமையான வறுமையையும் சந்தித்துள்ளேன். என் தந்தை எடுத்த சில தவறான முடிவுகள்தான் அதற்கான காரணம். துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி எல்லாம் வசதியான குடும்பத்தில் வாழ்பவனாகப் படித்து விட்டு, பள்ளி இறுதி ஆண்டு படிக்கும்போது தந்தை நொடித்துப் போய்விட்டால், உடனே எனக்கு இட ஒதுக்கீடா?
நீங்கள் எப்படிப் பார்த்தாலும் ஜாதி ஒரு சமூக வகைமை என்பதைப் போல, பொருளாதார நலிவு என்பதை ஒரு சமூக வகைமை என்று நிறுவவே முடியாது. அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது ஊக்கமின்மையையே உற்சாகப்படுத்தும் சமூக அநீதி என்றால் மிகையாகாது.
பொருளாதார நலிவுற்றோர் ஒரு வர்க்கமா?
இந்த Class என்ற வார்த்தையை மார்க்சீயத்தில் வர்க்கம் என்று கூறுவார்கள். மார்க்சீயத்தில் வர்க்கம் என்ற வகைப்பாடு உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் செய்யப்படுகிறது. பண்டங்களை உருவாக்க தன் உழைப்பை நல்குபவன் உழைக்கும் வர்க்கம். உற்பத்திக்கான மூலப்பொருட்கள், உபகரணங்களை வாங்க முதலீடு செய்பவன் முதலாளி. அவனைப் போன்றவர்கள் முதலாளி வர்க்கம்.
பொருளாதார நலிவுற்றோர் என்பது ஒரு வர்க்கமல்ல. அது யாருக்கு வேண்டுமானால் நிகழக்கூடிய ஒரு சூழ்நிலை. பேராசைப்பட்டு பல தொழில்களில் முதலீடு செய்யும் முதலாளி நஷ்டமடைந்து பொருளாதார நலிவுறலாம். உழைப்பாளி உழைப்பில் கவனமின்றி இருந்து வேலையை இழந்து பொருளாதார நலிவுறலாம்.
பொருளாதார நலிவு என்பது ஒரு வாழ்நிலையே தவிர ஒரு சமூக வகைப்பாடல்ல என்பதை இன்னும் பல நூறு உதாரணங்கள் கொடுத்து விளக்கலாம். இது ஆழ்ந்து சிந்திக்கத்தக்க விஷயமாகும்.
பொருளாதாரத்தையும், வகுப்பு என்ற சிந்தனையையும் குழப்பியது எப்போது?
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தபோது தூவப்பட்ட விஷ விதைதான் க்ரீமி லேயர். அதாவது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு உண்டு; ஆனால் அவர்கள் தந்தையரின் ஆண்டு வருமானம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதிருந்த நிலையில் ஓர் அரசியல் பேரத்தில் இதை அரசியல் கட்சிகள் அனுமதித்து விட்டன. தி.மு.க அன்றும் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
மண்டல் இட ஒதுக்கீடு என்பது எப்படி சில ஜாதிச் சமூகங்கள் வளர்ச்சியில் பின் தங்கி உள்ளன என்பதைக் குறித்த தரவுகளின் அடிப்படையில் உருவானது. அந்தச் சமூகங்களிலிருந்து பல்வேறு துறைகளில் கல்வி கற்க மாணவர்கள் செல்வதில்லை என்ற நிலையைச் சீர்செய்ய வேண்டும் என்பதே நோக்கம்.
இயல்பாகவே இந்தச் சமூக விலக்கத்தினை மீறி பல துறைகளில் கல்வி கற்க ஒரு மாணவர் முனைய வேண்டுமென்றால், அவர் பொருளாதார ரீதியாக வலிமையாக இருந்தால்தானே முடியும். அந்த மாணவரை கிரீமிலேயர் என்று அனுமதிக்க மறுத்துவிட்டால், வேறு எப்படி மாணவர்களை தேர்வு செய்வது? சமூக வகைப்பாடாக அவர் சந்தித்த காயத்துக்கு மருந்திடுவதற்கும், குடும்ப வருமானத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
இந்தச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராடுவது எழுபதாண்டுக் கால சமூக நீதிப் பயணத்தைக் காப்பதற்கு இன்றி அமையாதது என்றால் மிகையில்லை.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
பாரதீய ஜனதா கட்சி அரசியலும், பாரத் ஜாடோ யாத்திரையும்
Comments are closed.