சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கின்னாவுர் மாவட்டம் கஷங் நுல்லா என்ற பகுதியில் கார் விபத்தில் சிக்கினார். அவரைத் தேடும் பணி இன்று (பிப்ரவரி 7) நான்காவது நாளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
காரை ஓட்டிக் கொண்டிருந்தபோது மலைப்பாதையில் எதிரே பெரிய பாறை உருண்டு விழுந்ததால், டிரைவர் காரைத் திருப்ப முயற்சித்த நிலையில் பேலன்ஸ் இழந்து விட்டார். அதனால், சட்லெஜ் நதிக்குள் கார் விழுந்தது. இதில் டிரைவர் உயிரிழந்தார். வெற்றியுடன் பயணித்த கோபிநாத் நதியின் ஓரத்தில் பள்ளத்தாக்கில் காயங்களுடன் விழுந்து கிடந்தார். அவர் சிம்லா இந்திரா காந்தி மருத்துவமனையில் தற்போது அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.
வெற்றியை தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெற்றி பற்றிய தகவல் தருவோருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் தருவதாக சைதை துரைசாமி இமாச்சல பிரதேச போலீஸ் மூலமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சைதை துரைசாமி வெளியிட்டுள்ள உருக்கமானவேண்டுகோளில், “காணாமல் போன எனது மகனைக் கண்டுபிடிக்க உள்ளூர்வாசிகள் உதவ வேண்டும். இந்த சூழ்நிலையால் மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன். என் மகன் வெற்றியை பத்திரமாக திரும்பப் பெறுவதற்கு வழிவகுக்கும் தகவலை வழங்குபவர்களுக்கு 1 கோடி ரூபாய் வெகுமதியாக அளிப்பேன்” என்று கூறியுள்ளார்.
இந்த வேண்டுகோளை இமாச்சல பிரதேச போலீஸார் விபத்து நடந்த பகுதியைச் சுற்றியும் உள்ள வட்டாரங்களில் உள்ளூர் மொழியில் விளம்பரம் செய்துள்ளனர்.
விபத்து நடந்த கின்னாவுர் போலீஸ் துணை ஆணையர் அமித் குமார் ஷர்மா, “வெற்றியின் தந்தை சைதை துரைசாமி என்னுடன் தொடர்பில் உள்ளார். விபத்து நடந்த சூழ்நிலைகளை விசாரிக்கும் அதே வேளையில் வெற்றியைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மூலமாக தேடுதல் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விபத்து நடந்த இடத்தில் சட்லெஜ் கரையோரம் வசிக்கும் பழங்குடியின கிராம மக்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெற்றியை தேடும் பணி நான்காவது நாளாக தொடர்கிறது.
–வேந்தன்
மோடியின் உரை… விஜய் புதுக் கட்சி: ஸ்டாலின் இன்ட்ரஸ்டிங் பதில்!
கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன : எடப்பாடிக்கு அமித் ஷா அழைப்பு!