T20WorldCup Final : இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இறுதிப்போட்டி இன்று (ஜூன் 29) நடைபெற உள்ள நிலையில், தோனியை போன்று நாட்டின் ஹீரோவாக மாற கோலிக்கும் ஒரு அருமையான வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் கைஃப் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஒருமுறை கூட தோற்காமல் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வென்று இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் யார் ஆதிக்கம் செலுத்தி கோப்பையை கைப்பற்றுவார்கள் என்பதை காண ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
அதே அளவுக்கு இந்திய மூத்த வீரரான விராட் கோலியின் பேட்டிங் மீதும் ரசிகர்களின் கவனம் உள்ளது.
ஐசிசி T20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக 1,216 ரன்களுடன் இன்றுவரை கோலியே முதலிடத்தில் உள்ளார். ஆனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது அவரது மோசமான சாதனையாக பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் 15 இன்னிங்ஸ்களில் 741 ரன்கள் குவித்த அவர், அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். ஆனால் நடப்பு டி20 உலகக்கோப்பையில் இதுவரை அதிகபட்சமாக 34 ரன்கள் மட்டுமே அடித்த கோலி, இருமுறை டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவரது பேட்டிங்கை விமர்சித்தும், சிலர் அவரை டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்திருக்கவே கூடாது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
எனினும் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் நிச்சயம் தன் மீதான பதிலடி கொடுப்பார் என கோலிக்கு ஆதரவாக கேப்டன் ரோகித் ஷர்மா முதல் கிறிஸ் கெயில் வரை என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் 2011 ஒருநாள் உலகக்கோப்பையில் முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனியின் ஃபார்மை குறிப்பிட்டு, அவரைப்போலவே கோலியாலும் சிறந்த ஆட்டத்தை இன்று வெளிப்படுத்த முடியும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2011ஆம் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டி வரை தோனியின் பேட்டிங் எடுபடவில்லை. ஆனால் அவர் இறுதிப் போட்டியில் அந்த அபாரமான வின்னிங் சிக்ஸருடன் 91 ரன்கள் குவித்து தனது ஃபார்மை நிரூபித்தார். இந்திய அணிக்கு 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் உலகக்கோப்பையையும் வென்று கொடுத்தார்.
இதை விராட் கோலி நினைவில் கொள்ள வேண்டும். உலகின் எந்த அணி பந்துவீச்சு தாக்குதலையும் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியும். இந்த உலகக்கோப்பையின் கோலி ஹீரோவாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என நினைக்கிறேன்” என்று கைஃப் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா