INDvsENG : டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த அஸ்வின்

Published On:

| By christopher

Ashwin 500 wicket in Test cricket

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் க்ராலியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அதிவேகமாக 500 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். Ashwin 500 wicket in Test cricket

இந்திய கிரிக்கெட்டில் கடந்த 13 ஆண்டுகளாக விளையாடி வருகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என கிரிக்கெட்டின் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் முத்திரை பதித்த அவர் இதுவரை 279 போட்டிகளில் விளையாடி மொத்தம் 727 விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.

விசாகப்பட்டணத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியுடன் 499 விக்கெட்டுகள் எடுத்திருந்த அஸ்வின், தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை ராஜ்கோட்டில் தற்போது நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில் எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதன்படியே ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 2வது நாளில், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து வீரர் க்ராலியின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். இதன்மூலம் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் மற்றும் ஒன்பதாவது சர்வதேச பந்துவீச்சாளராக அஸ்வின் வரலாற்றில் பெயர் பொறித்துள்ளார்.

மேலும் இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்குப் (87) பிறகு டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக 500 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் சாதனையையும் அஸ்வின் (98 )படைத்துள்ளார்.

இந்த சாதனையை இருவர் மட்டுமே  படைத்துள்ள நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் 100 க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் தான் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

டெஸ்ட் வரலாற்றில் 500+ விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் விவரம்!

1.முத்தையா முரளிதரன் (800)
2.ஷேன் வார்ன்  (708)
3.ஜேம்ஸ் ஆண்டர்சன் (695)
4.அனில் கும்ப்ளே (619)
5.ஸ்டூவர்ட் பிராட் (604)
6.க்ளென் மெக்ராத் (563)
7.கர்ட்னி வால்ஷ் (519)
8.நாதன் லியோன் (517)
9.ரவிச்சந்திரன் அஸ்வின் (500)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு நவம்பரில் டெஸ்டில் அறிமுகமான அஸ்வின், உள்நாட்டில் 347 விக்கெட்டுகளும், வெள்நாட்டில் 153 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

மேலும் டெஸ்ட் போட்டியில் 34 முறை ஐந்து விக்கெட்டுகளையும், 8 முறை 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இந்திய முன்னாள் ஜாம்பவான் அனில் கும்பிளேவுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ள அஸ்வினுக்கு தற்போது பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

டெல்லி போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு!

செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share