INDvsBAN : வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் அரைசதம் அடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று (ஜுன் 22) இரவு ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணியும், வங்கதேசம் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மேலும் விராட் கோலி 37 ரன்களும், ரிஷப் பந்த் 36 ரன்களும், ஷிவம் துபே 34 ரன்களும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் தன்ஷீம் மற்றும் ரிஷாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்திய இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இதனையடுத்து போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், “இன்று மைதானத்தில் சூழலை கருத்தில் கொண்டு நாங்கள் நன்றாக விளையாடினோம்.
போட்டியில் காற்று முக்கிய காரணியாக இருந்தது. எனினும் நாங்கள் ஒட்டுமொத்தமாக பேட் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டோம்.
டி20யில் அரைசதம் மற்றும் சதங்களைப் பெற வேண்டும் என்று நான் நம்பவில்லை. பந்து வீச்சாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம்தான் முக்கியம். விளையாடும் 8 பேட்ஸ்மேன்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். இன்று அதனை தெளிவாக செயல்படுத்தினோம்.
ஹர்திக் பாண்டியா குறித்து கடந்த ஆட்டத்திலும் நான் குறிப்பிட்டேன். அவர் நன்றாக பேட்டிங் செய்வது அணிக்கு நல்லது. அவருடைய திறமை என்னவென்று எங்களுக்குத் தெரியும். ஹர்திக் எங்களுக்கு மிக முக்கியமான வீரர். அவர் அதை தொடர்ந்து செய்ய முடிந்தால், அது இந்திய அணியை தொடரில் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும்” என்று ரோகித் ஷர்மா பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா