ADVERTISEMENT

5 ஆவது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து : கோயம்பேடு போல் மாறிய சென்னை விமான நிலையம்!

Published On:

| By Kavi

இண்டிகோ விமான சேவை ஐந்தாவது நாளாக இன்று (டிசம்பர் 6) பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். 

இந்தியாவின் மிகப்பெரிய  விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த ஐந்து நாட்களாக விமானங்களை இயக்க முடியாமல் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. 

ADVERTISEMENT

விமானிகளுக்கான ஓய்வு நேரம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய விதிமுறைகளைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் போதிய திட்டமிடல்களை கையாளாததால் இந்த பாதிப்பு என கூறப்படுகிறது. 

இந்த சூழலில் நேற்று புதிய விதிமுறைகளை விமான போக்குவரத்து ஆணையரகம் திரும்ப பெற்றபோதும் ஐந்தாவது நாளாக இன்றும் இண்டிகோ விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்கள் தொடர்கின்றன. 

ADVERTISEMENT

இதன் காரணமாக டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே என முக்கிய விமான நிலையங்களில் இண்டிகோ விமான பயணிகள் பல மணி நேரங்கள் காத்திருந்தும் விமானம் கிடைக்காததால் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். 

இன்று, டெல்லியில் 86 விமானங்களும், மும்பையில் 86 விமானங்களும், ஹைதராபாத்தில் 66 விமானங்களும், புனேவில் 42 விமானங்களும், திருவனந்தபுரத்தில் 6 விமானங்களும், சென்னையில் தற்போது வரை 48 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

மொத்தமாக நாடு முழுவதும் இன்றும் 400க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்த சூழலில் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் தாங்கள் சந்திக்கும் சிரமத்தை செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து பயணி ஒருவர் கூறுகையில், எனது அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் நான் டிக்கெட் புக் செய்திருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது பெங்களூருக்கு செல்ல பிற விமானங்களில் ரூபாய் 70 ஆயிரம் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அவசர தேவைக்கு கூட செல்ல முடியாத சூழ்நிலையில் நிற்கிறேன் ‘ என்று தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் விமான நிலையத்தில், நீண்ட நேரம் காத்திருந்த பெண் பயணி ஒருவர் துயரத்தில் அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கொல்கத்தாவில் இருந்து பயணி ஒருவர் கூறுகையில், நான் காலை 6.15 மணிக்கு எனது பயணத்தை திட்டமிட்டு இருந்தேன். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 நிகழ்ச்சிக்காக நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தோம். அங்கு சுமார் 74 ஆயிரம் ஸ்கிரிப்டுகள் சமர்ப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 1400 ஐடியாக்கள் தான்  தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

எங்களுக்கான மையம் நார்த் ஈஸ்டர் ஹில் யூனிவர்சிட்டியில் போடப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு செல்ல நாங்கள் திட்டமிட்டு இண்டிகோ விமானத்தில் முன்பதிவு செய்து இருந்தோம். 

ஆனால் விமானம் ரத்து காரணமாக எங்களால் செல்ல முடியாது. வேறு எந்த போக்குவரத்து வழியும் இல்லை. நாங்கள் ரயிலில் சென்றால் மூன்று நாட்கள் ஆகும். 

எனவே எங்களது ஆறு முதல் ஏழு மாத கடின உழைப்பு இப்போது வீணாகிவிட்டது. இது போன்ற வாய்ப்புகள் கிடைப்பது அரிதானது இப்போது நாங்கள் வீடு திரும்புகிறோம் ‘ என்று கவலை தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் விமான நிலையத்தில் இருந்து பயணி ஒருவர் கூறுகையில், நான் ஹைதராபாத்திலும் பிறகு கொல்கத்தாவிலும் இரண்டு நாட்கள் சிக்கிக் கொண்டிருந்தேன். எப்படியோ வெவ்வேறு விமானங்கள் மூலம் இந்த ஊருக்கு வந்தடைந்தேன். இதில் என்னுடைய உடைமைகள் எல்லாம் தொலைந்து போய்விட்டன. அதை எப்படி திரும்ப பெறுவது என்று எனக்கு தெரியவில்லை. அதற்காக விமான நிலையத்தின் நிர்வாக உதவிக்காக இங்கு காத்திருக்கிறேன் ‘ என்று தெரிவித்துள்ளார்.

விமானங்கள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருக்கின்றனர். வழக்கமாக பண்டிகை நாட்களில் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்காக மக்கள் காத்திருப்பது போல, தங்களது உடைமைகளை கையில் வைத்துக்கொண்டு பயணிகள் தவித்து வருகின்றனர். 

இதில் கேரளாவுக்கு செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் டிக்கெட் புக் செய்திருந்த ஐயப்ப பக்தர்கள் விமானம் ரத்து செய்யப்பட்டதால், ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதுபோன்று தேசிய அளவில் ஸ்கேட்டிங் விளையாடுவதற்காக விசாகப்பட்டினம் செல்ல டிக்கெட் புக் செய்திருந்த மாணவ மாணவிகள், அங்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது அவர்கள் மாற்று ஏற்பாடாக பேருந்தில் செல்ல முடிவெடுத்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 63வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025, விசாகப்பட்டினத்தில் நடக்க இருக்கிறது. ஆனால் திடீர் என விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாங்கள் எல்லாம் இங்கே இருக்கிறோம். இண்டிகோ சார்பில் இருந்து எந்த சரியான பதிலும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. விமான நிலையம் வந்த பிறகுதான் எங்களுக்கு விமானம் ரத்து செய்யப்பட்டதே தெரியும். இங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டால் ஒரு மணி வரை காத்திருங்கள் என்று சொல்கிறார்கள், சிலர் இரண்டு நாட்களுக்கு கூட விமானம் இருக்காது என்று சொல்கிறார்கள்” என்று கூறினார்கள். 

திரிபுரா மகாராஜா பீர் பிக்ரம் விமான நிலையத்திலிருந்து பயணி ஒருவர் கூறுகையில், “நான் வங்கதேசத்திலிருந்து சென்னைக்கு செல்ல வந்துள்ளேன். நாளை எங்களுக்கு ஒரு மருத்துவரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் போடப்பட்டுள்ளது. இப்போது இங்கு வந்த பிறகு, இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது” என்றார்.

இதுபோன்று, மருத்துவம், நேர்காணல், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் என பல்வேறு காரணங்களுக்காக டிக்கெட் புக் செய்து, உரிய இடத்திற்கு செல்ல முடியாமல், இண்டிகோ சார்பிலும் உரிய பதில் கிடைக்காமல் விமான நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் விமான போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share