ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு எதிரான இந்தியாவின் பதிலடி குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்ணீர், கதறல், ஆவேசத்துடன் எம்பிக்கள் கவலையை பகிர்ந்து கொண்டனர்.
பஹல்காம் படுகொலைக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளது. இந்தியாவின் எல்லை மாநிலங்களான குஜராத் முதல் இமாச்சலப் பிரதேசம் வரை விமான நிலையங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றைக் குறித்து தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் ஏவும் ஏவுகணைகள், டிரோன்கள், போர் விமானங்களை இந்தியா இடைமறித்து தாக்கி அழித்து வருகிறது.
இந்த போர்ச்சூழல் தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கவலையை வெளிப்படுத்தினர். அப்போது தாஹிர் இக்பால் என்ற எம்பி, இந்தியாவின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தானை இனி அல்லாதான் காப்பாற்ற வேண்டும் என கூறி கதறி அழுதார். பிடிஐ கட்சியின் மூத்த எம்பி ஷாகித் கத்தாக் பேசுகையில், பாகிஸ்தான் பிரதமர் இந்த நிமிடம் வரை இந்தியாவுக்கு எதிராக ஒரு கருத்தையுமே தெரிவிக்கவில்லை. இப்படி ஒரு கோழையான, மோடி என்ற பெயரை கூட உச்சரிக்க தைரியமில்லாத ஒருவர் பிரதமராக இருக்கும் போது பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு என்ன மாதிரியான செய்தியைச் சொல்ல முடியும்? ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இந்த அரசாங்கம் செயல்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள தங்களது சொத்துகளை பாதுகாப்பதில்தான் இவர்கள் கவனமாக இருக்கின்றனர். துபாயிலும் லண்டனிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இருக்கிற சொத்துகளையும் வீடுகளையும் பாதுகாக்க பறந்து ஓடுகின்றனர். ஆனால் நாங்கள் இந்த மண்ணிலேயே நிற்கிறோம்.. இந்த மண் எங்களுடையது. ஆகையால்தான் இங்கேயே நிற்கிறோம். பாகிஸ்தான் ஒன்றும் இந்த அரசியல்வாதிகளுக்கான நிலம் அல்ல என ஆவேசமாகவும் பேசினார்.
