பாஜக இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது என்று ராகுல் காந்திக்கு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழக மாணவர்களுடன் உரையாடினார்.
அப்போது ராகுல் காந்தியிடம் “இந்தியாவில் இடஒதுக்கீடு இன்னும் எத்தனை காலம் நீடிக்கும்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “இந்தியாவில் 200 தொழில் ஜாம்பவான்களை எடுத்துக்கொண்டால் அதில், எனக்குத் தெரிந்து ஒரே ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அந்தப் பட்டியலில் உள்ளார்.
இந்தியாவில் 50 சதவிகித மக்கள் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். அப்படியிருக்க நாம் பிரச்சினைக்கு சரியாக கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை.
இந்த பிரச்சினைக்கு இப்போதிருக்கும் தீர்வுகளில் ஒன்று இடஒதுக்கீடு. எனவே, இந்தியா நியாயமான இடமாக மாறும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும்” என்று கூறியிருந்தார்.
ராகுல் காந்தி இவ்வாறு பேசியதை தொடர்ந்து அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படுகிறார் என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
பாஜகவினரும் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, “
நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேச விரோத கருத்துக்களை வெளியிடுவதும் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வாடிக்கையாகி விட்டது.
ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேச விரோத மற்றும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதாக இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இந்தியா குறித்து பேசுவதாக இருந்தாலும் சரி, ராகுல் காந்தி எப்போதும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்து இந்தியாவின் உணர்வுகளைப் புண்படுத்துகிறார்.
மதம் மற்றும் மொழி வேறுபாடுகளின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் காங்கிரஸின் அரசியலை ராகுல் காந்தியின் பேச்சு அம்பலப்படுத்துகிறது.
நாட்டில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதன் மூலம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான காங்கிரஸின் முகத்தை காட்டியுள்ளார்.
அவர் மனதில் இருந்த எண்ணங்கள் வார்த்தைகளாக வெளியேறியுள்ளன. பாஜக இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, தேசத்தின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
Comments are closed.