ADVERTISEMENT

”ஒவ்வொரு இந்தியரும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” : ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

Published On:

| By christopher

indians should birth 3 child : rss mohan bhagawat

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்கு முன்னர் 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் எனப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்துள்ளது.

ADVERTISEMENT

அதனை கொண்டாடும் வகையில், ’ஆர்.எஸ்.எஸ்ஸின் 100 ஆண்டு பயணம்: புதிய எல்லைகள்’ என்ற கருப்பொருளில் தலைநகர் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஆகஸ்ட் 26 முதல் மூன்று நாட்கள் சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் இறுதி நாளான இன்று (ஆகஸ்ட் 28) ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

3 குழந்தைகள் பெற வேண்டும்!

அப்போது அவர், “மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். வலுக்கட்டாயமாக ஒருவரை மதம் மாற்றக்கூடாது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள்தொகை சமநிலையற்ற நிலையில் உள்ளது. இதற்கு மதமாற்றமும் முக்கிய காரணம். அடுத்து விஷயம் ஊடுருவல், ஒவ்வொரு நாட்டுக்கும் சொந்த விதிகள், ஒழுங்குமுறைகள் இருக்கும். எனவே, ஊடுருவல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்காக அரசு அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறது.

நமது நாட்டின் கொள்கை ஒவ்வொரு குடிமகனும் 2.1 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள பரிந்துரைக்கிறது. இது நாட்டின் சராசரி. குழந்தைகளின் எண்ணிக்கை 0.1 ஆக இருக்க முடியாது. எனவே, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தனது வீட்டில் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

நான் இதை நாட்டின் பார்வையில் இருந்து சொல்கிறேன். மூன்றுக்கு மேல் இருக்கக்கூடாது. இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அனைவரின் பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. இந்துக்களின் பிறப்பு விகிதம் ஏற்கெனவே குறைவாக இருந்தது, தற்போது அது மேலும் குறைந்து வருகிறது. ஆனால் மற்ற சமூகங்களின் பிறப்பு விகிதம் அவ்வளவு குறைவாக இல்லை, ஆனால் இப்போது அவர்களின் விகிதமும் குறைந்து வருகிறது.

பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் இடையே மோதல்!

ஆர்எஸ்எஸ் என்பது சுதந்திரமான தன்னாட்சி அமைப்பு. இதற்கு துணை அமைப்புகள் கிடையாது. மத்திய, மாநில அரசுகளுடன் நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது. எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை.

ஆனால், சில அமைப்புகளுக்குள் முரண்பாடுகள் இருக்கின்றன. அதுவும் பிரிட்டிஷ் ஆட்சி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது. அதனால், நாமும் சில புதுமைகளை கொண்டு வர வேண்டும். சில விஷயங்கள் சண்டை போல தோன்றலாம். ஆனால் அது சண்டையல்ல. சில வேறுபாடு இருக்கலாம், ஆனால் அது உண்மையல்ல. இறுதியாக தேச நலனே எங்களின் குறிக்கோளாக உள்ளது.

பாஜக முடிவில் ஆர்எஸ்எஸ் தலையீடு?

பாஜக தேசிய தலைவர் தேர்ந்தெடுப்பதில் ஆர்எஸ்எஸ் தலையீடு உள்ளது என்கிறார்கள். ஆனால் நாங்கள் அதை தீர்மானிப்பதில்லை. நாங்கள் முடிவுசெய்திருந்தால் இவ்வளவு காலம் எடுத்திருக்குமா? நாங்கள் முடிவெடுக்க வேண்டியதில்லை.

பதவியில் இருப்பவர் 100% நம்மைப் பின்பற்றுபவராக இருந்தாலும், அவர் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. அவர் அதன் விளைவுகளையும் அறிந்திருப்பார். அவரால் அதைச் செய்ய முடியுமா, முடியாதா என்பது அவரின் நிலைமையைப் பொறுத்தது. நாம் அவருக்கு அந்தச் சுதந்திரத்தை வழங்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பது முற்றிலும் தவறானது. அது ஒருபோதும் நடக்காது. அனைத்து முடிவுகளும் கூட்டாக எடுக்கப்படுகிறது. அமைப்பை நிர்வகிப்பதில் எனக்கு திறமை உண்டு. அரசை நடத்துவதில் பாஜவுக்கு திறமை உண்டு. அதனால் நாங்கள் ஆலோசனைதான் வழங்குவோமே தவிர எங்களது துறைகளில் முடிவுகளை சுதந்திரமாக எடுக்கிறோம்.

ஆர்எஸ்எஸ்-க்கு எதிர்ப்பு!

எங்கள் எதிர்ப்பவர்கள் எங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உதவி கேட்டால், அதனை செய்ய தயாராக இருக்கிறோம்.

1948-ல் ஜெய் பிரகாஷ் பாபு, தனது கையில் தீப்பந்தத்துடன் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை எரிக்கச் சென்றார். பின் அவசர நிலையின்போது, மாற்றத்திற்கான நம்பிக்கை உங்களிடம்தான் உள்ளது என்று அவர் கூறினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் பிரணாப் முகர்ஜியை குறிப்பிட்டுப் பேசிய அவர், “அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.நிகழ்ச்சிக்கு வந்தார்கள். தங்கள் கருத்தை மாற்றவில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் பற்றிய தவறான புரிதல்கள் நீங்கின.

குடும்பத் தலைவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக வருவதற்கு தடை கிடையாது. ஆனால், அந்த நபர் தனது நேரம் முழுவதையும் அமைப்பிலேயே செலவிட வேண்டும். நான் ஓய்வு பெறுவேன் என்றோ அல்லது 75 வயதானவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்றோ நான் சொன்னது இல்லை.

புதிய கல்விக் கொள்கையில் வேத காலத்தின் 64 அம்சங்கள்!

தொழில்நுட்பத்திற்கு யாரும் அடிமையாக இருக்கக்கூடாது. உரிமையாளர்களாக இருக்க வேண்டும். அதற்கு கல்வி முக்கியமானது. கல்வியறிவு அற்றவர்களின் கைகளில் தொழில்நுட்பம் சென்றால், அது பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்.

கல்வி என்பது வெறும் தகவல்களைச் சேகரித்து வைப்பது மட்டுமல்ல. ஒருவரை மனிதனாக மாற்ற வேண்டும். அத்தகைய கல்வி முறையே எதிர்பார்க்கிறோம். நமது கல்வி அமைப்பு அழிக்கப்பட்டு விட்டது. நாம் அடிமைகளாக இருந்த போது, புதிய கல்வி முறை கொண்டு வரப்பட்டது. ஆட்சியாளர்களுக்கு ஏற்ப அமைப்பு மாற்றப்பட்டது. ஆனால், இப்போது சுதந்திரம் பெற்று விட்டோம்.

நம்பிக்கைகள் மதத்துடன் தொடர்புடையது அல்ல. அவை சமூகத்துடன் தொடர்புடையது. நாம் ஆங்கிலேயராக மாற வேண்டியதில்லை. ஆனால், ஆங்கிலம் கற்றுக் கொள்வதில் எந்த தீங்கும் இல்லை. ஒரு மொழியாக அது எந்த பிரச்னையையும் ஏற்படுத்தாது. சார்லஸ் டிக்கன்ஸ் படைப்புகளை படிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், பிரேம்சந்த் போன்றவர்களின் படைப்புகளை விட்டுவிடக்கூடாது.

பாடல்கள் டிரெண்டுக்காக மட்டும் அல்லாமல், அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். பாரதத்தைப் புரிந்துகொள்ள சமஸ்கிருதம் தேவைப்படுகிறது; வேத காலத்தின் 64 அம்சங்களும் கற்பிக்கப்பட வேண்டும். குருகுலக் கல்வியை மாற்றாமல், அதனை இன்றைய கல்வியுடன் இணைக்க வேண்டும். வரலாற்றை மாணவர்கள் படிக்க வேண்டும். நமது பாரம்பரியமும், கலாசாரமும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் இந்த விஷயங்கள் உள்ளடக்கப்பட்டு இருக்கிறது” என மோகன் பகவத் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share