ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடிகளைத் தடுக்க 2.25 கோடி போலி ID-களை நீக்கிய IRCTC

Published On:

| By Minnambalam Desk

Railways

ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடிகளைத் தடுக்கும் வகையில் 2.5 கோடி போலி ID-களை நீக்கியிருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. Indian Railways Deactivated

இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சகம் கூறியிருப்பதாவது: வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு, பயனர் அனுபவம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய நடவடிக்கையாக, இந்திய ரயில்வே அதன் பயணச்சீட்டு முன்பதிவு கட்டமைப்பில் விரிவான டிஜிட்டல் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அதிநவீன அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலமும், முன்னணி உள்ளடக்க விநியோக கட்டமைப்பு சேவையுடன் ஒருங்கிணைப்பதன் மூலமும் மாற்றங்களை ரயில்வே மேற்கொள்கிறது. நேர்மையற்ற முகவர்களால் மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்படாத தானியங்கி முன்பதிவுகளை ரயில்வே கணிசமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உண்மையான பயனர்களுக்கு ரயில்வே இணையதளத்தின் அணுகல்தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய அமைப்பு அனைத்து தேவையற்ற அல்லது அங்கீகரிக்கப்படாத முகவர்களால் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளை திறம்படக் குறைத்துள்ளது, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தொடர்பாக 2.5 கோடி சந்தேகிக்கப்படும் பயனர் ஐடி-கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. 2025 மே 22 அன்று ஒரு மைல்கல் சாதனை பதிவு செய்யப்பட்டது. அன்று இதுவரை இல்லாத அளவுக்கு நிமிடத்திற்கு 31,814 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது. இது மேம்படுத்தப்பட்ட தளத்தின் வலிமையையும் சிறந்த செயல் திறனையும் எடுத்துக் காட்டுகிறது.

2023–24-ம் நிதியாண்டில் 69.08 லட்சமாக இருந்த சராசரி தினசரி பயனர் உள்நுழைவுகள், 2024–25-ம் நிதியாண்டில் 82.57 லட்சமாக அதிகரித்து, 19.53% உயர்வைப் பதிவு செய்தன. அதே நேரத்தில் இந்தக் காலகட்டத்தில் சராசரி தினசரி பயணச்சீட்டு முன்பதிவுகள் 11.85% அதிகரித்தன. இது தவிர, மொத்த முன்பதிவு பயணச் சீட்டுகளில் மின்னணு முறையில் பதிவு செய்யப்படும் பயணச் சீட்டுகள் இப்போது 86.38 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதிநவீன செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளைப் பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான பயனர் ஐடி-களை முன்கூட்டியே செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையை ரயில்வே மேற்கொண்டுள்ளது. ஐஆர்சிடிசி மூலம், தடையற்ற, பாதுகாப்பான, பயனர் நட்புடன் கூடிய பயணச்சீட்டு பதிவு அனுபவத்தை வழங்க ரயில்வே உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share