இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
இந்தோனேஷியா பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென், கிடம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ்,பிரணாய், பிரியன்ஷு ரஜாவத், ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோர் இரண்டாவது சுற்றுப் போட்டிக்கு (காலிறுதிக்கு முந்தைய சுற்று) தகுதி பெற்றனர்.
தொடர்ந்து இன்று (ஜூன் 15) 2வது சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை டி.ஒய்.டாய்யை எதிர்கொண்டார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
39 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் சீன வீராங்கனையிடம் 21-18, 21-16 என்ற நேர் செட்டில் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு சிந்து வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டு இந்திய வீரர்கள் லக்ஷயா சென் மற்றும் கிடம்பி ஸ்ரீகாந்த் விளையாடினர், இதில் லக்ஷயா சென் 17-21, 20-22 என்ற நேர் செட்டில் ஸ்ரீகாந்திடம் தோற்று தொடரை விட்டு வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய மற்றொரு இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் 21-18, 21-16 என்ற நேர் செட்டில் ஹாங்காங் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் விளையாடிய சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் 21-17, 21-15 என்ற நேர் செட்டில் சீன வீரர்களை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மோனிஷா
