“புதிய உள்நாட்டு போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சூரத், அரபிக் கடலில் தரையிலிருந்து வான் இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது” என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. navy test fires missile
ஜம்மு காஷ்மீர் பகல்ஹானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில், 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, SVES விசாக்களின் கீழ் இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் நாடு திரும்ப வேண்டும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிகாரில் அரசு நிகழ்ச்சியில் பேசிய மோடி, “பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அவர்கள் நினைத்து பார்த்திராத வகையில் மிக கடுமையாக தண்டனை கிடைக்கும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில், கராச்சிக்கு அருகிலுள்ள அரேபிய கடலில் இன்றும் நாளையும் (ஏப்ரல் 23,24) தரையிலிருந்து ஏவுகணை சோதனை நடத்த உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய கடற்கரை பகுதிகளில் கடற்படை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“இந்திய கடற்படையின் ஏவுகணை அழிப்பு கப்பலான ஐஎன்எஸ் சூரத், கடல் சார் இலக்கின் துல்லியமான கூட்டுறவு ஈடுபாட்டை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இது கடற்படையின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
இந்த சாதனை, உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயல்பாடுகளில் இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் திறமையை நிரூபிக்கிறது. மேலும், பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவுக்கான நாட்டின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த மைல்கல், நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய கடற்படையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும், ஆத்மநிர்பர் பாரதத்திற்கான அதன் அர்ப்பணிப்புக்கும் ஒரு சான்றாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. navy test fires missile
