ADVERTISEMENT

இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50% வரி இன்று முதல் அமல்- திருப்பூர் ஜவுளி தொழிலுக்கு எவ்வளவு பெரிய இழப்பு தெரியுமா?

Published On:

| By Pandeeswari Gurusamy

Indian industry hit by US 50 percent tariff

இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவிகித இறக்குமதி வரி இன்று முதல் அமலுக்கு வந்ததால் இந்திய தொழில் துறை கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவை தண்டிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அடுத்தடுத்து அறிவித்தார். இதனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஒட்டு மொத்தமாக 50 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரியை குறைக்கும் நோக்கில் இந்தியா – அமெரிக்கா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எட்டாத நிலையில் இன்று இந்திய பொருட்களின் மீதான 50 சதவிகித வரி அமலுக்கு வந்துள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் நெருக்கடியை சந்திக்கும் சூழல் உள்ளது. மேலும் 10 முதல் 25 சதவிகித வரிகளை கொண்டுள்ள அண்டை நாடுகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும் போது இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் போட்டியை எதிர் கொள்ளும் நிலை உள்ளது. இதன் காரணமாக வரும் 2026 நிதியாண்டில் 0.2 முதல் 1 சதவிகிதம் வரை மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திப்பதால் வேலை வாய்ப்பின்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அபாயமும் உள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 8,730 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும். இதனால் ஆடைகள், நகைகள், கடல்சார் உணவுகள், ரத்தினங்கள் உள்ளிட்ட பல துறைகளும் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை உருவாகி உள்ளது.

ADVERTISEMENT
500 கோடி ரூபாய் முதல் 700 கோடி ரூபாய் உடனடி இழப்பு

அதேசமயம் இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாநகரில் இருந்தே நடக்கிறது. 1980 முதல் 90 களில் இங்கு வளர்ந்த பின்னலாடை ஏற்றுமதி தொழில் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் சந்தைகளை வசப்படுத்தி ஆண்டுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் ஏற்றுமதி நடக்கிறது. இந்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 30 சதவீத அளவுக்கான பின்னலாடைகள் திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இந்த தொழிலை நம்பி நூற்றுக்கணக்கான பெரிய பின்னலாடை நிறுவனங்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இங்கு இருக்கிறார்கள்.

இந்த சூழலில் டிரம்ப் விதித்த 50 சதவீத வரியானது திருப்பூர் பின்னலாடை தொழிலை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருப்பூரில் இருந்து இறக்குமதி செய்யும் பின்னலாடை ஒன்றை 10 டாலருக்கு விற்ற ஒரு இறக்குமதியாளர், டிரம்ப் விதித்த 50 சதவீத வரி காரணமாக, இன்று முதல் அதை 16 முதல் 18 டாலர் மதிப்பில் தான் விற்க முடியும் என்ற நிலை உள்ளது. இதன் மூலம் தினசரி 500 கோடி ரூபாய் முதல் 700 கோடி ரூபாய் உடனடி இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது என தொழில் துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘அமெரிக்கா நம் மீது விதித்துள்ள வரியால் போட்டி நாடுகளுக்கு சாதகமாக அமையும். திருப்பூரின் ஏற்றுமதி பாதிக்கப்படும். இது அமெரிக்காவில் உள்ள மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். 100 ரூபாய்க்கு வாங்கும் பனியன் ஒன்றை 150 ரூபாய்க்கு வாங்கும் நிலை உள்ளது. இது அந்நாட்டு மக்களுக்குதான் முதல் பாதிப்பு.

அதேசமயம் நாம் புதிய நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தம் மேற்கொள்வது, அமெரிக்காவின் இந்த வரியை நீக்க பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அரசு சலுகைகளும் வழங்க வேண்டும். அதுவரை தாக்குப்பிடிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share