வரலாற்று உச்சத்தை எட்டிய இந்திய ஏற்றுமதி… எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Raj

Indian exports hit historic high

இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 2023-24-ல் 778.21 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று உச்சத்தைக் கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொருளாதார விரிவாக்கத்தின் உயிர்நாடி அந்த நாட்டின் ஏற்றுமதியாகும். தற்போது முன்னணி ஏற்றுமதி நாடாக விளங்கும் இந்தியா, பல நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி பொருட்கள் பட்டியலில் மருந்துகள், பெட்ரோலியப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், நவரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், ஜவுளி மற்றும் ஆடைகள், தேயிலை, கரிம மற்றும் கனிம ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு, பால் பொருட்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. குறிப்பாக இந்தியாவின் சிறந்த ஏற்றுமதி தயாரிப்புகள் பாரம்பர்ய மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பல்வேறு வகையான உலகளாவிய நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 2023-24-ல் 778.21 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று உச்சத்தைக் கண்டுள்ளது. இது 2013-14-ல் 466.22 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 67% அதிகரிப்பைக் குறிக்கிறது. வணிகப் பொருட்கள், சேவைகள் ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் வலுவான செயல்திறனால் ஊக்குவிக்கப்பட்டு, உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் விரிவாக்கப் பங்கை இந்த வளர்ச்சி பிரதிபலிக்கிறது.

2023-24-ம் ஆண்டில், சரக்கு ஏற்றுமதி 437.10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதே சமயம் சேவைகள் ஏற்றுமதி 341.11 பில்லியன் அமெரிக்க டாலர்களை பங்களித்தது. மின்னணுப் பொருட்கள், மருந்துகள், பொறியியல் பொருட்கள், இரும்பு தாது மற்றும் ஜவுளி போன்ற முக்கிய துறைகள் இந்த எழுச்சியில் முக்கிய பங்கு வகித்தன.

ADVERTISEMENT

இந்த வேகம், 2024-25 நிதியாண்டிலும் தொடர்ந்தது. 2024 ஏப்ரல்-டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 602.64 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 -ம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 568.36 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 6.03% அதிகரிப்பு. உத்திசார்ந்த, பரந்த கொள்கை நடவடிக்கைகளால் ஏற்றுமதி வலுப்படுத்தப்பட்டுள்ளது.

2013-14-ம் ஆண்டில் 314 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 2023-24-ம் ஆண்டில் 437.10 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது வலுவான உற்பத்தித் தளம் மற்றும் அதிகரித்த உலகளாவிய தேவையால் ஏற்பட்டது. 2013-14ல் 152 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சேவை ஏற்றுமதி 2023-24-ல் 341.11 பில்லியன் டாலராக விரிவடைந்துள்ளது.

ADVERTISEMENT

2004-05-ல், இந்தியாவின் ஏற்றுமதி முக்கியமாக வட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், வடகிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் ஆசியான் போன்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. 2013-14-ம் ஆண்டில், வட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மேற்கு ஆசியா ஆகியவை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு, இந்தப் பிராந்தியங்களில் ஏற்றுமதி மதிப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது. 2023-24-ம் ஆண்டில் விரைவாக ஏற்றுமதி அதிகரித்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. Indian exports hit historic high

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share