அடுத்த 24 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த இந்தியா தயாராகி வருவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. Army attacks Pakistan
கடந்த 22ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
தொடர்ந்து காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் கூடாரங்களை ராணுவத்தினர் தேடி தேடி அழித்து வருகின்றனர்.
தாக்குதல் நடந்து 8 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு பல்வேறு கட்ட ஆலோசனையை செய்து வருகிறது.
அனைத்துக் கட்சி கூட்டத்தை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஏப்ரல் 30) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகவும், விசா காலம் முடிந்து இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களை அனுப்புவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

இந்தசூழலில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை கூறியிருக்கிறது.
“ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தியா நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருக்கிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.
வெளிப்படையான நடுநிலை விசாரணை நடத்த பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால், இதனை தவிர்த்து மோதல் பாதையை இந்தியா தேர்ந்தெடுக்கிறது. இந்தியாவின் எவ்வித ராணுவ தாக்குதலை உறுதியாக எதிர்ப்போம். இந்தியா விளைவுகளைச் சந்திக்கும்” என்று பாகிஸ்தான் மத்திய தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார் கூறியுள்ளார். Army attacks Pakistan
