பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் Operation Sindoor ராணுவ நடவடிக்கை இன்னமும் முடிவடையவில்லை என்று விமானப் படை அறிவித்துள்ளது.
இந்திய விமானப் படையின் எக்ஸ் பக்கத்தில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக உரிய நேரத்தில் விரிவான விளக்கம் தரப்படும். எந்த ஒரு உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மீதான அனைத்து தாக்குதல்களும் நேற்று மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து இதனை மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் எல்லை மாநிலங்களில் நேற்று இந்த போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னரும் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியது. தற்போது இந்த எல்லை மாநிலங்களில் அமைதி நிலைமை திரும்பியுள்ளது; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையும் சீராகி வருகிறது.
அதேநேரத்தில் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த எல்லை மாநிலங்களில் சாலை, ரயில் போக்குவரத்து மட்டும் வழக்கம் போல இயங்கி வருகின்றன.
இந்தப் பின்னணியில், ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை இன்னும் முடியவில்லை என இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.