வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் இன்று (செப்டம்பர் 22) வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் இறுதியில் 376 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்ஸில் அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் எடுத்திருந்தனர்.
பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினர். இதனால் வங்கதேச அணி, 149 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இரண்டாவது இன்னிங்ஸில் 227 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில்லும் ரிஷப் பண்ட்டும் கைகொடுத்தனர். இருவரும் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்து சதமடித்தனர். இதனால் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 514 ரன்கள் முன்னிலை வகித்தது.
இதனால், 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாகீன் ஹாசன் 33 ரன்களிலும், ஷத்மன் இஸ்லாம் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இன்று தொடங்கிய நான்காவது நாள் ஆட்டத்தில் கேப்டன் நஜ்முல் ஹூசைன் சாண்டோ – ஷகிப் அல் ஹசன் ஜோடி நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இந்தசூழலில் ஷகிப் அல் ஹசன் 25 ரன்களில் அஸ்வினிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழலில் சிக்கிய வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 234 ரன்களில் வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இலங்கை அதிபர் தேர்தல்… மகிந்த ராஜபக்சே மகன் படுதோல்வி!
சுற்றுச்சூழல் நெருக்கடி Vs பருவநிலை மாற்றம்… சவால்களும் தீர்வுகளும்