ஒரே நாளில் நான்கு பதக்கங்களை வென்ற வீரர்கள்!

Published On:

| By Balaji

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இன்று ஒரே நாளில் இந்தியா நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாரா ஒலிம்பிக் போட்டிகள்ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ADVERTISEMENT

இன்று(ஆகஸ்ட் 30) நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் ரைபிஃள் எஸ்ஹெச் 1 பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா பங்கேற்றார். அதில், மொத்தம் 621.7 புள்ளிகள் பெற்று இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் அவனி லெகாரா. ஒலிம்பிக் வரலாற்றில் பெண் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை.

ADVERTISEMENT

அதுபோன்று ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் எஃப்-46 பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குர்ஜார், ஏ.எஸ். அஜித் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

அதில், தேவேந்திர ஜஜாரியா அதிகபட்சமாக 64.35 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் 64.01 மீ தூரம் எறிந்து மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், வட்டு எறிதல் போட்டியின் எஃப் 56 பிரிவில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் 44.38 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் நேற்று இந்தியாவைச் சேர்ந்த மூன்று வீரர்கள் பதக்கம் பெற்றிருந்த நிலையில், இன்று நான்கு பேர் பதக்கம் வென்றுள்ளனர். இதன்மூலம் இந்தியாவுக்கான பதக்க எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் நான்கு பதக்கங்களை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்த விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாமக நிறுவனர் ராமதாஸ், இசைமையப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டரில், “பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க தங்கப்பதக்கம் பெற்றுள்ள அவனி லெகாரா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தங்களின் அபாரமான சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் யோகேஷ் கதுனியா, ஈட்டி எறிதலில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள தேவேந்திர ஜஜாரியா, சுந்தர்சிங் ஆகியோருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share