பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்குள் இந்தியா மீண்டும் நுழையும்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

Published On:

| By Minnambalam Desk

இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் என்பதை தற்போதும் உலகம் பார்த்து கொண்டுதான் இருக்கிறது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் என்பதை தற்போதும் உலகம் பார்த்து கொண்டுதான் இருக்கிறது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

உ.பி. மாநிலம் லக்னோவில் இன்று நடைபெற்ற பிரம்மோஸ் ஏவுகணை மையம் திறப்பு விழா நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத இயக்கங்கள், பாரத மாதாவின் மணிமகுடமான காஷ்மீரில் தாக்குதல் நடத்தின. இந்திய குடும்பங்களின் குங்குமத்தை (செந்தூரத்தை) அழித்தன. அவர்களுக்கு நீதி கிடைக்கவே ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) ராணுவ நடவடிக்கையை நமது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டனர்.

ஆபரேஷன் சிந்தூர்

ADVERTISEMENT

ஒட்டுமொத்த நாடும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கு பெரும் ஆதரவைத் தெரிவித்தனர். ஆபரேஷன் சிந்தூர் என்பது ஒரு ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. இந்தியாவின் அரசியல், சமூக, தந்திரோபாய வலிமையை வெளிப்படுத்தக் கூடியது. பயங்கரவாதத்துக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையானது நமது ராணுவ வலிமையையும் பறைசாற்றியது.

பயங்கரவாதிகளுக்கு பாடம்

ADVERTISEMENT

பயங்கரவாதத்துக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் இந்தியா எந்த ஒரு ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ளும் என்பதையே ஆபரேஷன் சிந்தூர் வெளிப்படுத்தி இருக்கிறது. பயங்கரவாதிகளுக்கும் அவர்களது தலைவர்களுக்கும் எல்லைகளுக்கு அப்பாலான இடங்களும் கூட இனி பாதுகாப்பானது இல்லை என்பதை புரிய வைத்துள்ளது ஆபரேஷன் சிந்தூர்.

வழிபாட்டு தலங்களை இலக்கு வைத்த பாகிஸ்தான்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்பை ஆபரேஷன் சிந்தூர் நிர்மூலமாக்கி இருக்கிறது. நாம் ஒருபோதும் பாகிஸ்தானின் பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானோ, நமது நாட்டின் குடிமக்களைத்தான் இலக்கு வைத்து தாக்கியது. அத்துடன் வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்து தாக்கியது பாகிஸ்தான். நமது பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானில் இலக்குகளை குறிவைத்து தாக்கி அழித்த போது நிதானமாகவே செயல்பட்டனர்.

ராவல்பிண்டி வரை தாக்குதல்

நமது நாட்டின் எல்லை பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகளை மட்டும் நாம் குறிவைக்கவில்லை.. நமது தாக்குதல் பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியையும் அதிரவைத்தது. உரி தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், நமது பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானுக்குள் நுழைந்து துல்லியத் தாக்குதல்- சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்துவர் என்பதை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

மீண்டும் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல்

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் பாலகோட் வான்தாக்குதல் நடத்தப்பட்டதை உலகம் பார்த்தது. தற்போது பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்குள் நுழைந்து நமது படையினர் நடத்திய பல்வேறு தாக்குதல்களையும் உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆகையால் பயங்கரவாதத்தை துளிகூட இந்தியா சகித்துக் கொண்டிருக்காது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share