Paris Olympics 2024: இந்தியா இதுவரை ஒலிம்பிக் வரலாற்றில் 35 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் 4 பதக்கங்கள் துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கு சொந்தமானவை என்பது, ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டு இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துகிறது.
2004 ஆண்டு ஏதன்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு தொடரில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் டபுள் ட்ராப் பிரிவில், இந்தியாவுக்காக துப்பாக்கி சுடுதலில் முதன்முறையாக பதக்கத்தை வென்று கொடுத்தார், ராஜவர்தன் சிங் ரத்தோர். அப்போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அடுத்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் தொடரில், ஆடவர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில், அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.
இதை தொடர்ந்து, 2012 லண்டன் ஒலிம்பிக் தொடரில், ஆடவர் 25 மீ ராபிட் பயர் பிஸ்டல் பிரிவில் விஜய் குமார் வெள்ளிப் பதக்கமும், ஆடவர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் ககன் நரங் வெண்கல பதக்கமும் வென்று புதிய வரலாறு படைத்தனர்.
இதை தொடர்ந்து, 2016 ரியோ ஒலிம்பிக்ஸ், 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் என அடுத்த 2 ஒலிம்பிக் தொடர்களிலும், துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர், வீராங்கனை பதக்கம் வெல்லாத நிலையில்,
பாரிஸில் நடைபெறும் 2024 ஒலிம்பிக் விளையாட்டு தொடரில், பல பதக்கங்களை எதிர்நோக்கி 21 இந்திய வீரர், வீராங்கனைகள் 15 விளையாட்டு பிரிவுகளில் களமிறங்குகின்றனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த தங்க மங்கையான இளவேனில் வாலறிவன், மகளிர் 10 மீ ஏர் ரைபிள், கலப்பு குழு 10 மீ ஏர் ரைபிள் என 2 பிரிவுகளில் களமிறங்குகிறார்.
ஜூனியர் உலகக்கோப்பை, உலகக்கோப்பை, ஜூனியர் உலக சாம்பியன்ஷிப், உலக சாம்பியன்ஷிப் என பல முக்கிய தொடர்களில் தங்கங்களை குவித்த இந்த 24 வயது இந்திய வீராங்கனை, பாரிஸ் ஒலிம்பிக்கிலும் இந்தியாவுக்காக பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, 2022 ஆசிய போட்டிகளில் மகளிர் 50 மீ ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் தங்கம் வென்ற ஷிப்ட் கவுர் சம்ரா, 2024 ஒலிம்பிக் தொடரிலும் தடம் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 உலக சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் 25 மீ பிஸ்டல் பிரிவில் தங்கத்தை சுவைத்த 19 வயது இளம் வீராங்கனையான ஈஷா சிங், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸிலும் மீண்டும் தங்கத்தை சுவைக்க களமிறங்குகிறார்.
பிஸ்டல் பிரிவு ஆட்டங்களில் உலக அரங்கில் பல பதக்கங்களை வென்று குவித்த, இந்தியாவின் ஒரு சிறந்த வீராங்கனையாக அறியப்படும் மனு பாக்கர், மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல், கலப்பு குழு 10 மீ ஏர் பிஸ்டல், 25 மீ பிஸ்டல் என 3 பிரிவுகளில் பதக்கங்களை எதிர்நோக்கி களமிறங்குகிறார்.
ஆடவர் 50 மீ ரைபிள் 3 பொசிஷன் பிரிவில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா சார்பில் உலக அரங்கில் ஜொலித்துவரும் ஐஸ்வர்ய பிரதாப் சிங் தோமர், பதக்கத்தை குறிவைத்து களமிறங்குகிறார்.
ஆடவர் ட்ராப் பிரிவில் பிரித்விராஜ் தொண்டைமான், மகளிர் ட்ராப் பிரிவில் ராஜேஸ்வரி குமாரி, ஸ்ரேயஸி சிங் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
இவர்கள் மட்டுமின்றி, சந்தீப் சிங், அர்ஜுன் பபுதா, சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா, ஸ்வப்னில் குசலே, அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து, ஆனந்த்ஜீத் சிங் நருகா, ரமிதா ஜிண்டால், ரிதம் சங்வான், அஞ்சும் மவுட்கில், மஹேஸ்வரி சவுகான், ரைசா டிலோன் என பலம் வாய்ந்த படையுடன் இந்திய அணி களமிறங்குகிறது.
அதனால், இந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரில், துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய அணி பல பதக்கங்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நேரடி ஒளிபரப்பு… ஆற்றுக்குள் விழுந்த செய்தியாளர்: வைரலாகும் வீடியோ!
இந்தியன் 2 : மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… ரோகித் சர்மா முக்கிய தகவல்!
ஹெல்த் டிப்ஸ்: எடையைக் குறைக்க உதவும் இரவு நேர உணவு முறை!
வேலைவாய்ப்பு : நீதிமன்றங்களில் பணி!
பியூட்டி டிப்ஸ்: இளநரையைப் போக்க உதவும் பாட்டி வைத்தியம்!