இந்தியா தோல்வி.. முதன்முறையாக ஆசிய கோப்பை வென்ற இலங்கை மகளிர் அணி

Published On:

| By christopher

Women’s Asia Cup 2024: இலங்கையில் நடைபெறும் 2024 மகளிர் ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டத்தில், இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின.

அனுபவம் மிக்க சமாரி அத்தப்பத்து தலைமையிலான இலங்கை அணிக்கு எதிராக, முதலில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ADVERTISEMENT

இதை தொடர்ந்து, ஒருபுறத்தில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷபாலி வர்மா 16 (19) ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மறுபுறத்தில் ஸ்மிருதி மந்தனா 60 (47) ரன்கள் குவித்தார்.

ADVERTISEMENT

அடுத்து வந்த உமா சேத்ரி 9 (7) ரன்களுக்கும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 11 (11) ரன்களுக்கும் ஃபெவிலியன் திரும்பினர். பின் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 (16) ரன்களுக்கும், ரிச்சா கோஷ் 30 (14) ரன்களுக்கும் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து, 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் விஷ்மி குணரத்னே 1 (3) ரன்னுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

ADVERTISEMENT

ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த சமாரி அத்தப்பத்து மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரமா, இந்திய வீராங்கனைகளுக்கு ஒரு கடினமான நேரத்தை வழங்கினர். 2வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 87 ரன்கள் சேர்க்க, அரைசதம் கடந்த அத்தப்பத்து 61 (43) ரன்களுக்கு வெளியேறினார்.

அடுத்து வந்த கவிஷா தில்ஹாரி அதிரடியாக 30 (16) ரன்கள் விளாச, இலங்கை அணி 19வது ஓவரிலேயே இலக்கை எட்டியது. ஹர்ஷிதா சமரவிக்ரமா 69 (51) ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம், 6 முறை மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இலங்கை மகளிர் அணி, முதன்முறையாக அந்த கோப்பையை கைப்பற்றியுள்ளது.

தனது சிறப்பான பேட்டிங்கிற்காக இந்த இறுதிப்போட்டிக்கான ஆட்ட நாயகி விருதை ஹர்ஷிதா சமரவிக்ரமா பெற்றார்.

இந்த தொடர் முழுவதுமே இலங்கை அணிக்காக ஒரு நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி, 5 போட்டிகளில் 304 ரன்கள் குவித்த சமாரி அத்தப்பத்து ‘தொடர் நாயகி’ விருதை வென்றார். இந்த தொடரில் விளையாடிய 5 போட்டிகளில், 3 ஆட்டங்களில் அவர் ஆட்ட நாயகி விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

அவரிடம் போட்டி முடிந்த பின் ஓய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “50 ஓவர் உலகக்கோப்பை வரை விளையாடுவேன் என நம்புகிறேன்”, என சமாரி அத்தப்பத்து பதில் அளித்துள்ளார்.

ஆசிய கோப்பையை வென்ற இலங்கை மகளிர் அணிக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 1,00,000 அமெரிக்க டாலர் பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: உடற்பயிற்சிகள் மூலம் மூளையை வலுப்படுத்தலாம்… எப்படி?

பியூட்டி டிப்ஸ்: உடல்நலக் குறைவுக்குப் பிறகு அதிகமான முடி உதிர்வு… தீர்வு என்ன?

டாப் 10 நியூஸ் : பொதுப் பிரிவு கலந்தாய்வு முதல் வாழை 2வது பாடல் ரிலீஸ் வரை!

நிதிப்பகிர்வு பிரச்சினைகள்: கூட்டாட்சிக் குடியரசு என்பது கூட்டுக்குடும்பமா? குடியிருப்பு வளாகமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share