India vs Afghanistan India won by 6 wickets
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. கடும் குளிருக்கு நடுவில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முன்னதாக இந்த போட்டியில், இந்தியாவுக்காக ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்திருந்த நிலையில், வலது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் இருந்து விலகினார்.
டாஸிற்கு பிறகு, ஆப்கான் அணிக்காக துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் அந்த அணிக்கு சிறப்பான துவக்கத்தை வழங்கினர். இந்த ஜோடி 8 ஓவர்களில் 50 ரன்கள் சேர்த்திருந்தபோது, குர்பாஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரிலேயே இப்ராஹிம் சத்ரான் 25 ரன்களுக்கு வெளியேற, புதிதாக களமிறங்கிய ரஹ்மத் ஷா 3 ரன்களுக்கு வந்த வேகத்திலேயே ஃபெவிலியன் திரும்பினார். 10 ஓவர்களில் 57 ரன்களை மட்டுமே சேர்த்து மிக மோசமான நிலையில் இருந்த ஆப்கான் அணிக்காக, முகமது நபி அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 42 ரன்கள் விளாச, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்களை சேர்த்தது. இந்தியாவுக்காக முகேஷ் குமார் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.
159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியாவுக்கு, கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ரன்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஆனால், மறுமுனையில் சுப்மன் கில் மற்றும் திலக் வர்மா முறையே 22 ரன்கள் மற்றும் 26 ரன்கள் சேர்த்து வெளியேறினர்.
பின் களமிறங்கிய சிவம் துபே பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டு அதிரடியாக ரன்களை குவிக்க, இந்திய அணி 17.3 ஓவர்களிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது. துபே கடைசி வரை அட்டமிழக்காமல் 40 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து, ஜிதேஷ் சர்மா 31 ரன்களும், ரிங்கு சிங் 16 ரங்களும் விளாசினர்.

பேட்டிங்கில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி என 40 பந்துகளில் 60 ரன்கள் குவித்து, பந்துவீச்சில் 2 ஓவர்களில் வெறும் 9 ரன்களே வழங்கி 1 விக்கெட்டை கைப்பற்றிய சிவம் துபே இந்த போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக, இந்த போட்டியில் இந்திய அணியை வழிநடத்தியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அணியை வழிநடத்தும் மிக வயதான கேப்டன் என்ற பெருமையை பெற்ற ரோகித் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் மிக அதிக வயதில் (36 ஆண்டுகள் & 256 நாட்கள்) வெற்றியை கைப்பற்றிய கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஈஸி சிக்கன் பிரியாணி!
டிஜிட்டல் திண்ணை: பாஜகவின் சாதி காம்போ… அதுக்கும் மேல, சபரீசன் ஆக்ஷன் பிளான்!
India vs Afghanistan India won by 6 wickets
